Search This Blog

Friday, 16 May 2014

ஒரு மன நோயாளியை அடித்துக் கொல்லும் இலங்கைப் பொலீஸின் நிறுவனமயப்பட்ட துஸ்பிரயோகம் : ரி சோதிலிங்கம்

November 3, 2009 ,
Category: சோதிலிங்கம் ரி, கட்டுரைகள்/ஆய்வுகள் 

 மனநோயாளியான இளைஞனை எவ்வித விசாரணைகளும் இன்றி அடித்துக் கொலை செய்த மோசமான வன்முறைச் சம்பவம் இலங்கையர் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. மேற்படி சம்பவம் காட்சிப் படிமங்களாகவும் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது. தாக்கியவர் இலங்கைப் பொலிசார் என்பதாலும் கொல்லப்பட்டவர் தமிழர் என்பதாலும் இது ஒரு இனவாத செயலாகவே தமிழர்களால் நோக்கப்படுகிறது. இலங்கையின் அரச இயந்திரங்களின் தொடரும் இனவாதப் போக்கு அவ்வாறான முடிவுக்கு தமிழ் மக்களைத் தள்ளியது தவிர்க்க முடியாதது. மேற்படி சம்பவம் தமிழன் என்பதற்காக நடத்தப்பட்டதோ இல்லையோ இவ்வாறான சம்பவங்களின் போது தமிழர்கள் பாதிக்கப்படும் இடத்து அவர்களுக்கு நியாயம் கிடைப்பதில்லை. இதுவே இலங்கை அரசு மீது நம்பிக்கை கொள்வதற்கு காலம் காலமாக தடையாக இருந்து வந்துள்ளது.

இலங்கை அரச இயந்திரங்களின் இனவாதப் போக்கு காரணமாகவே தமிழர் இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டதும் அதன் விளைவாகவே உள்நாட்டுப்போரும் உக்கிரமடைந்திருந்தது. இந்த உள்நாட்டுப்போரில் வெற்றியடைந்த அரசும் அதன் அரச இயந்திரங்களும் இனவாத தன்மையிலிருந்து தாம் விடுபட்டுள்ளதாகவும் தாம் இனவாத அரசு அல்ல என்ற கருத்துக்களை உலகெங்கும் பரப்பியும் உள்ளது. ஆனால் பம்பலப்பிட்டி கடற்பகுதியில் இடம்பெற்ற சம்பவம் அரசு சொல்வது ஒன்று செய்வது இன்னொன்று என்ற நிலையையே காட்டுகின்றது.

தற்போதைய அரசும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ‘ஆட்சிக்கு வந்ததும் தமிழர்க்கு அரசியல்த் தீர்வு’ என்றனர். பின்னர் ‘புலிகளை அழிக்கும் போதே அரசியல்த் தீர்வு’ என்றனர். ‘புலிகளை அழித்த பின்பு அரசியல்த் தீர்வு’ என்றனர். இன்று ‘ஜனாதிபதி தேர்தலின் பின்னரே அரசியல்த் தீர்வு’ என்று அறிக்கைகளை வெளியிடுகின்றனர். ஆக மொத்தத்தில் ஒரேவிதமாகவே தமிழர்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

‘தமிழ் மொழி, தமிழ் மக்கள் இவர்களது பிரச்சினைகளை தாம் அரசியல் ரீதியாக தீர்த்துக் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. பொலீஸ் இராணுவ நிர்வாகத்தில் தமிழ் அமுலாக்கல்’ என்றெல்லாம் சொல்கின்ற போதிலும் ஒக்ரோபர் 29ல் சிவகுமார் என்ற மலையகத்தைச் சேர்ந்த மனநோயாளியான இளைஞனுக்கு நிகழ்ந்த கொடுமை மனித நாகரிகத்திற்கு அப்பாற்பட்டது. நாட்டின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய பொலிஸார் எவ்வாறான நடைமுறையைக் கடைப்பிடிக்கின்றனர் என்பதை இச்சம்பவம் அம்பலப்படுத்தி உள்ளது. இது இலங்கைப் பொலீசாரில் எவ்வித மாற்றங்களும் அண்மைக் காலத்தில் ஏற்பட்டிருக்கவில்லை என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.

இன்பம், செல்வம் கொலை, தமிழர் விடுதலைக் கூட்டணி காரியாலய காவலாளி கொலையிலிருந்து கதிர்காம யாத்திரிகர்கள் மாணிக்க கங்கையில் தீர்த்தமாடும் போது நடைபெற்ற தாக்குதல்கள், தற்போது பட்டப்பகலில் பலர் முன்னிலையில் நிகழ்ந்த ஒரு மனநோயாளியான இளைஞனின் கொலை என்பவற்றிற்கு இலங்கை அரசும் அதன் பொலீஸ்படையுமே காரணமாகும். இந்தப் பொலீஸ்படை இன்று வரையில் தமது நடவடிக்கையில் மாற்றம் கொள்ளாதது மிக முக்கியமாக அவதானிக்கப்பட வேண்டியள்ளது.

நாட்டில் பொலீசார் தவறு செய்பவர்களையும் குற்றவாளிகளையும் அவர்கள்மீதுள்ள குற்றங்களை பதிவு செய்து தகுந்த ஆதாரங்களுடன் நீதிமன்றில் நிறுத்தப்பட்டே தண்டனை அளிக்கபடல் வேண்டும். இதற்காகவும் இதன் காரணமாகவும் நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பேணவுமே பொலீசார் இயங்குகின்றனர். ஆனால் இலங்கைப் பொலிசார் தங்களுக்குள்ள அதிகாரங்களைத் துஸ்பிரயோகம் செய்கின்ற போக்கும் இனவாதத் தன்மையும் பொலிஸ்படையில் ஸ்தாபனமயப்பட்டு உள்ளது. அதன் ஒரு சிறிய வெளிப்பாடே பம்பலப்பிட்டிச் சம்பவம்.

கதிர்காமத் தீர்த்தத்தின் போதும் இது போன்றே பொலிசார் தமது இடுப்புப் பட்டியாலும் பொல்லுகளாலும் ‘பறத்தெமிழு’ என்று சொல்லியே ஆற்றில் குளித்தவர்களுக்கு அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான பொலிஸ் படையில் தமிழ் மக்கள் மட்டுமல் சிங்கள மக்களுமே நம்பிக்கை கொள்ள முடியாது. தென்பகுதிகளில் கூட பொலிசாரின் அத்துமீறிய நடவடிக்கைகள் பற்றி சர்வதேச உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றனர். பொலீஸ் உத்தியோகத்தர்கள் நாளை தண்டனையாக வன்னிக்கு இடமாற்றம் பெற்றால் என்னவெல்லாம் செய்வார்கள். இதுபோன்ற செயல்களை வெளிக்கொணர எந்த ஊடகமும் இல்லாத நிலையை எப்படிப் பயன்படுத்துவர் என்பதையும் அவதானிக்க வேண்டும்.

‘ரோகண விஜயவீர கைது செய்யப்பட்ட போது அவரது மனைவி சித்திராங்கனியையும் பிள்ளைகளையும் வாழ அனுமதித்த இலங்கை அரச படைகள் சரணடைந்த பிரபாகரனையும் போராளிகளையும் கொன்றதை ஒருபுறம் தள்ளினாலும் பிரபாகரனின் மனைவி மதிவதனியையும் சிறுவன் பாலகிருஸ்ணனையும் கொலை செய்தது இவர்கள் தமிழர்கள் என்பதாலேயே!!’ என்று அமைச்சர் திஸ்ஸ விதாரணவிடம் ஒக்ரோபர் 17ல் ராவய பத்திரிகையாளர் கூறியது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதம் எந்த வழியில் வந்தாலும் தோற்கடிக்கப்பட வேண்டும். அது அரச பயங்கரவாதமாக இருந்தாலும் தோற்கடிக்கப்பட வேண்டும்.
._._._._._.
இளைஞன் கடலில் கொல்லப்பட்டதற்கு கண்டனம்: குடும்பத்திற்கு சட்ட உதவி வழங்க பிரதியமைச்சர் சிகாமணி முடிவு
கொஸ்லாந்தையைச் சேர்ந்த இளைஞர் பம்பலப்பிட்டி கடற் பகுதியில் தாக்கிக் கொல்லப்பட்ட சம்பவத்தை நீதி, சட்ட மறுசீரமைப்பு பிரதியமைச்சர் வீ. புத்திர சிகாமணி வன்மையாகக் கண்டித்துள்ளதோடு உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தவர்களுக்கு சட்ட உதவி வழங்கவும் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.

அதேநேரம், இந்தச் சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்துமாறு பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நிமல் மெதிவகவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக வும் பிரதியமைச்சர் புத்திரசிகாமணி கூறினார். கொஸ்லாந்தையைப் பிறப்பிடமாகவும் இரத்மலானையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவகுமார் என்ற 26 வயது நிரம்பிய இளைஞர் கடந்த 29ஆம் திகதி பம்பலப்பிட்டி கடற்பகுதியில் தாக்குதலுக்கு உள்ளாகி கடலில் மூழ்கி உயிரிழந்தார்.
இவர், ஓடிக்கொண்டிருந்த வாகனங்களுக்கும், ரயிலுக்கும் கல் எறிந்தார் என்ற குற்றத்துக்காக அவரைப் பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்த இருவர் மடக்கிப் பிடிக்க எத்தனித்துள்ளனர். அப்போது குறித்த இளைஞர் கடல் பகுதிக்கு ஓடிச்சென்றதுடன் மணலை அள்ளி அவர்கள் மீது எறிந்துள்ளார்.

அதன்போது அங்கு குழுமியிருந்த பொதுமக்கள் சிலர் கடற்கரையில் கிடந்த இரண்டு தடிகளை எடுத்து பாதுகாப்புத் தரப்பினர் பக்கமாக வீசித் தாக்குமாறு கூறியுள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அந்தத் தடிகளைப் பற்றிய பாதுகாப்புத் தரப்பினர் அந்த இளைஞனைத் துரத்தித் துரத்தித் தாக்கியதாகத் தகவல்கள் தெரிவித்தன.

தாக்க வேண்டாமென அந்த இளைஞன் கும்பிட்டு மன்றாடியும் அவனைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அந்த இளைஞன் நீரில் மூழ்கி மரணமாகியுள்ளார். இவரது சடலம் கொள்ளுப்பிட்டி பகுதியில் மீட்கப்பட் டுள்ளது.
இந்தச் சம்பவமும் மஸ்கெலியா முள்ளுகாமம் தோட்ட யுவதிகள் இருவரின் மர்ம மரணமும் மனிதாபிமானமற்ற படுகொலையாகத் தொடர்வதாகப் பிரதியமைச்சர் கவலை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மலையகத்திலிருந்து கொழும்புக்கு அல்லது பிற மாவட்டங்களுக்கு தொழிலுக்காக அல்லது வேறு காரணங்களுக்காக குடியேறுபவர்களின் பாதுகாப்பு அச்சமாகவே உள்ளது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் கைகட்டி வேடிக்கை பார்ப்பதோ அல்லது இச் சந்தர்ப்பத்தை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதோ இன்றி, வெறும் பேச்சில் மட்டும் தம் செயலை காட்டாது மலையக தலைமைகள் சமூக சிந்தனையுடன் செயல்பட வேண்டும்.

இதுபோன்ற வேதனைதரும் சம்பவங்கள் இனிமேலும் தொடராமல் இருப்பதற்கு அனைத்து மலையக கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் எனப் பிரதியமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதற்கான சட்ட நடவடிக்கைகளை தாம் எடுத்துள்ளதாகவும் எதிர்வரும் காலங்களில் உயர் அதிகாரிகளிடம் இது சம்பந்தமாக தாம் பேசவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உங்கள் கருத்து

This entry was posted on Wednesday, November 4th, 2009 at 3:59 am and is filed under
சோதிலிங்கம் ரி, கட்டுரைகள்/ஆய்வுகள். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
41 Comments so far
1.     மாயா on November 3, 2009 12:00 am
பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் பரிசோதகர் கைது.
மனநலம் பாதிப்படைந்த இளைஞன் ஒருவரை அடித்து துன்புறுத்தி நீரில் மூழ்கடித்த சம்பவத்துடன் தொடர்புபட்டிருந்த பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தை சேர்ந்த உதவி பொலிஸ் பரிசோதகர் விஜேந்திர வீரரத்தின என்பவரை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இவரை எதிர்வரும் 13ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புபட்டிருந்த பொலிஸ் கொஸ்தாபல் ஒருவர் பொலிஸில் சரணடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
குறிப்பிட்ட இளைஞனது மரணம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட மரண விசாரணை அதிகாரிகள், மேலதிக விசாரணைகளுக்காக உடலின் சில அவயங்களை கண்டி பேராதனிய மருத்துவ பீடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சட்டத்தையும் நீதியையும் காப்பாற்ற வேண்டிய பொலிஸாரின் மனிதாபிமான மற்ற செயலை நேரில் கண்ட 40 மேற்பட்டோர் சாட்சியமளித்துள்ளனர். அத்தோடு இளைஞர் தாக்கப்பட்டபோது பல வழிப்போக்கர்களும் சேர்ந்து இளைஞனை தாக்கியுள்ளனர். அவர்கள் அனைவரையும் இனம்கண்டு சட்டத்தின் முன் நிறுத்துமாறு கொழும்பு பேராயர் வேண்டியுள்ளார். மேலும் இச்சம்பவத்தை கண்டித்து நாளை நண்பகல் எதிர்ப்பு பேரணி ஒன்றை நாடாத்வுள்ளதாகவும் அதில் அனைவரையும் இன, மத பேதங்களின்றி கலந்து கொள்ளுமாறும் மனோ கணேசன் வேண்டியுள்ளார்.
- நன்றி: இலங்கை நெட்

2.     சாந்தன் on November 3, 2009 1:01 am
‘…இதுபோன்ற வேதனைதரும் சம்பவங்கள் இனிமேலும் தொடராமல் இருப்பதற்கு அனைத்து மலையக கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் எனப் பிரதியமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்…..’
நீர் ஒரு அமைச்சர். நடந்த விடயத்துக்கு நியாயம் (சட்டபூர்வ) கிடைக்க நடவடிக்கை கேட்காமல், ஏதோ மலையக கட்சிகள் பிரிந்து நிற்பதனால் தான் இது நடந்தது என கூறுகிறீரே? என்ன அரசியலா?
அப்போ ஒரு பிரஜையை பொலிஸ் அடித்துக்கொன்று விட்டு அரசியல் கட்சிகளின் மீது பழி போடலாம் என்கிரீர். ஒருவகையில் அதுவும் சரிதானே. உங்கள் அரசியல் அடிதடிக்கு அவர்கள் தானே சப்போட்.
’…எதிர்வரும் காலங்களில் உயர் அதிகாரிகளிடம் இது சம்பந்தமாக தாம் பேசவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்…’’
என்ன?

3.     சாந்தன் on November 4, 2009 4:10 am
’…ஆக மொத்தத்தில் ஒரேவிதமாகவே தமிழர்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்…..’
தமிழர்கள் என யாரைச் சொல்கிரீர்கள்? ஒட்டுமொத்தமாக எல்லாத் தமிழர்களையும் தமிழர் என சொல்கிறீர்களா, அல்லது அரசின் கதை அளப்புகளை நம்பிய ஆட்களைக் குறிப்பாக சொல்கிறீர்களா?. எவ்வாறாயினும் என்னை ”ஏமாற்றப்பட்ட தமிழர்” பட்டியலில் சேர்க்கவேண்டாம். நான் ஸ்ரீலங்கா அரசு எவ்வாறானது என்பதில் தெளிவாகவே இருக்கிறேன்.

4.     jalpani on November 4, 2009 8:18 am
குறைந்த பட்சமேனும் மனிதத்தை மதிக்காத அதிகாரத்தின் கீழ் வாழ முடியாது என்பதே இது உணர்த்தும் பாடமாகும்.

5.     babu on November 4, 2009 9:29 am
‘தற்போதைய அரசும்’ என ஆரம்பித்து ‘மொத்தத்தில் ஒரேவிதமாகவே தமிழர்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்’ எனச் சொல்லியிருப்பதைப் பார்த்தால் அது, அதிகாரத்துக்கு வந்த, அதிகாரத்தைக் கையிலெடுத்த, சக தமிழரையும் சுட்டிக் காட்டுமாப் போல்தான் எனக்குப் படுகிறது.
யாழ்ப்பாணியின்’ குறைந்த பட்சமேனும் மனிதத்தை மதிக்காத அதிகாரத்தின் கீழ் வாழ முடியாது என்பதே இது உணர்த்தும் பாடமாகும்’ என்பது அதை வலியுறுத்தகிறது.

6.     chandran.raja on November 4, 2009 9:40 am
பல பத்துஆண்டுகளாக போட்டி போட்டு சிங்கள- தமிழ்தலைமைகளால் வளர்த்து விட்ட இனவாதத்தின் உச்சக்கட்டமே பலர் முன்னிலையில் பகிரங்கமாக நடத்தப்பட்டது. இன்னும் மறைமுகமாக நடத்தப் பட்டுக்கொண்டிருப்பவை எத்தனை?
உதாரணத்திற்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள். அரசியல் லாபத்திற்காக வளர்த்துவிட்ட இந்த இனவாதப் போக்கு ஒரு ஆறுமாதத்திற்குள் மறைய வேண்டுமென நினைப்பது எப்படி? நடத்தி வைக்கப்பட்ட காலத்தில்லிருந்து கால்பகுதி ஆண்டுகளாவது கழியவேண்டாமா?
இந்த இனவெறிப்போக்கு இராணுவம் போலீஸ் படைகளில் மட்டுமல்ல அரசதரப்பு அரசாங்க உத்தியோகத்தர்கள் இன்னும் சாதாரண குடிமக்கள் மத்தியிலும் இருக்கிறது. இதன் எதிர்வினையாக இப்படியில்லாதவர்களையும் இரு இனங்களிலும் காணமுடியும் இதை அணுகுபவர்களும் தீர்க்க முற்படுபவர்களும் எந்தப் பக்கத்தில் நிற்கிறார்கள்? என்பதை அறிந்தே சமூகத்தை முற்போக்கு வழியில் இட்டுச் செல்ல முடியும்.

7.     palli on November 4, 2009 11:14 am
இந்த சம்பவத்தில் சம்பந்தபட்ட பொலிஸ் ……… இடம் கொடுக்க கூடாது, இவருக்கு கொடுக்கும் தண்டனை எனிமேல் கனவில் கூட யாரும் உயிர் பறிக்கும் எண்ணத்தை நினைக்கவே கூடாது, இவர்களை யாரும் காப்பாற்ற நினைத்தால் அவர்களுக்கும் இதே தண்டனை கொடுக்கபட வேண்டும், கசாப்புகடைக்கு கூட இவர்கள் உதவமாடார்கள்,

8.     jalpani on November 4, 2009 12:04 pm
பல பத்துஆண்டுகளாக போட்டி போட்டு சிங்கள- தமிழ்தலைமைகளால் வளர்த்து விட்ட இனவாதத்தின் உச்சக்கட்டமே பலர் முன்னிலையில் பகிரங்கமாக நடத்தப்பட்டது………..etc.etc.
ஆனால் நீங்களோ இரண்டு இனவாதக் கட்சிகளிலும் சேர்ந்து தமிழர்கள் பிறவிப் பெரும்பயனை அடைய வேண்டும் என பின்னூட்டம் விடுகிறீர்கள்.

9.     Kulan on November 4, 2009 12:59 pm
ஒரு சாதாரண மனநோயாளியை அடித்துச் சாகடித்த பொலிஸ் எப்படியான மனநோயாளியாக இருப்பான் என்பதை எண்ணிப்பாருங்கள். இப்படி மனநோயாளிகளை தானே எம்தேசம் உருவாக்கி விட்டிருக்கிறது. அப்பப்பாழ்பட்ட பூமியில் மனநிறைவுடன் வாழமுடியாதவர்கள் மனநோயாளிகக் கற்பனை உலகத்திலாவது வாழ்ந்திட்டுப் போகட்டுமே. இதற்கும் கொலைக் கொடுவா. பொலிசுக்கு பெயர் நகரபாதுகாவலர்கள். வேலியே பயிரைமேய்வதற்கு இலங்கையில் பெயர் காவல் காவலல்கள்.

10.   chandran.raja on November 4, 2009 1:25 pm
உங்கள் வரவையிட்டு மகிழ்சியடைகிறேன். திரும்பவும் கருத்துப் பரிமாறுகிறீர்கள். இரண்டும் இனவாதக்கட்சி என்று வரையறை செய்யும் நீங்கள் இனவாதக்கட்சி இல்லாத மூன்றாவதை காட்ட வேண்டுமல்லவா? உங்கள் கடமை அல்லவா? பல கேள்விகளுக்கு தலைமறைவாகி தப்பி ஓடிய நீங்கள் இந்தக் கேள்விக்கும் இந்த உபாயத்தை கையாளமாட்டீர்கள் என நம்புகிறேன் யாழ்பாணி.

11.   Kusumbo on November 4, 2009 1:30 pm
பல்லி! தண்டனைகளால் மட்டும் மக்கள் திருந்தி விடப்போவதில்லை. பயத்தினால் மட்டும் குற்றச்செயல்கள் நின்று விடப்போவதில்லை. இலங்கை அரசும் அரசியல்வாதிகளில் பலரும் மனநோய் கொண்டவர்களாக இருக்கம் போது பொலிசை மட்டும் குற்றம் சொல்லியோ தண்டித்தோ நீண்ட நெடிய தமிழர்வாழ்வுக்கு சுமூகமான வழிசமைக்காது. சிங்கள மக்களின் மனங்களில் ஆளமாக ஊற்றப்பட்ட துவேசம் எனும் வன்ம நஞ்சு அகற்றப்படாதவரை இப்படியான கொலைகளும்; இனக்கலவரங்களும் வந்தே தீரும். இதை ஆணிவேருடன் பிடுங்குவதைத் தவிர வேறு வழிகிடையாது.

12.   kamal on November 4, 2009 2:27 pm
குசும்பு மனநோயும் துவேசமும் சிங்களவர்க்கு மட்டும் உரித்தானதல்ல. தமிழரை குறைச்சு மதிப்பிடுகிறியள். குற்றம் செய்தவரை விசாரிக்காது நேரடியாக பொலிஸ் தண்டனை கொடுத்தது மிகவும் கேவலமானது. இது தாம் மக்களைப் பாதுகாக்கிறோம் என்று வெளிக்கிட்டு புலிகள் வழங்கிய மரண தண்டனைகளுக்கு ஒப்பானது.
யாழ்ப்பாணி இன்றைய கருனா புளொட் போன்றோரை மனதில் வைத்துக்கொண்டு இரண்டு இனவாதக் கட்சிகளிலும் தமிழர்கள் சேர்கிறார்கள் என்று சொல்வது தப்பு. சிங்கள கட்சிகளில் சேர்ந்து தமிழர்கள் போட்டியிடுவது தலைமுறை தலைமுறையாக நடப்பதே. என்ன இப்ப கொஞ்சம் தொகை தொகையாகப் போகிறார்கள்..
என்னைப் பொறுத்தவரை தமிழர்கள் மொத்தத்தில் இரண்டுவகை. ஒன்றில் ஏமாற்றுபவர்கள் அல்லது ஏமாற்றப் படுபவர்கள்தான். ( நான் எவ்வகை என்று நீஙகள் கேட்கமுன்) நான் இரண்டாவதுள் அடக்கம்.

13.   மாயா on November 4, 2009 3:22 pm
இதற்கும் இனத் துவேசத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது போலீஸ் அடாவடித்தனம். கொல்லப்பட்டவர் , தமிழரா அல்லது சிங்களவரா என்பது தெரியாமலே இக் கொலை நடந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் அங்குலானையில் கொல்லப்பட்ட இளைஞர் கொலையில் என்ன இனவாதம் இருந்தது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=16660
எல்லாம் போலீஸாரின் சண்டித்தனம்தான். மக்களின் காவலர்களை , மக்கள் காவலாராக்க வேண்டும். பதாள உலகம் போல் விட்டால் எல்லா இனத்துக்கும் ஆபத்துதான்.

14.   Kusumbo on November 4, 2009 3:26 pm
//குசும்பு மனநோயும் துவேசமும் சிங்களவர்க்கு மட்டும் உரித்தானதல்ல. தமிழரை குறைச்சு மதிப்பிடுகிறியள்// தமிழாகள் சளைத்தவர்களா? சிங்களவர்களை விடமோசமானவர்கள். தமிழரசுக்கட்சி: கூட்டணி நனைத்திருந்தால் இராஜதந்திர முறைகளில் சிங்களவரசுடன் இணைந்து இலங்கையில் துவேசத்தை மட்டுமல்ல மனிதப்பேரழிவையே நிற்பாட்டி இருக்கலாம். தமிழர்களைக் குறைந்து மதிப்பிடவில்லை

15.   babu on November 4, 2009 4:20 pm
மொரட்டுவ அங்குலான சம்பவத்தில் பொலிசார் நடந்துகொண்ட விதமும் பிழையானதே. ஆனால் அங்கு சம்பந்தப்பட்ட பொலிசும் பொலிஸ் நிலையமும் பொது மக்களால் தாக்கப்பட்டது .ஆனால் இந்தத் தமிழ் இளைஞனுக்கு அடிக்க ஆட்களே பொல்லெடுத்துக் கொடுத்திருக்கினம். இரண்டிலும் பொலிஸ் நடந்த விதம் பிழை. ஆனால் பொதுமக்கள் நடந்த விதம் இனவாதத்தை நோக்கித் தள்ளுகிறது விடயத்தை.

16.   jalpani on November 4, 2009 4:44 pm
பல கேள்விகளுக்கு தலைமறைவாகி தப்பி ஓடிய நீங்கள் இந்தக் கேள்விக்கும் இந்த உபாயத்தை கையாளமாட்டீர்கள் என நம்புகிறேன் யாழ்பாணி.”/
முள்ளிவாய்க்காலில் இராணுவம் அடித்த செல்வீச்சுக்கு பிரபாகரன் பயந்தோடிய மாதிரி நானும் உங்கள் சொல்வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாமல் ஓடி விட்டேனாக்கும். கல்லில் நார் உரிக்கும் வேலை என தெரிந்ததும் அதில் மினக்கெட விரும்பாததாகவும் இருக்குமல்லவா எனது தலைமறைவு. நிற்க.
இரண்டும் இனவாதக்கட்சி என்று வரையறை செய்யும் நீங்கள் இனவாதக்கட்சி இல்லாத மூன்றாவதை காட்ட வேண்டுமல்லவா/
இந்த உண்மையை சொல்லவே விடாதபடி உங்களைப் போன்றோரின் கருத்துக்கள ஆதிக்கம் செலுத்துகின்றன தேசம்நெற்றில். உண்மை சொல்லப்பட்டாலே அடுத்தது என்ன என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். அதற்கு காலம் இருக்கிறது போலும்.

17.   BC on November 4, 2009 5:31 pm
//இந்தத் தமிழ் இளைஞனுக்கு அடிக்க ஆட்களே பொல்லெடுத்துக் கொடுத்திருக்கினம். இரண்டிலும் பொலிஸ் நடந்த விதம் பிழை. ஆனால் பொதுமக்கள் நடந்த விதம் இனவாதத்தை நோக்கித் தள்ளுகிறது விடயத்தை.//
இதில் இனவாதம் கிடையாது. புலிகள் இலங்கையில் ஆட்களை போட்டுதள்ளினால் புலத்தில் உள்ள புலி ஆதரவாளர்கள் விருந்து வைத்து கொண்டாடினார்களே! அதே மாதிரியான மண்டை பழுது தான் இப்படியான வேதனையான சம்பவங்களுக்கு காரணம்.

18.   புரட்சிகர தமிழ்தேசியன் on November 4, 2009 6:28 pm
மனோ கணேசன் இந்த அடாவடி செயலை கண்டித்து ஆர்பாட்ட பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளதாக அறிகிறேன்.. இங்கும் தமிழ்நாட்டில் உண்ணாவிரதம் ஆர்பாட்டம் பேரணி என அனைத்தும் நடக்கிறது.. ஆனால் எவனும் கண்டு கொள்ளத்தான் ஆளில்லை. ஒரு கட்சி தலைவர் நான்கே நாட்களில் ‘விடுதலை’ வாங்கி தந்துவிட்டதாக போஸ்டர் ஒட்டுகிறார்கள்.. குவாட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் ஆசைபடும் ஒப்பற்ற தொண்டரடி பொடிகள் அதை வீடு வீடாக பிரச்சாரம் செய்கிறார்கள்.. ஆக பாக்கு நீரிணைக்கு அந்த பக்கமும் சரி இந்த பக்கமும் சரி சொற்ப அதிகாரங்களுடன் ஆட்சி அதிகாரதில் இருக்கும் பிஸ்சுகோத்துகள் தங்கள் எஜமான் செய்வதே சரி என்கிறார்கள்..

அதாவது டெல்லி ஏகாதிபத்தியம் இலங்கை ஏகாதிபத்தியமும்.. சகோதரத்துவம்.. அன்பு ..அகி’இம்சை’ என்று வாதிடும் மாற்று கருத்து மாணிக்கங்களை ஒன்று கேட்கிறேன்.. ஊர்வலம் ஆர்பாட்டம் என அத்தனை வழிகளையும் கடைபிடித்து பார்த்தாகிவிட்டது.. தீக்குளித்தும் பார்த்தாகி விட்டது.. பிறகு அந்த மக்கள் எந்த வழி முறை நாடுவாரகள்?.. ஏதாவது ஒரு புது வழி முறையை கண்டு பிடிக்கவும்.. அல்லது சிங்களவருக்கும் தமிழருக்கும் சகோதரத்துவதை ஏற்படுத்தும் லேகியம் சூர்ணத்தை அதாவது டானிக் அதை கண்டு பிடிக்கவும் வீடு வீடாக சப்ளை செய்ய தோழர்கள் தயாராக உள்ளார்கள்.. கண்டிக்கிறேன் சுண்டிக்கெறேன் என்று இங்கு இணையத்தில் எழுதுவதால் என்ன லாபம்? ஆக நம் எண்ணங்களை இப்படி கடிதம் எழுதி நம் எஜமானர்களிடம் கொடுப்பதால் அது தீர்வாகி விடாது அது குப்பை தொட்டிக்கோ அல்லது பஜ்ஜிக்கு கீழ்புறம் தாங்கி கொள்ள பயன்படும்..

இங்கும் ஒருவர் ஓயாமல் கடிதம் எழுதி குவித்து கொண்டுள்ளார் அவரால் பேப்பர் நொந்து போனதுதான் மிச்சம்..அதுவும் ஒரு அளவுக்கு மீறி உண்மையை சொன்னால் இங்கு சிறை படுத்துவார்கள் இலங்கையில் பிரச்சனையே இல்லை போட்டு தள்ளிவிடுவார்கள்.. ஏதாவது பெரும்பான்மையாக இருக்கும் சிங்கள கட்சிகள் ஒன்றினைந்து இதுதான் ஈழ தமிழர்களுக்கான தீர்வு என்று முன்னறிவித்து விட்டு ஈழ தமிழர்களை சந்திக்க தயாராக இருக்கிறார்காளா? அதாவது இதய சுத்தியுடன்… ஓட்டு பொறுக்குபவர்களுக்கு எதையாவது சொல்லி ஓட்டு பொறுக்குவதுதான் வேலை.. இங்கும் ஒருவர் எப்போதாவது திறக்கும் பழைய பூட்டு போல திடிரென்று அறிவுகண் திறந்து விட்டது.. கலர் டி.வி தமிழ்நாட்டில் இருக்கும் ஈழத்தவர்களுக்கு வழங்கபடும் என அறிவிப்பு விடுகிறார்.. இன்னும் பல பல சலுகைகள் ஆனால் ஈழத்தவர்கள் இவனுக்கு ஓட்டு அளிக்க போகிறார்களா? வாக்குரிமை உள்ளதா?.. கூர்ந்து கவனித்தால்.. தமிழ் ஈழத்தவர் மீது தமிழ்நாட்டவருக்கு இருக்கும் அனுதாபத்தை எப்படி வாக்குளாக மாற்றுவது என்ற வித்தை தெரிந்திருக்கிறது.. அதேபோல ஈழ தமிழர்கள் வரும் அதிபர் தேர்தலில் ராஜபக்சேவிடம் பல வாக்குறுதிகாளை எதிர்பார்க்கலாம்.. ஏன் தமிழ் ஈழம் என்று சொன்னால் ஆச்சரியபடுவதிற்கில்லை! தேர்தல் முடிந்தவுடன் எல்லாம் புஸ்வானம் தான்.. இங்கு ஒருவர் நிலமற்ற ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் தந்ததை போல .. இதுதான் ஜனநாயகம் இதுதான் மக்களாட்சி.. ம்ம் இன்னோரு முறை ஆரம்பிக்கட்டும் அகி’இம்சை வழி..ஊர்வலம் ஆர்பாட்டம்..

19.   Suresh on November 4, 2009 6:39 pm
Kulan on November 4, 2009 12:59 pm “ஒரு சாதாரண மனநோயாளியை அடித்துச் சாகடித்த பொலிஸ் எப்படியான மனநோயாளியாக இருப்பான் என்பதை எண்ணிப்பாருங்கள். இப்படி மனநோயாளிகளை தானே எம்தேசம் உருவாக்கி விட்டிருக்கிறது”
குலன், நல்ல கருத்து !

இத் சந்தர்பத்தில் eprlf ltte அணைத்து இயங்கங்களும் மனநோயாளியை அடித்துச் சாகடித்ததே, உங்கள் கருத்து என்ன! 84, 85 ஆம் ஆண்டுகளில் மொத்தமாக யாழ்ப்பாணத்திலும் தீவகத்திலும் 340 மனநோயாளிகள் கொல்லபட்டர்கள் என மன ஆலோசனை மையம் Shanthiyagam தெரிவிக்கிறது .

20.   BC on November 4, 2009 8:40 pm
Suresh , மனநோயாளிகள் என்கின்ற போது புலிகள் பலவந்தமாக பிள்ளகளை யுத்தத்திற்க்கு பிடித்து கொண்டு போனதால் மனநோயாளிகளான தாய்மார்களைப் பற்றியும் இப்போது நினைக்காமல் இருக்க முடியவில்லை.

21.   palli on November 4, 2009 10:32 pm
பல்லியின் பின்னோட்டம் பலதும் யாரையும் சிரிக்க வைக்கும்; ஆனால் இந்த நிகழ்வு பல்லியை மட்டுமல்ல பல பின்னோட்ட நேயர்களை அழ வைத்தது என்பதில் யாருக்கும் மாற்று கருத்தே கிடையாது; இருப்பினும் எனது பின்னோட்டம் தணிக்கையால் என்கருத்து மாறிவிட்டது; அதில் தப்பில்லை, காரணம் ஊடக நடைமுறையை தேசம் பின்னபற்ற வேண்டுமே, ஆனால் குசும்பு தண்டனை யாரையும் திருத்திவிட முடியாது என்பதை என்னால் ஏற்க்க முடியாது;

இன்று தமிழகத்திலும் கொழும்பிலும் என்கவுண்டர் என்னும் ஒரு நிலை வந்ததால் தாமாகவே சரனடையும் ஈனரக்கமற்ற பல ரவுடிகள் பதுக்குவது தெரியவில்லையா? புலிக்கு ஏன் நாம் பயந்தோம், தமிழ் மக்கள் இயக்கம் என்னும் கொடூரத்துக்கு ஏன் அடிமையானார்கள் என்பது கூடவா குசும்புவுக்கு தெரியவில்லை, ஆகவே தண்டனைதான் மிக மோசமான நடவெடிக்கைகளை ;;;;;;;;;;;;; கொடுக்கும்; இதில் அரசியல் இல்லாத தண்டனை மிகமுக்கியம்; அதுவும் இந்த நிகழ்வுக்கு வக்கில்கள் இல்லாத தண்டனை வேண்டும்;
சுரேஸ் உங்கழுக்கு தர்க்கம் செய்ய வேண்டுமாயின் வேறு ஒரு விடயத்தில் வாங்க தூக்கம் இழந்து சாம பல்லியாய் பதில் தருகிறோம்; அதைவிட்டு கெடுத்தவனை கேக்க முடியாமல் நாமும் கெடுத்தோம் என்னும் திருக்குறளை பின்னோட்டமாக விடுவது திருக்குறள் போல் உங்களிடம் புலி அல்லது பலி என்பதுபோல் ஒரு சாவை நியாயபடுத்த முயற்ச்சிக்க வேண்டாம், அதுசரி உங்க தலையே இந்த சாவைபற்றி ஏதும் பேசாதபோது உங்களிடம் சாவின் கருனைபற்றி பேசுவது பல்லியின் அறியாமைதான்,
சங்கரி; தோழர், பிரபா சுவிஸ், சித்தர், அவர்; இவர்; உவர் ,எவர் ;இப்படி தமிழின தலைகள் எல்லாம் எங்கே? கொடைகானலில் தேனிலவு கொண்டாடுகிறார்களா? போங்கையா நீங்களும் உங்கள் தமிழின தலமையும்;

22.   kulan on November 4, 2009 11:10 pm
//இத் சந்தர்பத்தில் eprlf ltte அணைத்து இயங்கங்களும் மனநோயாளியை அடித்துச் சாகடித்ததே உங்கள் கருத்து என்ன! 84 85 ஆம் ஆண்டுகளில் மொத்தமாக யாழ்ப்பாணத்திலும் தீவகத்திலும் 340 மனநோயாளிகள் கொல்லபட்டர்கள் என மன ஆலோசனை மையம் Shanthiyagam தெரிவிக்கிறது// இப்படி ஒன்றை நான் கேள்விப்பட்டதில்லை அப்படி நடந்திருந்தால் அது மன்னிக்கக்கூடியதும் அல்ல. எனக்கு அதிகம் ஈபிஆர்எல்எவ் பற்றி அதிகம் தெரியாது. எனக்கு அவர்களின் தொடர்பு என்றும் அன்று இருந்ததில்லை. தீவகப்பக்கம் நான் வந்தில்லை. இக்கேள்விக்கு சரியான பதிலை; நம்பகரத்தன்மையை சம்பந்தப்பட்டவர்களிடமே கேளுங்கள்.

23.   Kusumbo on November 4, 2009 11:25 pm
// குசும்பு தண்டனை யாரையும் திருத்திவிட முடியாது என்பதை என்னால் ஏற்க்க முடியாது// பல்லி கூறிய காரணங்கள் நேரடியான உடனடியான ஒரு தாக்கத்தைத் தந்தாலும் இது தூரநோக்கில் வெற்றியளிக்காது. அன்றை இன்றை சிறீலங்கா அரசியல்போல். இப்படிச் சரணடைந்தவர்கள் பயத்தில் சரணடையும் போது அவர்களுக்கும் எதை பார்த்தவர்களும் மனதில் என்ன ஏற்படும். ஆகா பலாற்காரமே எதற்கும் சிறந்த வழி என்ற எண்ணம் உருவாகிறது. சந்தர்ப்பம் கிடைக்கும் போது பலாற்காரத்தையே பயன்படுத்துவார்கள். எமது சமூகம் பலாற்காரத்திலேயே பிறந்து வளர்ந்தது. அம்மாவில் தொடங்கும் அடி அயல்வீட்டான் என்று போய் ஆசிரியரில் போய் பின் அரசு அரசியல் என்று வந்துவிடுகிறது. எந்த ஒரு பலாற்காரத்தாலும் பலாற்காரத்தை நிரந்தரமாக வெல்ல முடியாது. மனோதத்துவ விதிப்படி தூரநோக்கில் இது வெற்றியளிக்காது. ஐரோப்பாவில் பார்ப்போமானால் முன்பு சிறைக்கூடங்கள் தண்டனை நிறைவேற்று கூடமாகவே இருந்தன. மனிதவியல்; உயிரில்; தத்துவவியல் என்று பல வளர்ச்சியடைந்து சிறை என்பது ஒரு சிந்தனை மாற்றத்துக்கரிய சூழலாகவும் வாழ்வியல் மாற்று மையமுமாக மாறிவருவதைப் பார்ப்பீர்கள். கொலையைச் செய்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒரு மனநோயாளி என்பதைச் சந்தேகமின்றிச் சொல்வேன்.

24.   மாயா on November 4, 2009 11:54 pm
மல்லாவியைச் சேர்ந்த ஒரு மாணவி, இந்திய இராணுவ வீரன் ஒருவனுடன் காதல் வசப்பட்டாள் என்றதற்காக, அவள் படித்த பள்ளிக் கூட முற்றத்தில், பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் முன் அவளை புலிகள் சுட்டுக் கொன்றனர். இதைப் பார்த்த பிறகும் எவன் மேலாவது காதல் வந்தால் இதுதான் உங்களுக்கும் என்றனராம் சுட்ட புலிகள். இதில் யார் மனநோயாளிகள் புலிகளா? பார்த்து நின்றவர்களா? இதுபோல் எத்தனை கொலைகளை புலிகள் செய்துள்ளனர். கணக்கிலடங்காது. அதை பற்றி யாருமே இதுவரை வாய் திறந்ததில்லை? ஏன்?

25.   jalpani on November 5, 2009 8:43 am
இதில் யார் மனநோயாளிகள் புலிகளா? பார்த்து நின்றவர்களா? இதுபோல் எத்தனை கொலைகளை புலிகள் செய்துள்ளனர்.”
அதுதான் எல்லாம் அழித்து துடைத்தாயிற்றே. அவர்களுக்கு பதிலாக திருப்பி அதையே பரிசளித்தால் என்ன செய்வது?
நீதியான விசாரணையும் தீர்ப்புமா கிடைக்கப் போகிறது? மரண அறிக்கை நீரில் மூழ்கி மரணம் என்றுதான் வரும். அத்தோடு எல்லாம் முடிந்தது.

26.   KP on November 5, 2009 9:14 am
புலிகளைத் துடைத்தாயிற்றா? புலத்தில் மாவீரர் நிகழ்வுகளை அரசா செய்கிறது?

27.   jalpani on November 5, 2009 10:41 am
அத்தகைய நிகழ்வுகள் தொடர வைப்பது அரசின் கைகளிலேயே உள்ளது.

28.   Arasaratnam on November 5, 2009 10:52 am
இலங்கைச் சிறைக்குள்ளேயே பிடிபட்ட புலிகள் மாவீரர்தினம் கொண்டாட அரசு அனுமதிக்கிறது.

29.   Kusumbo on November 5, 2009 11:12 am
மாயா- சந்தேகமே இல்லை மனநோயாளிகள் புலிகளே. அதேவேளை பார்தவர்களுக்கும் மனநோய் ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த ஒரு விடயம் போதாதா புலிகள் பயங்கரவாதிகள் என்பதற்கு. ஒரு பெண்பிள்ளையின் உணர்ச்சி பூர்வமான உரிமையை மதிக்க முடியாத மூடர்களா மக்களின் மனங்களை வெல்லப்போகிறார்கள். ஒரு விடயத்தைச் செல்லிவைக்கிறேன் எதிரியை வெல்வது என்பது அவனை எதிர்ப்பதோ கொல்வதோ அல்ல. அவன் சாகும் போது கூட தான் கொண்ட கொள்கை நோக்கங்களுடன் தானே சாகப்போகிறான். சரி அந்தப்பிள்ளையை அழித்தீர்கள் அவள் சாகும் போது கூட அவள் காதலை வெறுக்கவில்லையே. இங்கே யார் வென்றது புலிகளா அவளா? வெற்றியாளன் என்பவன் எதிரியை கூட தன்வசப்படுத்துபவனே. ஏன் தமிழ்மக்களின் மனங்களை வெல்லமுடியாத புலிகளும் தோல்வியாளர்களே. அதேபோன்று இலங்கை அரசும் தோல்வியாளர்களே.

30.   Kusumbo on November 5, 2009 11:16 am
புலிகள் செய்த பிழைகளுக்காக இரத்தம் சிந்திய மாவீரர்களை மறந்து விட இயலாது. இந்த மாவீரர்கள் பலர் பலாற்காரமாக பெளதீகமாகவம் உளரீதியாகவும் கட்டாயப்படுத்தியே கொண்ட செல்லப்பட்டவர்கள். பிடித்துக் கொண்டு போவது ஒருபுலம் பிடிக்கப்பண்ணிக் கொண்டு போவது மறுபுறம். எது எப்படியாயினும் அவர்கள் ஏதோ ஒருவகையில் சரியோ பிழையோ எம்மை எம்மக்களை எண்ணியே உயிர் நீர்த்தார்கள். இறந்த எம்மக்கள் மேல் வக்கிரம் வேண்டாம். இறந்தவர்களுக்கு(ம்) மதிப்பழிப்போம். ஆத்மா சாந்தியடைய வாழ்துவோம்.

31.   palli on November 5, 2009 11:54 am
குசும்பு மாவீரரை மதிக்காமல் விடமுடியது; நான் புலி புலியாக இருந்தகாலம் இருந்து மாவீரரை மதிக்கிறேன் நினைக்கிறேன்; மாவீரரை கேலி செய்வதுகூட ஒரு வக்கிரகுணமே, அதேவேளை மறந்த பலரை நாம் இன்று நினைவுக்கு கொண்டுவருகிறோம், வரும்காலத்தில் அவர்கள் கூட சரியோ தவறோ நினைவு படுத்தபட வேண்டியவர்கள்தான், திரும்பவும் சொல்கிறேன் மாவீரரை மதிப்போம்;

32.   T Sothilingam on November 5, 2009 11:58 am
இலங்கையில் இனக்குரோதம் பெரும்பான்மை சிங்கள மக்களிடம் மாறி மாறி ஆட்சிக்கு வந்த இரண்டு கட்சிகளினாலும் ஆழமாக விதைக்கப்பட்டுள்ளது. இதை மாற்றியமைக்கும் வகையில் அரசு செயற்படாததுதான் இங்கு வேதனைக்குரியதும் தமிழர்க்கு உத்தரவாதம் இல்லாததுமாகும்.
இந்த இரண்டு கட்சிகளின் ஆழமாக விதைக்கப்பட்ட இனவாதத்திலேயே இலங்கையில் யார் ஆட்சிக்கு வருவது என்பது தீர்மானிக்கப்படுகிறது.

மக்கள் தமது சாதாரண வாழ்க்ககைக்குரிய சூழலில் வரும் பிரச்சினைகளிலிருந்தே அரசியல் - உரிமை என்பன பார்க்கப்பட வேண்டும்.
புலிகள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசு அல்ல. புலிகள் என்றுமே பயங்கரவாத்தின் மூலமே மக்களை அடக்கி வைத்திருந்துள்ளனர் அந்த மக்கள் என்றுமே புலிகளுக்கு எதிராக எழுந்திருக்க முடியாது. உடனடியாக மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கும் புலிகள் இதை தமது இறுதிக்காலம் வரையில் செய்தனர் என்பதற்கு பல சாட்சியங்கள் உண்டு.

33.   Kusumbo on November 5, 2009 1:49 pm
பல்லி! இதனால்தானே நான் என்றும் பல்லியுடன் குத்தி முறிகிறது. நன்றாகச் சொன்னீர்கள். மாவீரர் தினந்திலாவது அவர்களைப் பெற்றுப் பறிகொடுத்த மனதுகள் ஆறட்டும். ஒருதனிமனிதமனம் சாந்தியடைகிறது என்றால் அதற்காக நாம் எதையும் செய்யலாம். நாமும் மனிதராகலாம்.

34.   Kulan on November 5, 2009 2:09 pm
இந்த மாவீரர் தினத்தில் எனக்கு ஒரு ஆசை. புலிகளால் துரோகி என்று சுடப்பட்டவர்களும்> மற்ற இயக்கங்களால் சுடப்பட்டவர்களும் இந்த மாவீரார் தினத்திலாவது கெளரவிக்கப்படுவார்களா? இவர்களைத் துரொகி என்று பட்டையம் குத்திய புலிகளே இன்று துரோகிகளாக மக்கள் மனதில் நிற்கும் போது ஏன் எம்மண்ணில் புலிகளாலும் மற்றய இயக்கங்காளாலும் கொல்லப்பட்டவர்கள் மாவீரர்கள் ஆகக் கூடாது. அதாவது அரசியல் தேசவிடுதலை என்று புறப்பட்டு கொல்லப்பட்ட அனைவரையுமே இங்கே குறிப்பிடுகிறேன்.

35.   kosombo on November 5, 2009 2:15 pm
/மக்கள் தமது சாதாரண வாழ்க்ககைக்குரிய சூழலில் வரும் பிரச்சினைகளிலிருந்தே அரசியல் - உரிமை என்பன பார்க்கப்பட வேண்டும்./
நீங்கள் கூறுவது ஒரு அமைதியான நாட்டுக்குப் பொருந்தும் அமைதியைக் கலைப்பதற்குத்தானே நீங்கள் கூறியதுபோல் மாறி மாறி வந்த சிங்கள அரசுகளும் அவர்களின் வழியில் தமிழ் அரசியல்வாதிகளும் எம்மை துவேசம் என்னும் கழிம்மை அடிமனதில் ஊற்றி ஊறவைத்திருக்கிறார்கள். இது ஒரு பரம்பரையில் முடியும் விடயம் அல்ல. இனிப் பிறந்த குழந்தையில் இருந்து ஆரம்பிக்காத வரை துவேசம் இலங்கை மண்ணெங்கும் வேரோடியே இருக்கும்.

36.   r balakrishnan on November 6, 2009 4:53 am
i went through this news from the channels here and it is heartbreaking.how can we help it?rights is a forgotten issue in srilanka .US which has decided to conduct inquiry on fonseka has declined it!no surprise.who ll save the tamils?
bala

37.   Thaksan on November 11, 2009 6:18 pm
குலனின் ஆதங்கம் எனக்குமுள்ளது.

38.   palli on November 11, 2009 10:25 pm
//மல்லாவியைச் சேர்ந்த ஒரு மாணவி, இந்திய இராணுவ வீரன் ஒருவனுடன் காதல் வசப்பட்டாள் என்றதற்காக, அவள் படித்த பள்ளிக் கூட முற்றத்தில், பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் முன் அவளை புலிகள் சுட்டுக் கொன்றனர். இதைப் பார்த்த பிறகும் எவன் மேலாவது காதல் வந்தால் இதுதான் உங்களுக்கும் என்றனராம் சுட்ட புலிகள். இதில் யார் மனநோயாளிகள் புலிகளா? பார்த்து நின்றவர்களா? இதுபோல் எத்தனை கொலைகளை புலிகள் செய்துள்ளனர். கணக்கிலடங்காது. அதை பற்றி யாருமே இதுவரை வாய் திறந்ததில்லை? ஏன்?//

இதை எண்ணி பல்லியில் இருந்து மாயா வரை தலை குனிய வேண்டும் எமது இயலாமையை எண்ணி; அதேவேளை மல்லாவி சந்திரன் என்பவரால் பலர்(கழகத்துகாரர்தான் மல்லாவி சந்திரன் என நினைக்கிறேன்) கொல்லபட்டதையும் இந்த இடத்தில் பல்லி நினைவூட்டுகிறேன்; அதே மல்லாவி சந்திரன் இன்று கனடாவில் ஒரு தொழில் அதிபராம்; இதை எண்ணி நாம் அழுவதா? சிரிப்பதா? வெக்கபடுவதா?

39.   T Sothilingam on November 12, 2009 7:52 am
பாலவர்ணம் தமிழரானதால் ஏற்பட்ட மாற்றம் ‐ GTN ற்காக சுனந்த தேசப்பிரிய
11 November 09 10:15 pm (BST)

பாலவர்ணம் சிவகுமார் தற்போது எம்மிடையே இல்லை. இனரீதியாக முரண்பாடுகளைக் கொண்டுள்ள எமது சமுகத்தில் பலர் இவர் மற்றுமொரு தமிழர் என்றே கணக்கில் கொள்வர். எனினும், அவரின் குடும்ப உறுப்பினர்களும் தமிழ் சமூகமும், அவர் கொலை செய்யப்பட்ட மற்றுமொரு தமிழ் இனத்தவர் எனக் கொள்வர் என்பதில் சந்தேகமில்லை.

பாலவர்ணம் சிவகுமார் கொழும்பு இரத்மலான பிரதேசத்தில் வாழ்ந்துவந்தார். ஊவாவில் பிறந்த அவரை பாதுகாப்புத் தரப்பினர் ஒருபோதும் விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்பட்டவர் என சந்தேகிக்கவில்லை. கொழும்பில் வாழும் தமிழர்கள் அனைவரும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் யுத்தம் நடைபெற்ற போது அடிக்கடி சோதனைகளைச் சந்தித்த போதிலும், அவர் எவ்வித இடையூறுகளும் இன்றி வாழ்ந்துவந்தார்.
பாலவர்ணம் சிவகுமார் மனநோயினால் பாதிக்கப்பட்டவர், இதனால் அவர் அடிக்கடி, மனநோய் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற நேர்ந்தது. 2006ம் ஆண்டு ஏற்பட்ட காதல் முறிவே இந்த மனநோய்க்கான காரணம் என அவரின் சகோதரர் தெரிவித்திருந்தார். அன்பு முறியும் அல்லது அன்பை இழக்க நேரிடும் நம்மில் பெரும்பாலானோர் இவ்வாறான மனநிலைப் பாதிப்பை எதிர்நோக்கியிருப்போம்.

 இவ்வாறான மனநிலையிலிருந்து முழுமையாக சுகமடையக் கூடிய சூழல் பாலவர்ணம் சிவகுமாருக்கு இல்லாமையானது மற்றுமொரு காரணமாகும். கடந்த இரண்டு வருட காலங்களுக்குள் இலங்கைத் தமிழ் மக்கள் எதிர்நோக்கிய சமூக பாதிப்புக்கள் காரணமாக இருக்கக் கூடும். அவர் சுகமடைந்த அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுவந்தார். கடந்த ஒக்டோபர் 26ம் திகதி அவரது சுகவீனம் மீண்டும் அதிகரித்ததுடன், குழப்பம் விளைவிக்கக் கூடிய அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தது. 27ம் திகதி தனது அடையாள அட்டையை எடுத்துக் கொண்டு அவர் புறப்பட்டுச் சென்றுள்ளார். இதன்பின்னர் கடந்த 28ம் திகதி அவரது சடலம் கொழும்பு கொள்ளுப்பிட்டி கடற்கரையோரத்தில் ஒதுக்கியிருந்த போதே நாம் அவரை கண்டோம் என அவரது சகோதரர் தெரிவித்தார்.

அவர் கொலை செய்யப்பட்ட காட்சிகளை ஒளிபரப்பிய ரி.என்.எல், சிரச தொலைக்காட்சிகளுக்கு நன்றி பாராட்டும் வகையில் அந்தக் காட்சியை முழு நாடும் கண்டது. இரண்டு கைகளையும் கூப்பி வணங்கி உயிர்ப் பிச்சைக் கேட்டபோதும், அவர் பொல்லுகளால் தாக்கப்பட்டு பம்பலப்பிட்டி கடலில் மூழ்கடித்து கொலை செய்தவர்கள் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் காவல்துறையினரே.

டெய்லி மிரர் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், பாலவர்ணம் சிவகுமார் அன்றைய தினம் அதிகாலையிலிருந்தே பம்பலப்பிட்டி தொடரூந்து வீதிக்கருகிலிருந்து வாகனங்கள் மீது கல்வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டிருந்துள்ளார். இந்தத் தாக்குதல் காரணமாக தொடரூந்து ஓட்டுநர் ஒருவரும் படைச் சிப்பாய் ஒருவரும் காயமடைந்துள்ளனர். அப்போது இவர் பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்துள்ளதாக அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது. பல மணித்தியாலங்களுக்குப் பின்னரே அவரது செயற்பாடுகளைத் தடுப்பதற்காக காவல்துறையினர் அழைக்கப்பட்டுள்ளனர். அதுவரை அவரின் இந்த செயற்பாடுகளை பயங்கரமான செயற்பாடுகள் என எவரும் கருதவில்லை. அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் அல்லது தமிழ் இளைஞர் என அருகிலுள்ள மக்கள் அறிந்துகொண்டிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. காவல்துறையினர் சென்றதும் அவர் கடலில் குதித்தார். அதன் பின்னர் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கடலில் குதித்தனர். கூடியிருந்த மக்கள் நீண்ட இரண்டு பொல்லுகளை காவல்துறையினரிடம் கொடுத்தனர். துப்பாக்கியினால் சுடுமாறும் சத்தமிட்டனர். (பெரஹரவில் மதம் பிடிக்கும் யானையை சுட்டுக் கொல்லுமாறு மக்கள் கூச்சலிடுவதில்லை.)

பாலவர்ணம் சிவகுமார் கைகூப்பி வணங்கி தன்னைத் தாக்க வேண்டாம் எனக் கூறும்போது மக்கள் கொடுத்த பொல்லுகளினால் காவல்துறையினர் தொடர்ந்தும் தாக்கினர். கூடியிருந்த மக்கள் சண்டைக் காட்சி அடங்கிய சினிமாவைப் பார்ப்பது போன்று கண்சிமிட்டாது இந்த வீர நிகழ்வைக் கண்டுகளித்தனர். பாலவர்ணம் சிவகுமார் நீரில் மூழ்கி இறுதி மூச்சை விட்ட பின்னர் கருணையுள்ளம் கொண்ட கடல் அலைகள் குடும்பத்தினருக்கு இறுதிக் கிரியைகளை நடத்துவதற்காக பாலவர்ணம் என்ற தமிழரின் சடலத்தை மறுநாள் கரையொதுக்கியது.

26 வயதான பாலவர்ணம் சிவகுமார் 1983 அல்லது 1984 ஆண்டு பிறந்திருப்பார். அவர் 1983ம் ஆண்டு பிறந்திருப்பாரானால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்களைக் கண்டிருக்கமாட்டார். காரணம் தமிழ் மக்கள் கொரூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டது 1983ம் ஆண்டாகும். கறுப்பு வெள்ளியென பிற்காலத்தில் கூறப்பட்ட 1983ம் ஆண்டு ஜூலை 29ம் திகதி நாம் இருவர் கால் நடையாக கோட்டையிலிருந்து பொரல்லை நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். கொழும்பிற்கு புலிகள் வந்திருப்பதாக கதைகள் பரவியதை அடுத்து ஏற்பட்ட அச்சத்தில் வாகனங்கள் ஒன்றேனும் கிடைக்காத நிலையிலேயே நாங்கள் நடந்துசென்று கொண்டிருந்தோம். இந்தக் கதையின் பாதகமான முடிவாக நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொடூரமான முறையில் வெட்டிக்கொல்லப்பட்டனர். புஞ்சி பொரல்லைப் பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்டதுடன் சிலர் கைகட்டி, சிலர் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாது அமைதியாக இருந்தனர்.

பொல்லுகளினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிவகுமாரைப் பார்த்த போது அந்த புஞ்சி பொரல்லைச் சந்தியில் இடம்பெற்ற சம்பவமே எனக்கு ஞாபகத்திற்கு வந்தது. கடந்த 28ம் திகதி பம்பலப்பிட்டி கடலோரத்தில் இடம்பெற்ற இந்த துரஸ்திடவசமான தலைவிதி, பாலவர்ணம் சிவகுமார் சிங்களவராக இருந்திருந்தால் இவ்வாறு நடந்திருக்குமா? அப்படி இருந்திருக்கவும் கூடும் அல்லது அவ்வாறு இல்லாதிருந்திருக்கவும் கூடும். காவல்துறையினருக்கு கொலைகளைச் செய்யும் போது இனம் என்பது ஒரு பிரச்சினையல்ல. அதேபோல், விடுதலைப் புலிகள் தமது சமூகத்தின் மீது ஏற்படுத்திய படுகொலைகளால் ஏற்படுத்தப்பட்ட அச்சம் இன்னும் நினைவில் கொண்டிருக்கும் சிங்களப் பொது மக்கள் தமிழ் இளைஞரின் உயிரைப் பாதுகாக்க முன்வருவதைவிட, அவரை சுட்டுக் கொல்லுங்கள் எனக் கூறவே வாய்ப்பிருக்கிறது. அவ்வாறின்றி இந்த இளைஞர் சிங்களவராக இருந்து சிங்கள மொழியில் உயிர்ப் பிச்சைக் கேட்டிருந்தால் இந்தக் கொலையாளிகளுக்கு எதிராக கடலோரத்திலேயே எதிர்ப்புகள் கிளம்புவதற்கு வாய்ப்பிருந்தது.

கடந்த ஓகஸ்ட் 12ம் திகதி இரவில் இரத்மலான அங்குலான காவல்துறையினரால் தினேஷ் தரங்க, தனுஷ்க உதய என்ற சிங்கள இளைஞர்கள் இருவர் சித்திரவதை செய்யப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி, இதற்கு ஈடான மனித படுகொலைகளாகும். தமக்கு இடையூறுகளை ஏற்படுத்தியதாக கரையோரப் பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டை அடுத்தே அந்த இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
கரையோரத்தில் பந்து விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்களின் பந்து இந்தப் பெண்ணின் வீட்டிற்குள் விழுந்ததே இந்தச் சிக்கலுக்கான அடிப்படையெனக் கூறப்படுகிறது. அந்தப் பெண்ணின் முறைப்பாட்டை அடுத்து இளைஞர்களைத் தேடுவதற்காக சாதாரண உடையில் மோட்டார் சைக்கிள்களில் சென்ற காவல்துறை அதிகாரிகள் இந்த இளைஞர்களைக் கைதுசெய்திருந்தனர்.

இரவு முழுவதும் சித்திரவதை செய்யப்பட்டு அவர்கள் கொலை செய்யப்பட்டனர். இதன்பின்னர், ஆத்திரமடைந்த அங்குலான பிரதேச மக்கள் காவல்துறை நிலையத்தைச் சுற்றிவளைத்துத் தாக்கினர். இந்தக் காட்சிகள் ஒளிப்படங்களாக பிரசாரப்படுத்தப்பட்டது.

பாரியளவில் மரணச் சடங்குகள் இடம்பெற்றன. பத்திரிகைகள் ஆசிரியர் தலையங்கங்களை எழுதின. காவல்துறையினர் கைதுசெய்யப்பட்டதுடன் முழு காவல்துறை அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேற்குறிப்பிட்ட பெண் மற்றுமொரு குற்றச்செயலுக்காக கைதுசெய்யப்பட்டார்.
இந்த இளைஞர்களின் மரணத்தில் கவலையடைந்த அதிமேதகு ஜனாதிபதி அந்த இளைஞர்களின் பெற்றோர்களைத் தேற்றுவதற்காக ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து அதனை முழு நாட்டிற்கும் வெளிக்காட்டினார். கொல்லப்பட்ட பிள்ளைகளுக்காக பெற்றோருக்குத் தலா 5 லட்சம் ரூபாவை இழப்பீடாக வழங்கினார்.

எனினும், பாலவர்ணம் சிவகுமார் தொடர்பாக எவ்வித கருணையும் காட்டப்படவில்லை. ஆத்திரமும் ஏற்படவில்லை. அவரது மரணம் அமைதியான மரணமாகியது. இலங்கையில் தமிழர்களாக இருப்பது பாவத்திற்குரிய விடயமா?
Thanks to tamilglobaltnews.com

40.   மாயா on November 16, 2009 10:24 pm
மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞனது கொலை தொடர்பாக பம்பலப்பிட்டி போலீஸ் நியைத்தைச் சேர்ந்த 7 போலீஸ் உத்தியோகத்தர்கள் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளார்கள். இதைத் தவிர, போலீஸ் நிலைய அதிகாரி மற்றும் உப போலீஸ் அதிகாரி ஆகியோர் வவுனியாவுக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.


No comments:

Post a Comment