பொது தலைமையற்ற கூட்டமைப்பும், தலைமைஉறுப்பினர்கள் சிலரின் சுயநலமுமே இன்றைய தமிழர்களின் தலையிடி என்ற கருத்து கூட்டமைப்பு உறுப்பினர்களின் கருத்தாக உள்ளது.
தமிழ்தேசிய கூட்டமைப்பு மக்களால் தெரிவு செய்யப்பட்டு வருடங்கள் ஆகியும் உருப்படியான எதையும் செய்ய முடியவில்லை என்பதற்கு அரசு மட்டுமல்ல காரணம், தேசிய கூட்டடைப்பினுள்ளே நிலவும் அமைதியற்ற ஸ்திரமற்ற தன்மையும், சமயோசித புத்தியற்ற, இதர தமிழ் அமைப்புக்களுடன் இணைந்து ஆலோசனைகள் பெறுவதை தவிர்த்து இயங்கும் செயற்பாடும் காரணமாக அமைகின்றது என தமிழ்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் உறுப்பினர்கள் கருத்து முன்வைக்கிறார்கள்.
இவற்றைவிட தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்ணணி உறுப்பினர்களின் தான்தோன்றித்தனமான முடிவுகளும் தமக்கு மட்டும் எல்லாம் புரியும் தெரியும் மற்றவர்கள் புலிகள் புலிகுணம் கொண்டவர்கள் என்ற தப்பான கணிப்புடன் கருத்துக்கைள கவனம் செலுத்தாது, கால அவகாசங்களை கருத்தில்கொள்ளாத நடவடிக்கைகளும் வட மாகாணசபையின் ஆரோக்கியமற்ற சபை நடவடிக்கைகளுக்கு காரணமாக அமைகின்றன என பல தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கருதுகின்றனர்.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் பிரதான கட்சிகளில் ஒன்றான தமிழரசுக்கட்சி தனது முடிவுகளுக்கு இதர கட்சிகள் இணங்கி நடக்க வேண்டும் என்று பிடிவாதமாக செயல்படுவதாகவும் தம்மால் எடுக்கப்படும் முடிவுகளே சரியானது என்றும், தமது முடிவுகளை எதிர்ப்பவர்களை தப்பானவர்கள், புலிகள், என புறம் தள்ளுவதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கருத்து கூறுகின்றனர்.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் அங்கமான தமிழரசுக்கட்சியின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளில் பல புலிகள் காலத்திலிருந்தே ஆரம்பித்துள்ளதாகவும், புலிகளினால் எடுக்கப்பட்ட பல முடிவுகளை தமிழர் சார்பில் எடுத்துச்செல்லப்பட வேண்டிய இடங்களுக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு எடுத்துச்செல்ல தவறியதும் ஒரு காரணமாக முள்ளிவாய்க்கால் நிகழ்வும் தமிழ் மக்களின் அழிவும் நடைபெற்றுள்ளதாகவும் கருத்துக்கள் வெளிவர ஆரம்பித்துள்ளது.
புலிகள் இந்தியாவுடனான உடன்பாடுகளை எட்டவே பல தடவைகள் முயற்ச்சித்ததும், இம்முடிவுகளை தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஊடாகவே இந்தியாவுக்கும் இதர ஐரோப்பிய நாடுகளுக்கும் எடுத்துச்செல்ல வேண்டியிருந்த காலத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவ கட்சியான தமிழரசு இவற்றை புறக்கணித்து நடந்துள்ளது. அன்று பல நாடுகள் புலிகளின் இறுதிக்காலங்களில் புலிகளினால் நேரடியாக தொடர்பு கொள்ள முடியாத நிலையிலிருந்த போது, பல நாடுகள் தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஊடாகவே புலிகளின் எதிர்பார்ப்பையும் உடன்பாடுகளையும் எதிர்கால அரசியல் இணக்கப்பாடுகளையும் பல நாடுகள் எதிர்பார்த்திருந்தன. புலிகளும் இவர்கள் ஊடாகவே தமது செய்திகளை இந்தியாவுக்கும் சர்வதேசத்திற்கும் வெளிப்படுத்த வேண்டியிருந்தன. அந்த சந்தர்ப்பங்களை தமிழரசுக்கட்சி தட்டிக்கழித்து புலிகளினுடனான தமது பழிவாங்கல்களையே முதன்மைப்படுத்தி, தமிழர்களின் அரசியல் தீர்வுகளுக்கான முன்னெடுப்புக்களை எடுத்துச்செல்லாது தவிர்த்திருந்தனர் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
அன்று தமிழரசுக்கட்சி புலிகள் அழிக்கப்படல் வேண்டும் என்பதை மட்டும் முதன்மைப்படுத்தி புலிகளின் போராட்ட பலத்தில் அரசியல் உரிமைகளை பெறத்தவறியுள்ளனர், தமிழரசுக்கட்சி தமிழர்களின் எதிர்கால அரசியல் பற்றிய விவேகம் அற்றவர்களாக இருந்துள்ளனர்.
தமிழ்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகித்த இதர கட்சிகள் தமது கடந்தகால ஆயத போராட்ட வரலாறு காரணமாகவும் பின்னர் புலிகளுடன் ஏற்ப்பட்டிருந்த இணக்கப்போக்கு காரணமாகவும் இதர தமிழ் கட்சிகளை அரசு புலிகள் என வர்ணித்தகாரணங்களாலும் வெளிநாட்டு சக்திகள் இவர்களிடம் தொடர்பு கொள்ள பின்னின்ற காலங்களில் தமிழரசு ஒன்றே இவற்றிக்கான முன்னெடுப்புக்களை செய்ய தவறி புலிகளை பழிவாங்கும் எண்ணத்துடனேயே அரசியலை நடாத்தினர்கள் எனவும் தமிழ்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் கருத்து கொண்டுள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் இப்படியான அரசியல் பின்னடைவான நடவடிக்கைகள் இன்றும் தொடர்கின்றன இதன்காரணமாக அண்மைக்காலமாக இந்தியா மிகவும் குழம்பிப் போயிருப்பது தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கு இன்றும் புரியாத ஒன்றாக இருப்பதாகவே கருத்து தெரிவிப்பவரின் பின்கருத்தாக இருக்கின்றது.
மேற்கூறப்பட்ட கருத்துக்கள் பலவற்றிக்கு காரணமாக தமிழ் தேசிய கூட்டடைப்பின் தலைமைத்துவத்தில் அங்கம் வகிக்கும் தலைவர்கள் சிலரின் வயோதிபம் புரிந்து கொள்ள, சிந்திக்க தவறும் காரணமாக அமைக்கின்றதா? என்ற எண்ணமும் எழாமல் இல்லை.
அண்மைக்காலமாக அவதானிக்கப்படும் வட மாகாண சபையின் நடவடிக்கைகளில் நியதிச்சட்டவாக்கல் பற்றிய விடயத்தில் இதர மாகாணங்கள் பெறப்பட்ட பாணியில் சட்டவாக்கங்களை அணுகாமல் இவற்றை இழுத்தடித்து காலத்தை தொலைத்து இருக்கிறார்கள், இது நீதியரசர் விக்கினேஸ்வரனினதும் சம்பந்தனினதும் ஆழுமைகளில் சந்தேகத்தை உண்டு பண்ணயியுள்ளது, இவர்கள் சிலவிடயங்களை சாதாரணமாக கையாள வேண்டிய இடத்தில் அதாவது இதர மாகாணசபைகள் நியதிச்சட்ட விடயத்தில் இயங்கியது போல் இல்லாமல் சட்ட நிபுணர் குழு என்று அது இது பேசி ஏன் காலத்தை இழுத்தடித்தார்கள் , இழுத்தடிக்கிறார்கள் என்று புரியவில்லை.
பல விடயங்களில் ஒரேமாதிரியான செயற்பாட்டையும் அணுகுமுறைகளையும் கையாளுவதனால் அரசிடமிருந்து பெற வேண்டிய பல விடயங்களை வட மாகாணசபை பெற தவறியுள்ளது என்றும் இவைகளும் வட மாகாண சபையின் இயங்கு தளத்திற்க்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் அறியப்படுகின்றது.
வட மாகாணசபை செயற்பாடுகளுக்கு, ஆளுனர் ஊடாகவும் இதர அரசின் இயந்திரங்கள் ஊடாகவும் அரசினால் பல முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றது என்பது, வடமாகாணசபை மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களும் உடன்படும் விடயங்கள் என்பதை குறிப்பிடும் அதேவேளை தமிழ்தேசிய கூட்டமைப்பின் சில தலைமை உறுப்பினர்கள் தான்தோன்றித்தனமாக இயங்கி பல காலங்களை தொலைக்கின்றது அல்லது இதர உறுப்பினர்களின் பல முன்னெடுப்புக்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றது என்பதிலும் பல உண்மைகள் இருக்கின்றது.
உதாரணமாக தமது பாராளுமன்ற ஆசனங்களுக்கான வாக்காளர்களை தக்கவைத்தல் ஒன்றுக்காக தேர்தல் காலங்களில் முன்னெடுக்கும் அரச விரோத அணுகுமுறையை சாதாரண தேர்தல் அற்ற காலங்களிலும் முன்னெடுத்து அரசுடன் ஆளுனருடன் இணைந்து செயற்ப்படும் சந்தர்ப்பங்களை இழக்கிறார்கள் என்றும் எதற்கெடுத்தாலும் அரசு விடாது, அரசு தடுக்கும் என்பதை மட்டும் தாரக மந்திரமாக கூறிக்கொண்டு செயற்ப்படக் கூடிய விடயங்களில் செயற்ப்படாது இருப்பதாகவே உணர்கின்றோம் என தெரிவிக்கிறார்கள்.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவ உறுப்பினர்கள் அரச தலைவர் மகிந்தாவை தமது சொந்த தேவைகளுக்கும் தமக்கு ஒதுக்கப்படும் பணத்தை தான் விரும்பிய ஒரு விடயத்துக்கு மட்டும் செலவு செய்யவும் அனுமதி கேட்டு அரசுடன் கூட்டுறவு வைக்கும் அதேவேளை மாகாணசபை என்று வரும்போது அரசு முட்டுக்கட்டை போடுகின்றது என்ற கருத்தை மட்டும் முன்வைத்து மாகாண சபையின் முற்போக்கை பின்னடிப்பதில் முன்வைப்பது பலத்த குழப்பங்களையும் சந்தேகங்களையும் எழுப்புகின்றது.
தமிழ்பேசும் மக்களின் அரசியல் தீர்வு விடயம் என்பதில் 13வது திருத்த சட்டமூலம் அடிப்படையானது மட்டுமேயன்றி அது அரசியல் தீர்வு அல்ல, வடகிழக்கு இணைந்த தமிழர் பிரதேச சுயாட்சி என்பது தமிழ் தலைமைகளால் எப்போதோ எடுக்கப்பட்ட முடிவும், அதற்கான போராட்டங்கள், அரசியல் நகர்வுகள், இலங்கை அரசினால் இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நீதி என்பதில் தமிழ்மக்கள் இம்மியும் விலகாத நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைமை இவற்றினை மறந்து விட்டதா? இவற்றிக்கான அரசியல் நகர்வுகள் என்ன? அவற்றுக்கான உள்ளக போராட்ட நடவடிக்கைகள் என்ன? என்பதில் அக்கறை குறைந்து அரசியல் தீர்வு பற்றிய கருத்தை மேலும் பல நாடுகளுக்கு எடுத்துச்செல்ல தவறுகின்றனர் என உணர ஆரம்பித்துள்ளனர்.
அண்மைக்காலமாக இந்திய உப கண்டத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் இலங்கை பற்றிய வெளியுலகின் அவதானங்களில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் கருத்துக்கள் என்ன? நடவடிக்கைகள் என்ன? என்பது தமிழ்மக்கள் அறியாத ஒன்றாகவே இருக்கின்றது, இது பற்றி தேசிய கூட்டமைப்பு ஒரு பொதுமுடிவுக்கு வர வேண்டும் இது பற்றி கூட்டாக இணைந்து பேச வேண்டும் இணைந்து பேசுவதற்காக சந்தரப்பங்களை தலைமையில் இருப்பவர்கள் ஏற்ப்படுத்துவதில்லை ஜனநாயக விழுமியங்களை காணமுடியாதுள்ளது.
தமிழ்தேசிய கூட்மைப்பை உடனடியாக பதிவு செய்து ஒன்றுபட்ட பொதுதலைமையை உருவாக்கி தமிழ் மக்களின் பொதுவான ஒரு கட்சியாக மக்களை இணைத்து பல புத்திஜீவிகளை உள்வாங்கி இயங்க வேண்டும்.ஜனநாயக பண்புகளை மக்கள் மத்தியில் நடைமுறைப்படுத்தி மக்களை வழிகாட்டும் முன்மாதிரி அமைப்பாக வெளிவர வேண்டும் என்பதே தமிழ்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் கருத்தாக இருக்கின்றது.
அடுத்த தேர்தலிலும் தமிழ் மக்கள் தமக்கே வாக்களிப்பார்கள் என்ற அசட்டுத் தைரியத்தில் இன்னொரு வகையில் இதனைச் சொல்லுவதானால் – தமக்குரிய கடமைகளை முழுமையாகச் செய்யாதுவிடினும் கூட தாம் வென்றுவிடுவோம் என்ற துணிச்சலோடு காலத்தை கடத்திவிட்டு போய்விடக் கூடாது என்று ஆலோசனையை தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு முன்வைக்கிறார்கள்.
பண்டா - செல்வா ஒப்பந்தம், சிறீமா - சாஸ்திரி ஒப்பந்தம், என்பது போன்றதொரு சம்பந்தர் - மகிந்தா ஒப்பந்தம், என்ற சுய நலத்துடன் சம்பந்தர் காத்திருக்கின்றாரா? தமிழ் மக்கள் பதிலளிப்பார்கள்.