Search This Blog

Showing posts with label Eelam. Show all posts
Showing posts with label Eelam. Show all posts

Friday, 16 May 2014

ஈழப்போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்களிப்பும் இயக்கங்களின் தவறுகளும் புலிகளின் வரலாற்றுத் துரோகமும் பின்னிப்பிணைந்தே உள்ளது.

T Sothilingam |
ஈழப்போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்களிப்பும் இயக்கங்களின் தவறுகளும் புலிகளின் வரலாற்றுத் துரோகமும் பின்னிப்பிணைந்தே உள்ளது.

தமிழ் மக்களின் போராட்ட ஆரம்பகாலங்களின் தொடக்கப்புள்ளியில் சோனகர்கள் இருக்கவில்லை என்பது உண்மைதான் ஆனால் இந்தக்காலங்களிலே தமிழ் மக்களுக்கே தெரியாது இந்த தமிழ் போராளிகள் போராடுகிறார்கள் என்று. அன்று தமிழ் மக்களுக்கு குறிப்பாக உதவி தேவைப்பட்ட மலையக மக்களுக்கு உதவி செய்யவே இந்த இளைஞர்கள் பண்ணைகள் அமைத்தும் குடியிருப்புக்கள் அமைத்தும் உதவிகள் செய்வதோடு தமிழரின் சமாதான வாழ்விற்க்கு இடையூறாக அரசும் அதன் பொலிஸ் படைகளும் இருப்பதாகவே பல இளைஞர்கள் கருதினார்கள். இவற்றுக்கு எதிராக போராட வேண்டும் என்ற மனப்பான்மையும் இருந்தது. இக்காலங்களில் இந்த மனப்பக்குவம் 1958ல் தனிச்சிங்கள சட்டம் அதைதொடர்ந்து வந்த தமிழர்கள் மீதான காடைத்தனங்கள் தமிழர்கள் தெற்கிலிருந்து வடக்குக்கு கப்பலேற்றி அனுப்பதல் போன்ற சம்பவங்களே இலங்கை அரசின்மீது தமிழர்களுக்கு படிப்படியாக அவநம்பிக்கையும் அரசிடமிருந்து உருவான தமிழர் எதிர்ப்பும் ஒன்று சேரவே போராட்ட ஆரம்பகாரணங்களாகின தமிழர்கள் பல தடவைகள் வடக்குக்கு அடித்து அனுப்பப்படும்போது இவற்றில் பாதிக்கப்படவர்களும் இந்த பாதிப்புற்ற மக்களுக்கு உதவி செய்தவர்களும் போராட்ட தொடக்கப்புள்ளிகள் என்பதை இங்கு குறிப்பிடலாம். இதில் 1977ல் மலையகத்தலிருந்து துரத்தப்பட்ட தமிழர்க்கு உதவி செய்தவர்களில் பலர் இன்று உயிருடன் இல்லை. அதில் சந்ததியார் சிறிசபா உயிருடன் உள்ள ஈஎன்டிஎல்எப் ராஜன் (பரந்தன் ராஜன்) முக்கியமானவர்கள். இவர்களுக்கு பின்னாலும் சமாந்தரமாகவும் பிரபாகரன் உமா மகேஸ்வரன் மற்றும் குட்டிமணி தங்கத்தரை போன்றோர்கள் எனவும் தொடர்ந்தனர்.
இந்தக்காலங்களில் தமிழர்களே இவர்களில் பலரை பயங்கரவாதிகள் என்றே நம்பியிருந்த காலமும் உண்டு. இக்காலத்தில் (1977 -1979)முஸ்லீம்கள் இந்த போராட்டம் பற்றி நேரடி பங்கு பற்றுதல் இல்லாமலும் (எமக்கு தெரியாத பல பின்புல உதவிகள் இருந்திருக்கலாம் அவர்களே இவர்களுக்கு உதவிசெய்வது தெரியாமலே உதவிகள் செய்தும் இருக்கலாம்) ஆனால் 1980களில் முஸ்லீம்கள் தமிழ்ர்போராட்ட அமைப்புக்களில் உள்வாங்கப்பட்டு விட்டனர். இவர்களில் பலர் இன்றும் உயிருடன் உள்ளனர். அன்று அரசின் பாதிப்பில் நேரடியாக பாதிக்கப்பட்ட முஸ்லீம்களே இந்த போராட்ட அமைப்புக்களடன் இணைந்து கொண்டிருந்தனர். முக்கியமாக ஈழமாணவர் பொது மன்றத்திலும் (ஈபிஆர்எல்எப்) ஈரோஸ்லும் புளொட்டிலும் குறிப்பிடத்தக்க முஸ்லிம் உறுப்பினர்கள் பலர் இருந்துள்ளனர். இந்த முஸ்லீம்களில் பலர் இந்த அமைப்புக்களின் பல முக்கிய பொறுப்புக்களிலும் தலைமை பொறுப்புக்களிலும் இருந்துள்ளனராகும் இன்றும் உதாரணங்களாக இருக்கும் மே18 இயக்க ஜான் மாஸ்டர், மற்றும் சலீம் மூதூர்/சம்பூர் போன்றோர் புளொட்டின் மத்திய கமிட்டி உறுப்பினர்களாவர். ஈழமாணவர் பொது மன்றத்தில் பல முஸ்லீம் இளைஞர்கள் அங்கம் வகித்தனர். அதைவிட முஸ்லீம்களுக்கான பொது அமைப்பை உருவாக்குவது பற்றி பேசப்பட்டு அமைப்பும் உருவாக்கப்பட்டது இப்படியான ஈழமாணவர் பொதுமன்றத்தில் இணைந்தவர்கள் பின்னாளில் ஈபிஆர்எல்எப ன் முக்கிய இராணுவத் தளபதிகளாகவும் இருந்துள்ளனர்.
இன்றும் ஈரோஸ்ன் உறுப்பினர் என்று கூறும் முஸ்லீம்கள் இன்றும் பெருமையுடன் புளொட்டில் தனது பங்களிப்பு இருந்தது என்று கூறும் முஸ்லீம்கள் இன்றும் தமது ஈபிஆர்எல்எப பங்களிப்புக்கள் பற்றி கூறும் முஸ்லீம் நண்பர்கள் நிறையவே உள்ளனர். இன்றும் தமிழ்பேசும் மக்கள் என்று கூறும் முஸ்லிம்கள் சோனகர்கள் உள்ளனர்.
குறிப்பாக யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, அக்கரைப்பற்று, சம்பூர், மட்டக்களப்பு, அம்பாறை, காரைதீவு போன்ற இடங்களிலிருந்து முஸ்லீம் இளைஞர்கள் பலர் ஈழப்போராட்ட அமைப்புக்களில் பங்கு பற்றியிருந்ததை யாராலும் மறக்கமுடியாதது மதங்கள் இனங்கள் என்ற அடையாளங்களை கடந்து இரு இன ஜக்கியத்தின் வெளிப்பாடாக, ஒரு மொழிபேசும் மக்கள் என்ற உணர்வு இணைவுகள் இருந்ததும் இன்று பலருக்கும் தெரியாத ஒன்றாகவே உள்ளது.
இன, மத, மொழி வேறுபாடுகளுக்கப்பால் மக்களுக்கான அரசியல் சமூக பொருளாதார தீர்வை முன்வைக்கும் பல சமூக விஞ்ஞானிகளும் இன்றும் தமது ஆளுமைகளை சமூகத்தில் நிறுத்துகின்றனர் இவர்களில் முஸ்லீம் சமூகத்திலிருந்து எழுந்த பலர் எமக்கு முன்னோடிகளாக உள்ளனர் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
ஈபிஆர்எல்எப் ன் முக்கிய இராணுவத்தளபதிகளாக கிழக்க மாகாண முஸ்லீம்களும் இருந்துள்ளனர். இதேபோன்று கிழக்கு மாகாணத்தில் ஈபிஆர்எல்எப் ல் இருந்த இதர தமிழ் இளைஞர்களின் தப்பான கருத்துக்களால் ஈபிஆர்எல்எப் ன் அமைப்பினுள்ளே முஸ்லீம்களுக்கும் தமிழ் இளைஞர்களுக்கும் இடையே முரண்பாடுகள் வளர்ந்து முஸ்லீம் இளைஞர்கள் பயிற்ச்சிக்காக அனுப்பப்படும் தருணத்தில் பயிற்சிக்காக அனுப்பப்படாமல் திருப்பி அனுப்பிய சம்பவங்களும் உண்டு. இப்படியான சம்பவங்களை பின்னர் ஈபிஆர்எல்எப் ல் இருந்த தோழர் டக்ளஸ் தேவானந்தா கையாண்டு முரண்பாடுகளை தீர்த்து வைத்துள்ள சம்பவங்களும் உண்டு என இஸ்லாமிய நண்பர்கள் தெரிவித்தனர்.
இப்படியான சம்பவமே தமிழ் இளைஞர்களுக்கும் முஸ்லீம் இளைஞர்களுக்கும் இடையிலான பிளவு ஏற்பட காரணமாகியதாக நான் கருதுகிறேன் இன்று வரையில் எனக்கு தெரிந்த தகவல்களின்படி இதை கூறமுடியும். இதுவே பிற்காலங்களில் கிழக்கில் பல்வேறு சம்பவங்களையும் உருவாக்கி ஈபிஆர்எல்எப் பல மோதல் சம்பவங்களையும் சந்தித்திருந்தது. இப்படியான சந்தர்ப்பங்களை இலங்கை அரசு மிகவும் சந்தர்ப்பவசமாக பாவித்து தமிழர்களை முஸ்லீம் மக்களிடமிருந்து பிரித்தாளவும் காரணமாகியது.
முஸ்லீம் தமிழ் உறவுகள் பிளவுக்கு காரணமாக இருந்தவைகள் எல்லாம் இருதரப்பினர்கள் மீதும் இருந்த காழ்ப்புணர்வும், தீர்த்து வைக்கப்படாத காணி நிலப்பரப்பு பிரச்சினைகளும், இருதரப்பிலும் இருந்த வியாபாரிகள் தமக்கென வர இருந்த வருவாயில் யார் கை வைக்கிறார்கள் என்பதிலுமாகும். இப்படியாக பல தரப்பட்ட வியாபார போட்டிகள் இனக் குரோதத்தை வளர்த்து விட்டிருந்ததும், பின்னர் இந்த வியாபாரிகள் இயக்கங்களை ஆதரவளித்தும், இந்த வியாபாரிகளின் பிள்ளைகள் உறவினர்கள் இயக்கங்களில் முக்கிய பொறுப்புக்களுக்கு வந்ததும் தமது பெற்றோரின் வியாபாரப் போட்டிகளை இனக் குரோதமாக்கினர் என்பது தெளிவாக தெரிந்த ஒன்று
இதனிடையே புலிகளினால் மற்றய இயக்கத்தவர்களை அழித் தொழிக்கும் நடத்தை, தமிழர்களின் போராட்டத்தின் மீது முஸ்லிம்களுளக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மதிப்பும் கரிசனையும் இல்லாமல்போய் தமிழ் இயக்கங்களுக்கு ஆதரவளிக்கும் முஸ்லீம் இளைஞர்களை முஸ்லீம் மக்களும் கண்டிக்க/வெறுக்க ஆரம்பித்தனர் தமிழர்களையே புலிகள் இப்படி கொலை செய்தால் முஸ்லீம்களை என்தான் செய்ய மாட்டார்கள் என்ற எண்ணப்பாடு உருலுவெடுத்துவிட்டது
போராட்டம் என்பது சாதி மதபேதமற்ற புதிய சமுதாயத்தை உருவாக்குவது என்பதை மறந்து தமது சொந்த தனிமனித மனக்குரோத விளையாட்டாக்கியதில் இருந்து இந்த முஸ்லீம் தமிழ் உறவு விரிசல்கள் ஆரம்பிக்கின்றது என்றே நான் நினைக்கிறேன்.
ஏற்கனவே மக்களை ,மக்களின் நிலத்துடனான உறவுகளை, எடுத்துரைத்து இனங்களிடையே ஜக்கியப்படுத்தும் பக்குவத்தை வளர்க்கத் தெரியாத தலைமைகளின் காலங்களிலிருந்தே இந்த தலைமைகளின் குரோதத்தை தமது குரோதமாக்கிக் கொண்டவர்களின் போக்கில் பகைமைகள் இருந்ததையும் இங்கே நாம் ஏற்றுக்கொண்டு இப்படியாக உருவான இன விரிசல்களை அன்றைய தலைவர்கள் இயக்க தலைமைகள் சரியாக கையாளத்தவறியும் மாறாக போக்கிரித்தனமாக கையாண்டும் இனவிரிசல்களை உருவாக்கினர்.
பல முஸ்லீம் இளைஞர்கள் தமிழ் (சைவப்) பெயர்களுடன் இயக்கங்களில் இணைந்திருந்தனர் பல தமிழ் இளைஞர்கள் முஸ்லீம் பெயருடன் இயக்கங்களில் இருந்துள்ளது இனங்களுக்கிடையிலான உறவுகளின் அவசியத்தையும் ஜக்கியத்தையும் ஒருமைப்பாட்டையும் பேணும், பேண வேண்டும் என்ற அக்கறையின் வெளிப்பாடாகவே கருத வேண்டும். இந்த ஜக்கிய உறவுகளில் பல காதல் திருமணங்களையும் உருவாக்கியிருந்தது. இக்கல்யாணங்களில் இரு மதவெறியர்களும் தம் எதிர்ப்பைக் காட்டிய சம்பவங்களும் உண்டு
போராட்ட தலைமைகளும் தத்துவார்த்த நடைமுறைகளும் எமக்கிடையேயான பிரதேச வேறுபாடுகளும் (தமிழர்கள் தமக்கிடையே வடக்கு கிழக்கு என்று சண்டை என்றால் முஸ்லீம்கள் மீது எப்டியான உணர்வினை வைத்திருந்திருப்பார்கள் என்பது எதிர்பார்க்கக்கூடியதே) போராட்டத்தை சீர்குலைத்ததும் தமிழ் முஸ்லீம் உறவுகளை சீர்குலைத்தும் உள்ளது.
இப்டியாக குழம்பியிருந்த முஸ்லீம் தமிழ் இன குழப்பங்களை இந்திய இராணுவத்தின் சில பிரிவினரும் தமக்கு சாதகமாக பயன்படுத்தி தமது இனக்குரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். குறிப்பாக சீக்கிய இந்திய இராணுவத்தினர் முஸ்லிம்கள் மீது வன்முறைப்பிரயோகத்தில் ஈடுபட்டும்
(தமிழ் இளைஞர்கள் இந்த இந்திய முகாம்களில் புலிகளிடமிருந்து தம்மை பாதுகாக்க இருந்த காலம்) இதில் பல தமிழ் மக்கள் மீது பழிசுமத்தப்பட்டும் தமிழ் இளைஞர்களால் முஸ்லீம்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் இருந்துள்ளது இவை பின்னர் இந்திய இராணுவம் வெளியேறிய பின்னர் முஸ்லீம் இளைஞர்கள் திரும்ப பழிவாங்கும் நடவடிக்கைகளை இலங்கை அரசுடன் சேர்ந்து நடாத்தியிருந்தனர்.
இதில் இலங்கை அரசு தம்மை தமிழர்க்கு எதிராக நடாத்துவதை அறிந்த கொண்ட பல முஸ்லீம் இளைஞர்கள் பிரதேசங்களை விட்டு வெளியேறி தப்பித்த வரலாறுகளும் உண்டு. இப்படியான நடவடிக்கைகளில் ருசி கண்ட இராணுவம் தனக்கு கிடைத்த முஸ்லீம் காடையர்களை வேலைக்கு அமர்த்தி புலிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் தமிழர்கள் மீதான காடைத்தனங்களை செய்திருந்தனர். இப்படியான பல செயற்பாடுகளில் சொத்தி சுலைமான் குறிப்பிடத்தக்கவர் என்று பல முஸ்லீம் நண்பர்கள் கூறுவர் ஆனால் இவைகள் யாவும் முஸ்லீம்களினால் தமிழர் மீதான தாக்குதல்களாயின என்று கவலைப்படும் முஸ்லீம்கள் அன்றும் இன்றும் கருத்து கூறுகின்றனர் வைத்துள்ளனர்.
போராட்டம் தமிழ் பேசும் மக்களை ஒரு புதிய சிந்தனை திறன் கொண்ட சமூகத்தை உருவாக்க முற்ப்பட்டதும் அதில் தமிழ் முஸ்லீம் மலையக சிங்கள மக்களும் ஈழப்போராட்டத்தில் பங்குற்றியிருந்தனர் என்பது வெளிப்படையானது யாராலும் மறுக்கமுடியாத ஒன்றாகும் இவற்றின் உதாரணங்கள் ஆதாரங்களாக பல முஸ்லீம் மலையக சிங்கள மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இவையாவற்றிக்கும் பின்பு புலிகளுடன் இணைந்து இயங்கிய பல தொகையான முஸ்லீம் இளைஞர்கள் கிழக்கு மாகாணத்தவர்களேயாகும்
புலிகளுக்கு வியாபார ரீதியிலும் புலிகளின் தொடர்பு சாதங்களாகவும் முஸ்லீம்களின் பங்களிப்பு கிழக்குமாகாணத்தில் இருந்துள்ளதும் இதன்காரணமாக பல முஸ்லீம்கள் இன்றும் சிறைகளிலும் நாட்டைவிட்டு தப்பியோடியும் உள்ளனர். பின்னாளில் புலிகளின் போராட்ட பலமே கிழக்கு மாகாணமேயாகும் இந்தக்காலங்களில் அரசின் நடவடிக்கைகள், சர்வதேச ஆலோசனைகள், கிழக்கு மாகாணத்தில் பல இனக்குரோத சம்பவங்களை தமிழர்க்கு எதிராகவும், முஸ்லீம்களுக்கு எதிராகவும் தூண்டியிருந்ததும் இதன் காரணமாக புலிகள் இயக்கத்தவர்களும் தமது சொந்த புத்தியில் செயற்படாது மீண்டும் முஸ்லீம்களை எதிரியாக்கினர், கிழக்கில் காத்தான்குடி பள்ளிவாசல் கொலைகளும் வடக்கில் முஸ்லிம்களின் வெளியேற்றமும் இதற்கு உரமூட்டின.
புலிகளுக்கு எதிராக போராடிய மற்றைய இயக்கத்தவர்களுக்கு உதவிகள் பல புரிந்த முஸ்லிம்களின் பங்களிப்புக்கள் குறிப்பிடப்படக்கூடியது உதாரணமாக ரெலோவின் மீள்வருகைக்கு முஸ்லீம்களின் பல உதவிகள் பெறப்பட்டுள்ளது, தேனீர்க்கடை சோனகர் பங்கு முக்கியமானதாக குறிப்பிடப்படுவது புலிகளுக்கு எதிராக ரெலோ வருவதை தெரிந்தும் தனது உயிருக்கு ஆபத்து என தெரிந்தும் இலங்கை அரசுக்கு எதிராகவும் ரெலோவினர்க்கு உதவி செய்த சோனகர் போற்றத்தக்கவர்.
இப்படி சோனகரின் (முஸ்லீம்களின்) போராட்ட ஆதரவு பற்றியும் பங்களிப்புக்கள் பற்றியும் எழுத வேண்டியுள்ளது, பலரும் தமது அனுபவங்களை. முஸ்லீம்களின் போராட்ட ஆதரவுகளின் அனுபவத்தையும் இங்கு பதிவு செய்தல் நல்லது .
வேற்றுமைகளை புரியவைத்து இனங்களை ஒற்றுமைப்படுத்தி புதிய சமுதாயத்தை புதிய இனத்தை கட்டியெழுப்ப தவறிய ஈழப்போராட்ட தலைமை, போராட்ட வழிமுறை இன்றும் முழுமையாக விமர்சிக்கப்படவில்லை இந்த இனக்குரோத நடவடிக்கைகளின் காரணிகளை விமர்சிக்காமல் இனிமேல் இனங்களிடையே ஜக்கியத்தை வளர்க்க முடியுமா? என்ற கேள்வி எழாமலில்லை
இப்படி பல தரப்பினராலும் விடப்பட்ட தவறுகள் பிழைகளிலிருந்து தமிழ், முஸ்லீம் (சோனகரின்) மக்களின் உறவுகளை மீண்டும் கட்டியெழுப்பலாம் என்ற நம்பிக்கை இருதரப்பினருடனும் நிரம்பியுள்ளது.


Stairs