Search This Blog

Tuesday, 20 May 2014

எமது இலங்கைப் பயணத்தின் அனுபவப் பதிவு–2: ரி சோதிலிங்கம் & குமாரி

Sep 26, 2011
எமது இலங்கைப் பயணம் தொடர்பாக கடந்தவாரம் பதிவிடப்பட்ட கட்டுரை பல்வேறு  வாதப் பிரதி வாதங்களையும் ஏற்படுத்தி இருந்தது. அதில் தங்கள் கருத்துக்களைப்  பதிவிட்ட அனைவருக்கும் எமது நன்றிகள்.

எமது முதலாவது பதிவின் ஆரம்பத்திலேயே மிகத் தெளிவாகக் குறிப்பிட்டு இருந்தோம்  ”இக் (எமக்கு சொல்லப்பட்ட) கருத்துக்களை மட்டும் வைத்துக்கொண்டு அங்குள்ள  முழுமையான சமூக – அரசியல் சூழலை புரிந்துகொள்ள முடியாது” என்று. ஏனெனில் எம்மால்  தமிழ் மக்களின் பல்வேறு பிரிவினரிலும் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களையே சந்திக்கக் கூடியதாய் இருந்தது. மேலும் இவை எமக்கு ஏற்பட்ட சில தனிப்பட்ட அனுபவங்கள். இவை  எல்லோருக்கும் ஏற்பட்டு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இவை எல்லாவற்றையும் ஒரு தொகுப்பாக பதிவு செய்திருந்தேன். இதுவொரு பதப்படுத்தப்படாத அனுபவப் பதிவு.

இதனை ஊடகவியல் அரசியல் அனுபவங்களினூடாக விஞ்ஞானபூர்வமாக ஆராய்வதனூடாக மட்டுமே நான் முன்னைய பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல ”இன்னும் ஆழமாக அந்த சமூகத்துடன்  இணைந்து அந்தக் கருத்துக்களின் பின்னணியையும் அறிந்து கொள்வதன் ஊடாக மட்டுமே  முழுமையான சமூக – அரசியல் சூழலை புரிந்துகொள்ள முடியும்” என நினைக்கிறோம்.

எம்முடைய இப்பதிவு தேசம்நெற் இன் கருத்து அல்ல. தேசம்நெற் இல் உள்ள கருத்தியல்  சுயாதீனத்தை பயன்படுத்தி நாம் அங்குள்ள மக்களில் சிலர் தெரிவித்த கருத்துக்களின்  சாரம்சத்தை இங்கு பதிவு செய்திருக்கிறோம். இங்கு கருத்துக்களைப் பதிவு செய்த  பலரும் இது எம்முடைய கருத்தாக தவறாகப் புரிந்து கொள்கின்றனர். உண்மையில்  தாயகத்தில் உள்ள ஒரு சிறு பகுதியினரின் கருத்துக்களை நாம் காவி வந்து உங்களுக்கு  தெரியப்படுத்தி இருக்கிறோம். நாம் ஒரு காவி – மெசென்ஜர் மட்டுமே. அதனால் தான் முன்னைய பதிவின் ஆரம்பத்திலேயே இதன் பலவீனத்தையும் (முழுமையான சமூக– அரசியல் சூழலை புரிந்துகொள்ள முடியாது.) சுட்டிக்காட்டி இருந்தோம்.

உண்மை என்பது அவ்வளவு இலகுவாக உணரக்கூடியது அல்ல என்பதை இங்கு பதிவிட்ட  பலரினதும் கருத்துக்களில் இருந்து அறியமுடிகிறது. சிலர் தாம் சார்ந்த அரசியலை  நியாயப்படுத்துவதற்கு இப்பதிவை பயன்படுத்துகின்றனர். கருத்துக்களை பதப்படுத்தாமல்  வழங்குவதில் உள்ள ஆபத்தினை இது காட்டுகிறது.

இங்கு பலரும் குறிப்பிடுவது போன்று நாம் மார்க்சியவாதிகளோ ஊடகவியலாளர்களோ  அல்ல. அவ்வாறான தேர்ச்சியும் எங்களுக்கு இல்லை. நாம் சமூக அரசியல் ஆர்வலர்களே.  எம்மால் சமூக முன்னேற்றத்துக்கு ஏதாவது செய்ய முடிந்தால் அதனைச் செய்வதற்கு  முயல்கிறோம். நாம் செய்கின்ற செயற்பாடுகள் தாயகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாத  பட்சத்தில் இவற்றில் இருந்து ஒதுங்கி இருப்பது மேல் என்ற மனநிலையே இலங்கையில்  இருந்து திரும்பியதும் இருந்தது. அதனையே என் பின்னூட்டத்தில் சுட்டிக்காட்டி இருந்தேன். ஆனால் அதுவும் தவறாக நான் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அர்த்தப்படுத்தப்பட்டு உள்ளது.

எது எப்படியானாலும் பல்வேறு கருத்துக்கள் முட்டி மோதக்கூடிய ஜனநாயகச் சூழல்  ஒன்று ஏற்பட்டு உள்ளது. இது ஆரோக்கியமானது. இந்த கருத்து மோதலில் சரியான நியாயமான  கருத்துக்கள் நிச்சயம் பலம்பெறும்.

முஸ்லீம் இனம் பற்றிய எமது நிலைப்பாட்டில் நாம் அண்மைக்காலத்தில் எவ்விதத்திலும்  எமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை. முஸ்லீம்கள் தனியான ஒரு இனம் என்பதில்  நாம் மிகத் தெளிவாகவே உள்ளோம். ஆனால் மதங்களைப் பொறுத்தவரை அனைத்து மதங்களுமே  பிற்போக்கானவை சமூக முன்னேற்றத்துக்கு தடையானவை என்ற அபிப்பிராயத்தை நாம்  கொண்டுள்ளோம்.

நட்புடன் எமது இரண்டாவது பதிவினையும் இங்கு பதிவு செய்கிறோம். உங்கள்  ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறோம். அதுவே எமது  சிந்தனையையும் எழுத்துக்களையும் செழுமைப்படுத்தும். நன்றி.

த.சோதிலிங்கம் -  குமாரி.

26 09 2011
புலிகள் காலத்தில் தொழிலாளர்கள் தொழில்  வழங்குனர்களுக்கிடையிலான உறவுகளில் உருவான முறுகல் நிலைகள் இன்றும் வடபகுதியில்  உள்ள தொழிலாளிகள் தொழில் கொடுப்பனர்களிடையே ஒரு குழப்பமான நிலையிலேயே உள்ளது.  தொழிலாளிகள் எனப்படுவோர் யார்? அவர்களது உரிமைகள் என்ன? அவர்களுக்குத்
தொழில்கொடுப்பவர்கள் எப்படியாக நடாத்திக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படைவிதிகளை  அறியாதவர்களாக இருதரப்பினரும் இருப்பது அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இப்படியான
பிரச்சினைகளால் தொழில் கொடுப்பனர்கள் தமது திட்டங்களை குறிப்பிட்ட காலங்களில்  முடித்துக்கொள்ள முடியாத நிலையும் தொழில் கொடுப்பனர்கள் தமது தேவைக்கேற்ப  தொழிலாளர்களின் உதவியை பெற்றுக்கொள்ள முடியாத நிலை இருப்பதையும் அவதானிக்கக்  கூடியதாக இருந்தது.

தொழிலாளர்கள் தொழில்கொடுப்பனர்களின் உறவுகளை தவறாக  உருவாக்கிவிட்டது புலிகளின் நடத்தையும் குழப்பமான சித்தாந்தமும் ஒரு காரணம் என  சிலர் அங்கலாய்த்துக் கொண்டார்கள்.

இதன் காரணமாகவும் நீண்ட கால யுத்தம் காரணமாகவும், தமிழ் தொழிலாளர்கள் மிகவும்  குறைந்த தொழில்சார் அனுபவம் கொண்டவர்களாக இருப்பதாலும் தமிழ் தொழில் கொடுப்பனர்கள்  சிங்கள தொழிலாளர்களை தென்பகுதியிலிருந்து கொண்டு வந்து தமது தேவைகளுக்கு பாவிப்பது தவிர்க்க முடியாமலும் உள்ளது. இப்படியாக தென்பகுதியிலிருந்து கொண்டு வரும்  தொழிலாளர்கள் பலர் இன்றும் வடபகுதியில் நிரந்தரமாக தங்கியிருந்து உழைப்பில்  ஈடுபடுகின்றனர்.

வடபகுதியில் வேலைத்திறன் கொண்ட தொழிலாளர்கள் இல்லை  தொழிலாளர்கள் வினைமிக்க தொழில் கருவிகளையும் பாவிப்பதில்லை. கருவிகள் ஆயுதங்கள்  தொழில் கொடுப்பனர்களிடமும் இல்லை. அதிகமான தொழிலாளர்கள் வெறும் கைகளையும்  கிடைக்கும் பொருட்களை எல்லாம் ஆயுதங்களாக பாவிக்கிறார்கள். இவை இந்த தொழிலாளிகளின்  திறனை அதிகரிக்கமாட்டாது என்பதை யாரும் விளங்கிக் கொள்ளவில்லை அத்துடன் இப்படியான  முயற்சிகளே தொழிலாளர்களின் உடலை பலவீனப்படுத்துகின்றது. சிலவேளை இவை  உயிராபத்தானதாகவும் அமையக்கூடியதை அவர்கள் விளங்கிக் கொள்ளவில்லை என்றே நாம்  எதிர்பார்க்கிறோம். இன்றைய ஜரோப்பாவில் மிகவும் சிறிய அளவில் குறைந்த பணச்செலவுடன் பெற்றுக்கொள்ளக்கூடிய கருவிகள் ஆயுதங்களை எமது மக்களுக்கு வளங்குவதில் புலம்பெயர்  மக்கள் அக்கறை காட்டலாம்.

ஆனால் சிங்கள பிரதேசங்களிலிருந்து வேலைத்திட்டங்களுக்கு  வரும் தொழிலாளிகள் வேலைகள் செய்யும் வடக்கு பிரதேசத்தில், தொழில்துறைகள்  வேலைத்தளங்களில், பாதுகாப்பான வேலைத்தளங்கள் மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு  உத்தரவாதம் கொண்ட பணிகள் அல்லது பணிகளில் அக்கறை, மேலும் அவர்களின் வேலைத்தள  பாதுகாப்பிற்கான பல அறிவித்தல்கள் போன்றவற்றை அவ்வேலைத் தளங்களில் காணக்கூடியதாக  உள்ளது. இங்கு தொழிலாளர்களின் பாதுகாப்பு சம்பந்தமான அக்கறை தொழில்  வேலைத் தளங்களில் உள்ளதை எடுத்துக் காட்டுகின்றது. ஆனால் இவ்விடயங்கள் உள்ளூர்  சாதாரண  தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட விடயங்களில் பாராமுகமாக உள்ளது.

வடபகுதியில் பல பெருந்தொகையானோர் வேலையற்று இருக்கின்ற போதிலும் இவர்களை  பயிற்றுவித்து இவர்களுக்கு வேலைகளை வழங்கும் நோக்கத்தில் ஒப்பந்தக்காரர்கள் இல்லை.  இக்காரணங்களால் வேலையற்று இருக்கும் பலர் சிங்கள பிரதேசங்களில் இருந்து  தொழிலாளர்களை கொண்டுவருவதை தமக்கு எதிரான அரசின் செயலாகவே பார்க்கிறார்கள்.

**வடபகுதியில் கோயில்களின் அபிவிருத்தி அல்லது மீள திருத்தி  அமைத்துக்கொள்ளும் பணிகள் பல இடங்களில் மிகவும் துரிதகதியில் நடைபெறுகின்றது.  இதற்கு தேவையான பணத்தின் பெரும்பகுதி மேற்கத்தைய நாடுகளில் உள்ள தமிழர்களாலே  வழங்கப்படுகின்றது. இந்த நடவடிக்கைகளின் பின்ணணியில் இலங்கையில் வடக்கே  புத்தசமயத்தின் வளர்ச்சி, கிறிஸ்தவ சமயத்தின் அவசர வளர்ச்சிப் பரம்பல்களை
எதிர்க்கும் ஒரு வழிவகையாகவும் மற்றும் இயல்பாகவே சமூகத்தில் உள்ள பாவங்களுக்கு  நிவர்த்தி என்று சிந்திக்கும் சைவர்கள் இதன் மூலம் சமூக அபிவிருத்தி பெறும் என்ற  நம்பிக்கையிலும் பணத்தைச் செலவிடுகின்றனர். உதாரணமாக நைனாதீவில் உள்ள நாகபூசணி  அம்மன் கோவில் அறிவிப்பு பலகையில் இன்றைய கோவில் நிகழ்வுகள் அன்னதானம்  போன்றவற்றிற்கான உபயகாரர்களாக பட்டியலப்படுத்தி உள்ளவர்களின் 80 சதவிகிதத்தினர்  மேற்கு ஜரோப்பிய நாடுகளை சார்ந்தவர்களாகும்.

ஊர்களில் ஒழுங்காக உள்ள கோவில்களுக்கு திரும்ப திரும்ப பெயின்ற் அடித்து  மினுக்கிறார்கள் இடித்துக் கட்டுகிறார்கள். அதேநேரம் பல கிராமங்களில் பாடசாலைப்  பிள்ளைகள் உரிய பாதணிகள், புத்தகப் பைகள் இல்லாது பாடசாலைக்கு போகிறார்கள்.  வெளிநாட்டில் இருப்பவர்களில் எந்த நாட்டவர் கூடிய பணச்செலவில் செய்கிறார்கள் என்ற  போட்டிகளும்கூட அங்குண்டு

வன்னியில் யுத்தம் நடைபெற்ற காலங்களில் புதிய கிறீஸ்தவ கோவில்களும்  அமைப்புக்களும் உருவாகியிருப்பதையிட்டும், வன்னியில் மதமாற்றங்கள் புலிகளின்  காலத்திலே நடைபெற்றுள்ளது காரணமாகவும், பெளத்த சங்கத்தினர் தாமும் ஆதிக்கம் செய்திட  வேண்டும் என்ற மனப்பாங்கிலேயே வன்னியில் தமது பெளத்த அடையாளங்களை, புத்தர்சிலைகள்  கொண்டுவரப்பட்டு இராணுவ உதவியுடன் நிலைநாட்டப் படுகின்றது என்ற அபிப்பிராயம்  வடபகுதி தமிழர்களிடம் உள்ளது. இலங்கை  ராணுவத்தினரின் பொறியியலாளர்கள் பெளத்த  கோவில்கள் கட்டுவதில் தீவிர அக்கறையினை காட்டுவதாகவும் ஆனால் அதன் பக்கத்தே உள்ள  மற்றைய மதத்தவரின் கோவில்களை கட்டுவதில் அக்கறை காட்டுவதில்லை என்றும்
கூறினார்கள்.

**கிராமசங்கங்கள் அபிவிருத்தி என்ற பெயரில் செய்யப்படும்  நடவடிக்கைகள் பாரிய மாற்றங்களை சமூகத்தில் செய்யாது போனாலும் ஏதோசிறு உதவிகள் என்ற  அடிப்படையில் ஏற்றுக் கொள்ளலாம். வட பகுதியின் அதிகமான கிராமங்கள் தமது ஊருக்கான  சங்கங்களை வெளிநாடுகளில் கொண்டிருந்த போதிலும் இந்த உதவிகள் மிகவும் குறைந்த  அளவிலேயே உள்ளது. இதற்கு புலம்பெயர் நாடுகளில் உதவி செய்யும் நிறுவனங்கள்  அமைப்புகள் ஒரு திட்டமிடப்பட்ட செயற்பாடுகளுடன் உதவி செய்ய முன்வர வேண்டும்.

**யாழ் வடபகுதியில் உள்ள பல வீடுகள் வெறுமையாகவே உள்ளன.  அதிகமான வீடுகளின் உரிமையாளர்கள் வெளிநாட்டில் அல்லது இலங்கையில் இடம்பெயர்ந்து  வேறு இடங்களில் வாழ்கின்றனர். இந்த வீடுகள் கட்டாகாலி மாடுகளின் மிருகங்களின்  தங்குமிடமாகவும், தூர்ந்து போகும் நிலையிலும் உள்ளன. இவை திருத்தப்பட்டு,  வாழ்வதற்கு வீடுகள் இல்லாத அயலவர்கள் சுற்றார் இனபந்துக்களுக்கு கூட வழங்கப்படாமல்
உள்ளன. இவற்றை உரிமையாளர்களின் அனுமதியுடன் பெற்று தேவைப்படுவோருக்கு  கையளிக்கப்படும் முயற்சிகள் செய்ய, ஒரு குழு அல்லது அமைப்புகள் உருவாக்கப்படல்  வேண்டும். பல குடும்பங்கள் குழந்தைகளுடன் இருப்பதற்கு வீடற்ற நிலையில்  இருக்கிறார்கள் பலர் தற்காலிகமாக ஊரில் இருக்கும் திறந்த வீடுகளில்  இருக்கிறார்கள்.

**யாழில் கிராமங்களில் உள்ள மக்களுக்கு மருத்துவம் பற்றிய  அறிவு புகட்டுதல், மருத்துவ உதவிகள் புரியக்கூடியவர்களை பயிற்றுவித்தல், நீர்  இறைக்கும் பம்பு திருத்துல், கடற்தொழிலுக்கு பாவிக்கப்படும் இயந்திரங்கள்  திருத்துதல், தொலைக்காட்சி திருத்துதல், நன்னீர் சுத்திகரிப்பு, சூரிய மின்சாரம்  பற்றிய பயிற்ச்சிகளும் அறிவுவளர்ச்சி கல்வியும், கருவிகளும் போன்றவற்றில்  பயிற்சிகள் வழங்குவதற்கு புலம்பெயர் தமிழர்கள் உதவ வேண்டிய தேவைகள் உள்ளன.

இவற்றைவிட இன்றைய நவீன புதிய உலகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் நவீன தொழில்நுட்ப  மாற்றங்கள் வாழ்வியல் மாற்றங்கள் பற்றிய அறிவு வளர்ச்சி நிகழ்ச்சிகளை  தொலைக்காட்சியிலும் ரேடியோக்களிலும் வேறு பல வழிகளிலும் நடாத்தியும் உதவிகளும்  செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.

**யாழ்ப்பாணத்தில் கேட்கக் கூடிய பல வானொலிகளில் இந்திய  ரேடியோக்கள் மிகவும் பயனுள்ள பல அன்றாட வாழ்வுக்கு தேவையான விடயங்களில்  நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகின்றன. இவை 70 களில் பல பயனுள்ள விடயங்களில் காட்டிய அக்கறை  போன்று இன்றும் காலத்திற்கு ஏற்ப தேவைக்கு ஏற்ப தமது நிகழ்ச்சிநிரல்களை அவற்றின்  தரங்களுடன் மாற்றங்களுடன் ஒலிபரப்புகின்றன இவற்றை நான் மிகவும் ஆர்வமாக  கேட்டுள்ளேன். முக்கியமாக 3 இந்திய ரேடியோக்கள்- ஒன்று இலங்கைக்கான ஒலிபரப்பு
சென்னையிலிருந்தும், கோயம்புத்தூர் வானொலியும், மற்றுமொரு அகில இந்திய வானொலி
நிலையமும் தமிழில் ஒலிபரப்புக்களை நடாத்துகின்றன.

ஒருநாள் எனது உறவினர் தன்வீட்டில் உள்ள தென்னைகளில் உருவாகும் காய்கள் எல்லாம்  ஒரு வித நோய்க்குள்ளாகிறது என்றும் அண்மையில் பசுக்கள் பல திடீரென இறந்து போயின  என்றும் ஆனால் இவை ஏன் நடைபெறுகின்றது என தெரியாதுள்ளது என்றும்  கூறினார்.  வடபகுதி மக்களில் பலர் இருதய நோய்கள், நீரிழிவு நோய், கொலஸ்ரோல்  பிரச்சினைகளால் பீடிக்கப்பட்டுள்ளனர். வயது முதிர்ந்தவர்களுக்கு ஏற்படும் வாழ்வியல்  தளர்வு, குழப்பங்கள் போன்ற பலவிடயங்களில் பயிற்சிகளும் ஆலோசனைகளும் வழங்கும் நிகழ்ச்சிகள் பல தேவைப்படுகின்றன ஆனால் இவை பற்றிய நிகழ்ச்சிகளும் அறிவுரைகளும்  மிகவும் குறைந்த அளவிலேயே தொலைக்காட்சியிலும் பத்திரிகையிலும் வெளிவருகின்றன. இவைகள் பற்றிய தரவுகள் விளக்கங்களுடன் கூடிய இந்திய வானொலி நிகழ்ச்சிகள் பல  ஒலிபரப்பப்படுகின்றன. கோயம்புத்தூர் நிகழ்ச்சிகளில் அண்மைக்கால தென் இந்திய காலநிலை  மாற்றங்கள் ஏற்படுத்திய மாற்றங்கள் பற்றியும் இவைகளால் சூழலில் ஏற்படும் புதிய  மாற்றங்கள் பற்றியும் இவை மனிதரின் வாழ்வில் ஏற்படுத்தும் சம்பவங்கள் பற்றியும்  விரிவான ஒரு நிகழ்ச்சி ஒலிபரப்பானதை என்னால் கேட்கக் கூடியதாக இருந்தது. ஆனால்  இவைபோன்ற பயனள்ள நிகழ்ச்சிகளில் எமது மக்கள் அக்கறை காட்டுவதில்லை. பலருக்கு இப்படியான நிகழ்ச்சிகள் பற்றியே தெரியாதுள்ளதையும் அவதானித்தேன். இவை பற்றிய  விழிப்புணர்வு இல்லாதுள்ளதும் எல்லாம் நேரடியாக தரப்படல் வேண்டும் என்ற  எதிர்பார்ப்பு  உள்ளதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

சென்னை வானொலி நிலையம் 04-08-2011ம் திகதி காலை 0730 மணி இந்திய வரலாறு என்ற  நிகழ்ச்சியில் யவனர்கள் எனப்படுவோர் கிரேக்கர்கள் ரோமானியர்களே என்றும், உலகில்  முதல்முதலில் பாய்மரக் கப்பல்களையும் ஆயுதங்கள் பொருத்திய கப்பல்களை கட்டியவர்கள்  இந்திய கேரளத்தவர்களே என்றும் (இவர்கள் திராவிடர்கள்) இந்த கேரளத்தவர்களின்  கப்பல்கட்டும் துறையை அழித்தவர்கள் ஜரோப்பிய போர்த்துக்கீசர்கள் என்றும் நிகழ்வில்  கூறப்பட்டது. முதன்முதலில் “யுக்கிகல்குடு” என்ற தொழில்நுட்ப புத்தகத்தை  இந்தியாவில்தான் எழுதியிருந்தனர் என்றும் இது கப்பல்கட்டும் தொழில்கள் பற்றிய புத்தகம் எனவும் குறிப்பிட்டனர். நிகழ்ச்சி மிகவும் அறிவியலுடன் தொடர்புபட்டதாக  இருந்தது. இந்த நிகழ்ச்சி பற்றி உயர்தரம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரிடம்  கேட்டபோது இப்படி ஒரு நிகழ்ச்சி உள்ளதா என்று தான் கேட்டார். தானாகவே தேடல் என்பது  சமூகத்தில் குறைந்துள்தையே இது எடுத்துக்காட்டுகின்றது.

ஆனால் சமூகத்தில் புலிகளின் காலத்தில் மிகவும் பிரபல்யமாக பாடிக்கொண்டிருந்த  சாந்தன் பற்றியும் சாந்தனின் பல மனைவிகள் பற்றியும் சாந்தனை புலிகள் மேடையில் நேராக  நின்று பாடக்கூடாது என இட்ட விதியையும் பற்றி கூறிக்கொண்டு சாந்தனின் பாடல்களை  திரும்ப திரும்பவும் கேட்பார்கள். இந்த பாடல்களில் பல தடை செய்யப்பட்டுள்தாகவும்,  அவற்றை கேட்டாலே இராணுவத்தினர் துன்புறுத்துவார்கள் என்றும், இன்று அதே சாந்தன் அரச  இராணுவத்தினரின் நிகழ்ச்சிகளில் பாடுவதையும் குறிப்பிட்டுக் கூறுவார்கள். இப்படியான  குழப்பான நிலைப்பாடுகள் பல வடபகுதியில் உண்டு. இன்றும் யாழ் கடைகளில் சாந்தனின்  பாடல்கள் கொண்ட தொகுப்பை எடுக்க முடியுமா? என்று கேட்டால் பயந்து போகிறார்கள்.

யாழ் மக்கள் இலங்கையில் உள்ள 7 தமிழ் ரேடியோக்களில் ஏதோ ஒன்றையே கேட்பார்கள்  அதில் 24 மணிநேரமும் அதிலும் அதிகாலை 6 மணிக்கே துள்ளிசைப்பாடல்கள்  ஆரம்பித்துவிடும். அதையே கேட்டுரசிக்கப் பழகிக்கொண்ட எம்மவர்கள் அதிகாலையிலும்  துள்ளிசை கேட்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். இரவில் தொலைக்காட்சியில் இந்திய  சினிமா குப்பைகளின் தொகுப்பும் இந்திய சினிமாக்காரர்களின் நிகழ்ச்சிகளையும்  குடும்பமாக மெய்மறந்து பார்ப்பது வழக்கமாகிவிட்டது.

இந்த சினிமா நிகழ்ச்சிகள் இலங்கைத் தமிழரின் தமிழில் பாரிய மாற்றங்களை  ஏற்படுத்தியுள்ளமையை காணலாம். சினிமாக்களிலும் நாடகங்களிலும் பொறுக்கிய அடைமொழிகளை  பாடசாலைச் சிறுவர்கள் அர்த்தம் விளங்கியோ அன்றி விளங்காமலோ சர்வசாதாரணமாக பாவிப்பது  கேட்கையில் காதுகூசும். அவர்கள் விளையாடும்போது எதிர்த்தரப்பினரை பேசும் அல்லது  அழைக்கும் சொற்பதங்களை பெற்றோர்களே கண்டுகொள்ளாதிருப்பதை சில குடும்பங்களிலும்,  உடனே கண்டித்து திருத்துவதை சில குடும்பங்களிலும் காணக்கூடியதாக இருந்தது. இந்த  தொலைக்காட்சிகளின் பாதிப்புகள் மொழிவழக்கில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவை  இலங்கையில் தமிழர் பிரதேசங்களில் வாழ்வியலில் மொழியியல் மாற்றங்களை உருவாக்குகின்றதை அவதானிக்கலாம்.

இலங்கையில் உள்ள 7 தமிழ் வானொலிச் சேவைகளில் ஒன்றும் தமிழரருக்கோ  முஸ்லீம்களுக்கோ சொந்தமானவையல்ல என்று கொழும்பு தமிழ் இளைஞர் ஒருவர் கூறினார்.  சிங்கள நிகழ்ச்சிகளுக்கு தமிழ் மொழி மாற்றம் செய்து தமிழ் நிகழ்ச்சிகளாக  வழங்குகிறார்கள் என்றும் ஆனாலும் முஸ்லீம்களால் பல நல்ல தமிழ் நிகழ்ச்சிகள்  தயாரிக்கப்படுகின்றன என்றும் கூறினார்.

பத்திரிகைகள் என்று வரும்போது: உதயன் பத்திரிகை தமது சொந்த  அரசியல் நலனுக்காக செய்திகளை, இலங்கை அரசுக்கு எதிராகவே வைத்திருக்கும் நோக்கம்  கொண்ட செய்திகளையே முதற்பக்கத்தில் போடுவார்கள் என்ற கருத்து உள்ளது. தமது குடும்ப  நலன்களையே குறிப்பாக கொண்டு இயங்கும் பத்திரிகை என்ற கருத்தையும் சிலர்  கொண்டுள்ளனர். உதயன் பத்திரிகையை மட்டும் வாசித்துவிட்டு அதிலுள்ள செய்திகளை  மட்டும் நம்பிவிட முடியாது என்று கூறுபவர்களும் உள்ளனர். உதயன் பத்திரிகையை
வாசித்தால் இரத்தம் கொதிக்கும். இரண்டு நாட்கள் போனால் இவை உண்மையா என்ற  கேள்வியையும் எம்முள் கேட்கவைக்கின்ற பாணியிலேயே உதயன் வெளிவருகின்றது என்று சில  முன்னாள் போராளிகள் கூறினர். இதற்கு உதாரணமாக உதயன் பத்திரிகையாளர் தாக்கப்பட்ட  சம்பவத்திற்காக வெளியிடப்பட்ட செய்தியின் தலையங்களில் இதனை ஒரு குறிப்பிட்ட இயக்கம்  செய்ததாகவே சித்தரித்தனர் என்றும் ஆனால் இதன் பின்னணி பின்னாளில் வேறாகவே வந்தது  இந்த மாறுபாட்டை உதயன் சரியாக கையாளவில்லை என்று குறைபட்டுக் காட்டினர்.

புலிகளை கடந்த காலத்தில் ஆதரித்தவர்களில் பெரும்பான்மையானோர் உதயன் பத்திரிகை  செய்தியால் திருப்தி கொண்டவர்களாகவே உள்ளனர். இந்த புலி ஆதரவாளர்கள் சிலர் இன்றும்  புலிகளின் காலத்தில் பாதுகாப்பு நிறைந்தது என்றும் அரச இராணுவம் வந்த பிறகு அவை  யாவும் போய்விட்டது என்றும் இனிமேல் அப்படியான சுதந்திரம் வராது என்றும் கருத்து  கொண்டுள்ளார்கள். இன்றுள்ள ஜனநாயக இடைவெளிக்கும் அன்றிருந்த ஜனநாயக இடைவெளிக்கும்  உள்ள வித்தியாசங்களை அவர்கள் உணர தவறுகின்றனர். இவர்கள் உருத்திரகுமார்  போன்றவர்களுக்கும் அவர்களது செயற்பாடுகளுக்கும் ஆதரவாக பேசுகிறார்கள்.

கடற்தொழிலாளிகள் இலங்கை அரசு  கடற்தொழிலில் ஈடுபட தடைவிதித்த காலங்களில் தமது குடும்பம் அனுபவிக்கும் துன்பங்களை  மனவேதனையுடன் பகிர்ந்து கொண்டார்கள். கட்டுமரம் பாவிக்க தடைவிதித்த காலத்தில்  மிதவைகளை ஒன்றாக கட்டி அதன் குறுக்கே கயிற்றினால் ஆன தொடுப்புக்களை போட்டு அதில் தமது களங்கட்டி மரங்களையும் வலைகளையும் போட்டு கடலில் போய் தொழில் செய்ததாகவும்  இப்படி பல மாதங்களாக தாம் தொழில் செய்ததாகவும் கூறினார்கள். அரசு அதையும் கூட  தடைசெய்து தொழிலில் ஈடுபட விடாமல் மீளவும் தடைபோட்டதை நினைவுபடுத்தினர். இதன்  பின்னர் தாம் நீந்திப்போய் வலைகளையும் மரங்களையும் கடலில் கட்டி இழுத்துப்போய்  களங்கட்டிகள் நாட்டி தமது தொழில்களை செய்து தமது குடும்பங்களை காப்பாற்றியதாகவும்,  தமது குழந்தைகளுக்கு உணவூட்ட வழியில்லாமல் கஸ்ரப்பட்டதையும் கூறினார்கள்.

அரசிடம் கையேந்தி நிற்காமல் எமது தொழில்மூலம் எமது  குடும்பத்தை இன்று வரையிலும் காப்பாற்றும் நாம் எமக்கான அரசியல் முடிவுகளையும் நாமே  எடுப்போம் என்றும் எமது மக்களே எதையும் தீர்மானிப்பார்கள் என்றும் கொழும்பில் உள்ள  பல தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் மக்களுக்கும் எந்தவித தொடர்புகளும் இல்லை என்றும்  கூறினார்கள்.

**வடக்கின் ஒவ்வொரு கிராமங்களிலும் குறைந்தது இரண்டு  அபிவிருத்தி புனர்நிர்மாண வேலைகளுக்கான அறிவிப்புப் பலகைகள் அல்லது அபிவிருத்தி  திணைக்களங்களின் அறிவிப்புப் பலகைகளை காணலாம். எனினும் அபிவிருத்தி என்பதன்மீது  மக்கள் நம்பிக்கையற்றவர்களாகவே இருக்கிறார்கள்.

பொதுவாக அரசின் அபிவிருத்தி நடவடிக்கை என்றதும் அவற்றால்  பிரயோசனம் இல்லை என்றும் அபிவிருத்தி என்பது என்ன எங்கும் தெருக்கள் மட்டும்  போடுவதுதானே, கடந்த இரு வருடங்களாக தெருக்கள் மட்டும் தான் போடுகிறார்கள் என்றும்  இந்த அபிவிருத்திகள் தெருக்கள் சீர்நேராக செய்யப்படுவதில்லை என்ற நம்பிக்கையற்ற  போக்கே மக்களிடம் காணப்படுகின்றது. ஆனால் எமது அவதானத்தில் வடபகுதியில் நடைபெறும்  பெருந்தெருக்கள், வீதிகள், அபிவிருத்திகள் என்பன, வீதிகள் இல்லாத இடங்களில்  வீதியாகவும், பழுதான வீதிகளுக்கு சீர்செய்யும் வீதிகளாகவும் உள்ளன. இந்த வழிகளிலேயே  இந்த அபிவிருத்தி என்ற செயற்பாடுகள் இயங்கமுடியும். குன்றும் குழியுமாக  போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்த தெருக்கள் புதிதாகப் போடப்பட்டும்,  திருத்தப்பட்டதன் பின் தற்போது தாம் விரைவாக பயணிக்கக் கூடியதாக உள்ளதாகவும்,  வாகனங்கள் சேதமடைவதில்லை எனவும் வாகனச் சாரதிகள் நிம்மதியடைகிறார்கள்.

பல வருடங்களாக கொழும்பு யாழ் லொறிகளில் பொருட்களை இடமாற்றம் செய்யும் ஒரு  தொழிலாளி தான் முன்பு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் பொருட்கள் கொண்டு  வரும்போது இராணுவத்தினர் ஏதாவது ஆயுதங்கள் வெடிபொருட்கள் கொண்டு போகிறார்களா  என்பதற்காகவே சோதனை செய்வார்கள். பின்காலங்களில் இராணுவத்தினர் முழு லொறி  பொருட்களையும் இறக்கி உள்ளே வேறு வித்தியாசமான அல்லது தடைசெய்யப்பட்ட பொருட்கள்  கொண்டு செல்லாததை உறுதிப்படுத்திபின் விடுவிப்பர் அதன்பின் புலிகளின்  சோதனைச்சாவடியில் மீண்டும் பொருட்கள் முழுவதும் இறக்கி எவ்வளவு தொகையான
பொருட்கள் கொண்டு செல்கிறாய் என்றும் அதற்கான வரி செலுத்தும் பற்றுச் சீட்டையும்  தருவார்கள் என்று கூறினார். ஆனால் இன்று பொருட்களை இறக்கிஏத்தும் தொல்லை எதுவும்  இல்லாமலும் இந்த தெருக்கள் திருத்தியமைத்து தாம் தமது தொழில்களில் நிம்மதியாக  செய்யக் கூடியதாகவும் இன்று வீதிகள் திருத்தியமைக்கப்படுவது திருப்தியளிப்பதாகவும்,  அந்தவகையில் இந்த வீதிகள் திருத்தும் பணி அவசியமானது என்றும் கருத்து  சொன்னார்.

மக்களுக்காக வீடமைப்புகள் பல பெருந்தொகையாக  வன்னிப்பிரதேசங்களின் பல பகுதிகளிலும் கட்டப்பட்டுள்ளதை அப்பகுதியில் நேரடியாக  அவதானிக்கக் கூடியதாக உள்ளது. பல தரங்களில் உதவி வழங்கும் நாடுகளும் அரச சார்பற்ற  நிறுவனங்களின் கொடுப்பனவுகளுக்கும் ஏற்ப வித்தியாசமான முறைகளில் இவ் வீடுகள்  அமைக்கப்படுகின்றன. ஒரு குடும்பத்தினர் வாழக்கூடியதான, இரண்டு அறைகள், சமையல் அறை,  விறாந்தை என்பவற்றை கொண்ட வீடுகள் அடிப்படையான வீடுகளாக இருப்பதைக் காணலாம். இவை  3லட்சம் முதல் 5.5 லட்சம் பெறுமதி வரையிலான உதவிகளாக வீடு கட்டவும், சில திட்டங்களின்கீழ் வீடுகளாகவும் கிடைக்கின்றன. குடிசை வீடுகளில் வாழ்ந்தவர்களும்,  என்றுமே இப்படியான கல்வீடுகளில் வாழமுடியாதா என ஏங்கிய பல குடும்பத்தினரும் இந்த  வீடுகளின் உரிமையாளர்களாக இருப்பதில் பெருமிதங் கொள்கிறார்கள். இவற்றைவிட வன்னியில்  பல அங்கத்தவர்கள் கூடிய குடும்பங்களுக்கு இரண்டு சைக்கிள்கள் கொடுக்கப்பட்டு  உள்ளதாகவும், சிலருக்கு தண்ணீர் இறைக்கும் யந்திரமும் அதற்குத் தேவையான குழாய்களும்  வேறு பல விவசாய உபகரணங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

இவ்வுதவிகள் பெற்றுக்கொண்ட பலரையும், இந்த திட்டங்களை  செயற்படுத்தும் தனியார் கம்பனிகளையும், அந்த கம்பனிகளுக்கு உப ஒப்பந்தக்காரர்களாக  இருக்கும் எமது உறவினர்கள் சிலரையும், நாம் கிளிநொச்சி வன்னிப் பிரதேசங்களில்  சந்தித்தபோது அரசு செய்யும் உதவிகளில் பல, வெளிநாட்டு உதவிகள் என்றும் ஆனாலும் அவை  அரசின் உளவாளிகளின் கண்காணிப்பிலேயே நடைபெறுவதாயும் இதை மக்கள் விரும்பவில்லை  என்றும் கூறினார்கள். இவற்றில் முக்கியமாக கடந்த உள்ளூராட்சித் தேர்தல் காலத்தில்
தாம் இந்தக் கொடுப்பனவுகள் கொடுக்கச் சென்றபோது, மக்கள் வீட்டைவிட்டு வெளியே வந்து  தமக்கு தரப்படும் என்று தெரிவிக்கப்பட்ட பொருட்களை பெறவே தயங்கியதாகவும், காரணம்  இப்படி பொருட்களை பெற்றால் அதன் பின்னர் தமக்கே வாக்களிக்க வேண்டும், அல்லது தமது  கட்சிக்காக (அன்று வெற்றிலைக்காக) வேலை செய்ய வேண்டும் என கேட்கப்படுவார்கள் என்ற  அச்சமே என தெரிவித்தார்கள். இப்படியான கொடுப்பனவுகளின் போது உளவாளிகளும் வருவார்கள்  என்றே எதிர்பார்க்கிறார்கள்.

**கிளிநொச்சி பிரதேசங்களில் பல முன்னாள் புலிஇயக்கப்  போராளிகள் இராணுவத்துடன் இணைந்தே செயற்படுகிறார்கள். இவர்களில் பலர் பலவந்தமாகவே  இணைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஊர்களில் என்ன நடக்கிறதோ அவற்றை உடனடியாக  இராணுவத்தினருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், அப்படி தெரிவிக்கத் தவறி  இராணுவத்தினர்க்கு செய்தி தெரிய வந்தால் இவர்கள் மீது சந்தேகப்படுவார்கள் என்றும்,  சிலவேளை இவர்களையே சந்தேகிப்பார்கள் என்ற பயத்துடனும் இந்த முன்னாள்  புலிப்போராளிகள் பலர் உள்ளதாகவும், இப்படியான உடன்பாட்டுடனே சில முன்னாள்  புலிப்போராளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் கருத்துக்கள் உள்ளன. இவற்றைவிட  புலிகளில் போராடியவர்களுக்கும் பொது மக்களுக்கும் உள்ள இடைவெளி காரணமாகவும்  புலிகளில் ஒரு குறிப்பிட்ட தொகையினர் தமக்கு இராணுவ தடுப்பு காவலில் ஏற்பட்ட  உறவுகளை தொடர்ந்தும் பேண வேண்டிய நிலை உள்ளதையும் வேறு சிலர் விருப்புடனேயே இந்த தொடர்புகளை பேணுகின்றனர் என்றும் கூறினார்கள்.

வன்னிமுள்ளுக்கம்பி வேலிகளுக்குள் அடைபட்டிருந்த எமது உறவினர்கள் பலர் அச்சம்  நிறைந்த வாழ்க்கையையும் அவர்களது சொந்த அனுபவங்களையும் எம்முடன் பகிர்ந்து  கொண்டனர்.

வன்னி மக்களில் பலர் தமக்கும் கட்சிகள், இயக்கங்கள், அமைப்புக்கள், பொது  ஸ்தாபனங்கள் எவற்றிக்கும் தொடர்பில்லாமலே வாழ விரும்புகின்றனர். கடந்தகால புலிகளின்  நடத்தைகளைப் பின்பற்றி, இன்று வடபகுதியில் இயங்கும் அரசு சார்பு கட்சிகளும்  இப்படியாகவே மக்கள் இயங்கவேண்டும் என்று வற்புறுத்துவதாகவும் கருத்து  தெரிவிக்கிறார்கள்.

வன்னிமக்கள் அரசின் இறுதி யுத்தகால நடவடிக்கைகளில் இழந்த  தமது உறவுகளை அயலவர்களின் நினைவுகளை மிகவும் மனவேதனைகளை சுமந்துகொண்டு  வாழ்கிறார்கள் என்பதை அவர்களின் கதைகளில் காணலாம். தமது நாளாந்த செயல்களில் அல்லது  வேலைகளில் யாராவது ஒருவரை நினைவுகூர்ந்து கதைக்கும் சந்தர்ப்பம் அவர்களுக்குக்  கிடைக்கின்றது. அந்தளவு தொகையில் அவர்கள் இழப்பைச் சந்தித்துள்ளார்கள். அந்த  அளவிற்கு அவர்கள் மிகவும் நெருக்கமான உறவுகளை தொழில், விவசாயம் போன்ற தேவைகளுடன்  இணைந்து வாழ்ந்துள்ளார்கள் என்பதை உணர முடிந்தது.

எமது அவதானத்தின்படி வன்னி-கிளிநொச்சி பகுதியில் இருக்கும் பலர் யாழ்  பெருநிலப்பரப்புடன் தொடர்புள்ளவர்களாக உள்ளார்கள். இவர்களில் பலர் யாழ்  தீவுப்பகுதியுடன் மிகநெருங்கிய தொடர்புடையவர்களாகவும், உறவுகள், தொடர்புகளை  கொண்டுமுள்ளனர். இறுதிக்கட்ட போரின்போது பாதிக்கப்பட்டவர்களில் யாழ்ப்பாணத்தில்  இருந்து வன்னிக்கு வந்து புலிகளின் காலத்தில் குடியேறியவர்கள், இன்று தம்மை  வன்னியர்களாகவே அடையாளங் காண்கின்றனர்.

இறுதிக்காலகட்டத்தில் புலிகளினால் செய்யப்பட்ட அநீதிகளை கூறினார் எமது உறவினர்  ஒருவர். அவர் இராணுவத்தின் உதவிகள் பற்றியும் பல இராணுவத்தினரின் மனிதாபிமான  நடத்தைகள் பற்றியும் கூறினார் குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள் குழந்தைகள்  போன்றோருக்கும் கால்கைகள் முறிந்தோருக்கான இராணுவத்தினரின் உதவிகள் பற்றியும்  குறிப்பிட்டார்.

புலம்பெயர் வாழ்வு
புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் தம்மை  போர்க்காலத்தில் தவிக்கவிட்டு போய்விட்டவர்கள் என்ற மனத்தாங்கல் வடபகுதியில் உள்ள  மக்களிடம் உள்ளது. தாங்களும் இப்படி போயிருந்திருக்க வேண்டும் என்ற எண்ணமும் கொண்டுள்ளதையும் இன்றும் தாம் வெளிநாடுகள் போக வேண்டும் என்ற துடிப்புடன்  இருப்பதையும் பலவிடங்களில் அவர்களின் பேச்சுக்களில் அவதானிக்கலாம். வெளிநாட்டிலிருந்து வந்திருப்பவர்களை அவர்களின் நடை உடை பாவனை பேச்சுக்களில்  இருந்து இலகுவாகக் கண்டு கொள்கிறார்கள். அங்கு வாழும் மக்களுக்கும்  வெளிநாட்டிலிருந்து வரும் அவர்களின் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் இடையில் பாரிய  இடைவெளி முன்பிருந்ததாகவும், தற்போது அது குறைவடைந்துள்ளதாகவும் தமது அவதானங்களை  பகிர்ந்து கொண்டார்கள்.

புலம்பெயர் நாடுகளில் குடியிருப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ற பட்டியலில்,  ஜரோப்பிய நாடுகளில் வேலையற்றோர் அல்லது நிரந்தரமாகவே வேலை செய்ய முடியாதோர் சமூக  உதவிப் பணங்களில் வாழலாம் என்றும், பல தமிழர்கள் இப்படி வாழ்கிறார்கள் என்றும்  கூறுகிறார்கள். தமிழ் இளைஞர்களிடையேயான மோதல்கள் பற்றியும் தமிழர்கள் செறிந்து  வாழும் பிரதேசங்களில் நடைபெறும் களவுகள் பற்றியும், தமிழர்களே தமிழர்களின்  வீடுகளில் களவு செய்கின்றனர் என்பதையும் மக்கள் தெரிந்துள்ளனர். ஜரோப்பிய
தமிழர்களுக்கிடையிலான உறவுகள் குடும்ப உறவுகள், உறவுச்சிக்கல்கள் பற்றி ஓரளவேதான்  தெரிந்துள்ளனர்.

மேலும் வெளிநாடுகளிலிருந்து வரும் தமிழர்கள் தமது பாதுகாப்பை  உறுதிப்படுத்திக்கொண்டே இங்கு வருகிறார்கள் என்றும் தமது வாழ்வில் ஒரு உன்னத நிலையை  அடைந்துவிட்டார்கள் என்றும் இதை தாம் செய்ய தவறிவிட்டோம் என்று தம்முள் தாழ்ந்து  கொள்கிறார்கள். அவர்கள் முற்பிறவியில் செய்த புண்ணியத்தால் வெளிநாடுகளில் போய்  சந்தோசமாக இருக்கிறார்கள் என விதியில் பழி போடுபவர்களும் உள்ளார்கள்.

வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக லண்டனில் இருந்து வருபவர் குறைந்தது ஒரு  பட்டதாரியாக இருக்க வேண்டும் என வடபகுதி தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இப்படி  இல்லாதவர்கள் லண்டன் போயும் பிரயோசனமற்றவர்கள் என்ற கருத்து உயர்தரம் அல்லது அதற்கு  மேல் படிக்கும் மாணவர்களிடமும், படித்தவர்களிடமும் உள்ளது. அதே போன்று தாமும்  படிக்க வேண்டும் என்ற அவா உள்ளவர்கள் பலர் உள்ளனர் அதிலும் லண்டன் போய் படிப்பதே  மேல் என்ற எண்ணமும் ஆங்கிலத்தில் படிப்பதே மேலானது என்ற கருத்து பலரிடமும்  உள்ளது.

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களால் செய்யப்படும் உதவிகள் பற்றி உள்ளூரில் உள்ள  பொது மக்கள் எதுவுமே அறியாதவர்களாகவே உள்ளனர். இவைபற்றிய செய்திகளை, கருத்துகளை  உள்ளுர் பத்திரிகைகள் வெளிப்படுத்துவதில்லை. பெரும்பாலான ஊடகங்கள் தத்தமது அரசியல்  சுய வியாபார விடயங்களிலேயே பலமான அக்கறையுடனும் அதையொட்டியே மக்களையும் தமது  ஊடகங்களின் அசைவையும் வைத்திருக்கிறார்கள் என்பது நன்கு வெளிப்படையாகவே உள்ளது.

உள்ளூர்பத்திரிகை விளம்பரங்கள் மற்றும்  யாழ்வீதியெங்கிலும் உள்ள பதாகைகள், சுவரொட்டிகள் பலவும், மாணவ சமுதாயத்தை ஆங்கில  கல்விக்கும், வெளிநாடுகள் சென்று கல்விகற்கலாம் என மாணவர்களின் மனதை மாற்றும்  விடயங்களையும் தாங்கியுள்ளன. இதில் கவரப்பட்ட மாணவர்கள் பலர் தமது உயர் படிப்பையும்  கைவிட்டு இவற்றை நம்பியிருப்பதையும் கண்டோம். இந்தப் பதாதைகளுடன் கிறிஸ்தவபிரச்சார
சுவரொட்டிகளையும் காணக்கூடியதாக இருந்தது.

பொதுவாக யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களிடத்தே தாம் வெளிநாடுகளுக்கு போய்விட  வேண்டும் என்ற விருப்பே மேலோங்கியுள்ளது. இன்றும் வெளிநாடுகளில் வேலை  பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றும் செயல்கள் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் தாராளமாக  நடைபெறுகின்றன. ஏமாற்றும் ஏஜென்சிகள் பல தமிழ் இளைஞர்களுடன் உருவாகும்  பணச்சிக்கல்களை சமாளிக்க பொலிசார் இராணுவத்தின் உதவியுடன் மிரட்டல்களினால் தமிழ்  இளைஞர்களை பல நீண்ட காலமாக சமாளித்து வந்துள்ளனர். இன்றும் சில சமயங்களில்  இப்படியான மிரட்டல்களினால் தமது பணங்களை சுருட்டிக்கொள்கிறார்கள் என்றும், இதேநேரம்
அண்மைய காலத்தில் உருவாகியிருக்கும் ஜனநாயக இடைவெளிகளை பயன்படுத்தி தொடர்ந்து ஏமாற்றும் ஏஜென்சிகளுக்கும் அதன் தரகர்களுக்கும் தமிழ் இளைஞர்கள் 1990களில்  நடாத்திய அடிஉதை சண்டைகள் இப்போதும் கொழும்பில் நடைபெறுவதாக கூறினர்.

**வன்னியில் இன்றும் பல கல்லூரிகள் கொட்டகைகளிலேயே  இயங்குகின்றன அல்லது பகுதியான கட்டிடங்களாவது கொட்கைகளிலேயே இயங்குகின்றன.  குறிப்பாக கனகபுரம், கிளிநொச்சி, பாரதிபுரம் பாடசாலைகளை எம்மால் அவதானிக்கக்  கூடியதாக இருந்தது இங்கே கல்வி கற்கும் மாணவர்களின் கட்டிடங்கள் வசதிகள்  பிள்ளைகளின் மனதில் படிப்பு விடயங்களில் அக்கறையற்ற தன்மையையே உருவாக்குகின்றது என  எமது உறவினர் தெரிவித்தார். பாடசாலைகளுக்கு அரசின் உதவியின்மையும் அரசினால்  ஏற்படும் இடையூறுகளும் பற்றி சமூகத்தில், தெருக்களில், வீடுகளில், மக்களால், பெற்றோரால் பேசப்படும் கருத்துக்கள் இந்த சிறுவர்களின் எதிர்காலத்தில் அரசு பற்றிய  கருத்தில் தாக்கங்களை உருவாக்கும் என எதிர்பார்க்கின்றோம்.

அன்று புலிகளினால் அறிமுகப்படுத்தப்பட்ட பல திட்டங்களின் கட்டிடங்கள் இன்று  புதிதாக வர்ணங்கள் தீட்டப்பட்டும் தேசியக்கொடி ஏற்றப்பட்டும் ஏதோ ஒரு திட்டங்களின்  பெயர் குறிக்கப்பட்டும் உள்ளதை கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் அவதானித்தோம். கிளிநொச்சி பகுதியில் இன்று அரசு தன்னால் அறிமுகப்படுத்தப்பட்ட பல புதிய  திட்டங்கள் என்று கூறப்படும், அறிவிக்கும் பலகைகளில் உள்ள விடயங்கள் பல அன்று  புலிகளினால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களே என கூறினார்கள். அறிவுநகர் தொழில்நுட்பக் கல்லூரி, அறிவுநகர் விளையாட்டு மைதானம் (தற்போது அரசு இதையே சர்வதேச விளையாட்டு அரங்காக மாற்ற உள்ளது), போன்றன புலிகளினால் உருவாக்கப்பட்ட  திட்டங்களேயாகும். இவற்றை தமது திட்டங்கள் போல் அரசு பறைசாற்றிக் கொள்கின்றது.  இன்று இளைஞர் சேவைகள் மன்றமாக இருக்கும் கட்டடிடம் அன்று புலிகளின் முக்கிய  அலுவலகமாக இருந்தது என்றும் (அறிவுநகர்) புலிகளால் உருவாக்கப்பட்ட இதுபோன்ற  கட்டிடங்களை, விடயங்களை பாதுகாப்பதுபோல் அவர்களின் நினைவாலயங்களையும் அழிக்காது  பாதுகாத்திருக்கலாம்தானே என்ற கருத்து புலிகளினை ஆதரிக்காதவர்கள் மத்தியிலும்  இருப்பதை அவதானிக்க முடிந்தது. தலைமைகள்தான் பிழைவிட்டவர்கள் அதற்காக போராடப்போய்  உயிர்நீத்த போராளிகள் கல்லறைகள் எதற்காக உடைக்கப்பட வேண்டும்? இறந்த இராணுவத்தினர்  போன்றவர்கள்தானே இவர்களும், அப்படியிருக்க இறந்த இராணுவத்தினருக்காக நினைவுதூபிகளை  நிறுவிக்கொண்டு புலிகளின் நினைவாலயங்களையும் வைத்திருந்திருக்கலாம் என்றே அபிப்பிராயம் கொண்டுள்ளார்கள். அப்படிச் செய்திருந்தால் அது அரசின் பண்பு நிறைந்த  செயலாக இருந்திருக்கும்.

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் 1983ம் ஆண்டில் இருந்த ‘தமிழர்க்கு  அரசியல் தீர்வு தேவையில்லை- தேவை பொருளாதார அபிவிருத்தியே’ என்ற அதே பார்வையும்,  அபிப்பிராயமும் அரசின் உயர் அதிகாரிகள் மட்டத்தில் இன்றும் உள்ளது. அதைவிட ‘இந்த  தமிழர் பிரச்சினைகளுக்கு புலிகளே காரணம்’ எனவும் ‘புலிகளின் நடவடிக்கைகள் மட்டும்  தான் இந்த பிரச்சினையின் ஆரம்பம், ஆட்சிக்கு வந்த அரசியல்கட்சிகளுக்கும்  இவற்றிக்கும் தொடர்பில்லை’ என்றும் எல்லாவற்றையும் 1983ம் ஆண்டு 13 இராணுவத்தினரின்  கொலைகளில் தான் ஆரம்பிக்கிறார்கள். இவற்றை சிங்கள அரச அதிகாரிகள், அரசியல்வாதிகளின்  கருத்திலிருந்து விளங்கிக் கொண்டோம்.

இன்றைய அரசும் தமிழ் மக்களிடம் போவதற்கு திட்டவட்டமான அரசியல் இல்லாமல்  ‘பிரதேசத்தை அபிவிருத்தி செய்தல்’ என்ற வாக்கியத்துடன் போகமுற்படுகிறார்கள். இதை  தமிழ் மக்கள் ஏற்கத்தயாரில்லாத சூழ்நிலையை புரிந்து கொண்டிருந்தாலும் ஆகக்கூடிய  அளவில் இப்படியான அரசியலையே தமிழர்களிடம் புகுத்திடவிடவே முயற்சிக்கிறார்கள்.  இதற்காகவே அரசு காலத்துக்குக்காலம் தமிழ் அரசியல் கட்சிகளை அணைத்துக் கொள்கிறார்கள்  என இலங்கை அரசியலில் அக்கறை கொண்ட பல நண்பர்கள் கூறிக்கொள்கிறார்கள்.

இதன் ஒரு கட்டமாகவே ஆழும் கட்சியினர் வெற்றிலைச் சின்னத்தை பாவித்துக் கொண்டும்  தமிழ் மக்களை வகை தொகையின்றி கொலை செய்து இரு வருடங்களுக்குள் வந்து கிளிநொச்சியில்  ஆடல் பாடல் நிகழ்வுகளையும் வைத்து மக்களை ஏமாற்றவே முயற்சித்தார்கள் என்றும் மக்கள்  தகுந்த பாடத்தை இவர்களுக்கு புகட்டியுள்ளனர் என்றும் இவர்கள் பாடம் படிக்கும்  வரையில் தமிழர்கள் இவர்களுக்கு பாடம் படிப்பித்துக்கொண்டே இருப்பார்கள் என்று  அரசியலில் அக்கறை கொண்ட நண்பர்கள் கருத்துத் தெரிவித்தனர். இங்கே தான் ரிஎன்ஏ  அடுத்த ஆயுதமே தவிர ரிஎன்ஏ தமிழரின் முடிந்த முடிவு அல்ல என்று கருத்து
கூறியவர்களும் உள்ளனர். எமது மக்களை கொன்றுவிட்டு எம்மிடம் அரிசியும் ரின்  மீனுடனும் வந்து சமாளிக்கலாம் என்று எவ்வளவு சீப்பாக எம்மை பற்றி சிந்தித்தார்கள்  என கூறினர்.

தாம் இலங்கையர்கள் என்பதில் விருப்பமற்றவர்களையும், தமது இயலாமையாலும் வாழ்வியல் தேவைகளுக்குமாக அரசுக்கு எதிராக பலமான கோபத்தை மறைத்தே தமது அன்றாட வாழ்வினை கொண்டு செல்கிறார்கள் என்பதை நாம் அவதானித்தோம்.

தமிழ் மக்கள் தேர்தல்கள் மூலம் தமது அரசியல் உரிமைகளை கேட்டு போராடும்  காலத்திலும் அவை தவறு என்றும் அவற்றிற்கெதிராகவே இராணுவத்தை பாவித்தது, வன்முறையில்  ஈடுபட்டது, ஆயுதபோராட்டத்தை வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் அழித்தது, மீண்டும்  தேர்தல்கள் மூலம் தமிழர்கள் தமது அரசியல் நிலைப்பாட்டை எடுத்துக் கூறினாலும்  அரசினால் மீண்டும் மீண்டும் பழிவாங்கல்களே நடைபெறுகின்றன. கடந்த உள்ளூராட்சி  தேர்தலின் பின்னர் தாம் வெற்றிபெறாத இடங்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் செய்ய மாட்டோம்  என்று அரசு தமிழர்கள் மீது மீண்டும் அடக்கு முறையை, வன்முறையையே பிரயோகிக்கிறது.

தமிழர்கள் தமது ஜனநாயக உரிமையை பாவிப்பதையே மறுக்கிறது. வாக்கு போட்டாலும் அரசை  ஆதரித்தே வாக்கு போடவேண்டும் என்று கேட்கிறார்கள், இதற்குத்தான் இந்த அளவு  இராணுவத்தை எம் நெஞ்சில் நிறுத்தியுள்ளார்கள் இதைவிட வேறு என்ன அலுவலுக்கு இந்த  இராணுவம் இங்கு இருக்கிறது, தொடர்ச்சியாக இராணுவத்தை தமிழருக்கு எதிராக பாவிப்பதே  அரசின் நோக்கம் என்று கோபத்துடன் கருத்து கூறியவர்களும் உண்டு.

இலங்கை அரச இராணுவம் வடபகுதியில் இருக்கும்வரையில் வடபகுதி தமிழர்கள் அரசை  நம்பமாட்டார்கள் அரசிடம் இணக்க உறவுகளை வளரக்க முன்வரமாட்டார்கள் இலங்கையில் அரசு  தமிழ் பேசும் மக்களிடம் இணக்கப்பாடு கொண்ட அரசியலை உருவாக்க வேண்டுமானால்  இராணுவத்தை முழுமையாக விலத்திக்கொள்ள வேண்டும், அல்லது தமிழ் மக்களின் சுயநிர்ணய  உரிமையை அங்கீகரிக்க வேண்டும், தமிழ் மக்கள் தமது பிராந்தியத்தை நிர்வகிக்கும்  அபிவிருத்தி செய்யும் சுதந்திரம் அவர்களுக்கு அளிக்கப்படல் வேண்டும் என்பதே எமது  கருத்தாகும்.

தமிழ் அரசியல் கட்சிகள் தமிழர்க்கான அரசியல் தீர்வு மத்தியில் கூட்டாட்சி பற்றிய  முழுமையான அரசியலில் அதற்கான சர்வதேச அங்கீகாரம் கொண்ட உடன்பாடுகளை ஏற்படுத்த  வேண்டும் இதற்காக புலம்பெயர் மக்களும் உதவ வேண்டும், தமிழ் சிங்கள கலாச்சார  பிணைப்புக்களில் அக்கறையுடன் செயற்படல் வேண்டும்.

ஒன்றுபட்ட இலங்கைக்கான விடுதலை பெறுவதே வழி என பல சிங்கள முற்போக்கு அமைப்புக்கள் கூறுகின்றன. இவர்கள் இலங்கையின் வட பகுதியில் தமது அரசியல் வேலைகளில்  இறங்கியிருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இதில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும்  நான்காவது அகிலம் கட்சியினரும் முன்ணணியில் இருக்கிறார்கள். இவர்கள் எவ்வளவு பலம்  பொருந்தியவர்களாகவும் மக்களிடம் ஆதரவு பெற்றவர்களாகவும் உள்ளார்கள் என்பது  தெரியவில்லை.

இந்தியா உதவி செய்ய முன்வந்த காலங்களில் புலிகளின் அரசியல் வறுமை பற்றியும்,  இந்தியாவின் உதவியை சரியாக தமிழருக்காக பயன்படுத்த முடியாதவர்களாக இருந்தமையும்,  தவறாக பிராந்திய ஆதரவை புரிந்து கொண்டதினாலும், இந்த பாரிய இழப்பும், இக்கட்டான  சூழ்நிலையையும் தமிழர்க்கு உருவானது. இலங்கையில் வடக்கு பிரதேச மக்கள் தாம் இந்திய  உறவுகளைப்பேணி ஒரு பொருளாதார வளர்ச்சியில் இந்திய உறவில் அக்கறை கொள்ள வேண்டும்  என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. தமிழர்க்குரிய அரசியல் உரிமைகளை இலங்கை வைக்கத்  தவறுவதால் இது தமிழரை மேலும் இந்தியா மீது நம்பிக்கை கொள்ள வைக்கிறது.

**சனல்4 தொலைக்காட்சியில் ஒலிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகள் உண்மை  நிலைகளை எடுத்துக் கூறியுள்ளதாக உணர்கிறார்கள். தாம் இலங்கையில் இணையத்தளங்களில்  இதனை பார்வையிட்டாலே தாம் கொல்லப்படுவோம் என்ற பயம் காரணமாகவே தமது வீட்டில் உள்ள  இணையத்தளத்தில் கூட இந்த சனல் 4 தொலைக்காட்சி சம்பந்தப்பட்ட பக்கங்களை திறக்கப்  பயப்பிடுகிறார்கள். யாழ்ப்பாணத்தில் ஒரு வீட்டில் அவர்களது கணணியை பாவிக்கையில்  சனல்4 சம்பந்தப்பட்ட விடயங்களை பார்க்கப் வேண்டாம் என்ற கடுமையான உத்தரவினை எனக்கு  பிறப்பித்தார்கள். காரணம் இங்கு இந்த பக்கங்களை பார்க்கிறோம் என்பதை அறிந்து தங்கள்  வீட்டிக்கு உளவுப்படையினர் வந்து தம்மை கொலை செய்வார்கள் என்றே கூறினர்.

அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக்குத் தமிழரின் அரசியல் தீர்வுக்கும் உள்ள  தொடர்புகளை வட பகுதி மக்கள் சரியாகவே புரிந்துள்ளார்கள். ஆனால் இவைபற்றி எந்த  நடவடிக்கைகளிலும் இயங்க முடியாதபடி வட பகுதியில் இராணுவம், உளவுப்படைகளை அரசு  வைத்திருப்தை சரியாகவே புரிந்து கொண்டும், புலம்பெயர் மக்களின் பொறுப்பில் இந்த  விடயங்கள் உள்ளதையும், புலம்பெயர் மக்கள் செய்வார்கள் என்ற நம்பிக்கை கொண்ட  அபிப்பிராயத்துடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

புலிகளின் அழிப்பில் தமிழ் மக்கள் தானே கொல்லப்படுகிறார்கள் என்ற நினைப்பிலும்  பொதுமக்கள் அழிக்கப்படுவது தெரிந்தும் அல்லது இது தவறு என்று தெரிந்திருந்தும்  வெற்றியே தேவை என்றே அரசு செயற்பட்டது. அதன் பின்விளைவையே தற்போது சந்திக்கின்றனர்  என அமைதியாக கருத்து கூறுகிறார்கள். அராஜகம் நாட்டில் நடக்கிறது, பேசுவதால் எமது  உயிருக்குத்தான் ஆபத்து, நீங்கள் வெளிநாட்டுக்காரர்கள் உங்களுக்கு எதையும்  பேசுவதில் பயம் இல்லை ஆதலால் கதைக்கிறீர்கள் என்றார் எனது உறவினர்.

நீங்கள் வெளிநாட்டில் எந்த கருத்தையும் பேசலாம். நாங்கள் இங்கே புலிகளின் சரியான  நடவடிக்கை என்று ஒரு கருத்தை எங்காவது சொன்னால் என்ன நடக்கும்?- பிரபாகரனின் படத்தை  போட்டு ஒரு கருத்து எழுத முடியமா? இலங்கை அரசுக்கு எதிரான கருத்தை வெளியிட  முடியுமா? – அரசினால் மேற்கொள்ளப்படும் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை அடக்குமுறைகள்  எல்லாவற்றையும் பிரபாகரன் என்ற அல்லது புலிகள் என்ற சொல்லுக்குள் முடிக்க  பார்க்கிறார்கள், ஆனால் தமிழர் போராட்டம் பிரபாகரன் பிறக்கமுன்பே ஆரம்பித்த ஒன்று-  தமிழர் தனிநாடு கேட்டது இப்ப, தமிழர்க்கு உரிமை வேண்டும் என்று போராட தொடங்கியது  எந்தக்காலம்- போராட்டம் இப்ப வேறு ஒருநடவடிக்கையில் ஒரு புதிய பாதையை வகுத்துக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது- அது இப்போது ஆயுதம் இல்லாத ஒரு போராட்டத்தை தெரிவு செய்துள்ளது- இதுதான் இப்போதுள்ள எங்களின் நிலைமை நாங்கள் பரவாயில்லாமல் வாழ்ந்திட்டோம், திருப்தி- மனிதரின் இளமைக்காலம் தான் மனிதரின் ஆனந்த காலம்,  அதைத்தான் எப்பவுமே மனிதர்கள் தனது சந்தோச காலமாக நினைப்பது, அதையே இழந்தவர்கள்  பலர், அதுதான் உயிர்ப்பான வாழ்க்கை என்பது அதை தாரைவார்த்துவிட்டு போனவர்கள் பலர்,  அவர்களை மறக்கக் கூடாது- தமிழர்கள் நாம் முக்கியமான காலத்தில் வாழ்ந்து  கொண்டிருக்கிறோம், முக்கியமாக நீங்கள் வெளிநாட்டில் இருப்பது பெரிய பலம்  மறக்காதேங்கோ. நீங்கள் எல்லோரும் ஆனந்தமாக வாழுங்கோ கடமைகளை செய்யுங்கோ மக்களையும்  மறவாதேங்கோ! உதவுங்கோ!: இவை சாதாரண மக்களின் வார்த்தைகள். புலம்பெயர் தமிழர்கள் அமைப்பாக தமிழர்க்கான உரிமைகள் என்று செயற்படல் வேண்டும் என்பதே அவர்களின்  விருப்பமாக உள்ளது.

**புலம்பெயர் நாடுகளில் வெளியாகும் இணையத்தளங்கள்  பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள் தொலைக்காட்சியில் பேசப்படுபவைகள் வடபகுதியில்  வாழும் மக்களைச் சென்றடைவதில்லை. பெரும்பான்மையான மக்கள் உள்ளூரில் வெளிவரும்  பத்திரிகை செய்திகளின் அடிப்படையிலேயே பேசுகிறார்கள். ஆனால் அரசியல்வாதிகள்,  பத்திரிகையாளர்கள் போன்றோர் புலம்பெயர் நாடுகளில் வெளிவரும் ஊடகங்களின்  கருத்துக்களின் பிரதிபலிப்புக்களை செய்கிறார்கள் என்பது எம்மால் உணரப்பட்ட உண்மை.  தேசம்நெற்றில் வெளிவந்த கட்டுரைகள் பற்றியும், அதில் குறிப்பிடப்படும் அரசியல்  பற்றியும் எம்மீது கேள்விகள் எழுப்பியிருந்தனர்.

யாழ்ப்பாணம்-வவுனியாவில் பாடசாலைகளில் டொனேசன் தற்போது ஒரு  சீதனம் போன்ற நடைமுறையில் உள்ளது. ஒவ்வோர் பாடசாலைகளும் தங்கள் தரத்துக்கு ஏற்ப  இந்த டெனேசனை வாங்கிக் கொள்கிறார்கள் இல்லாவிட்டால் ஏதோ ஒருவகையில் இந்த பணம்  வருவதற்கான உறுதியை எடுத்துக்கொண்டே பாடசாலையில் அனுமதி வழங்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் உள்ள பெரிய புகழ்பெற்ற பாடசாலைகளில் இந்த நடைமுறை மிகவும்  கட்டாயமாகவே பின்பற்றப்படுகின்றது மற்றும் வவுனியாவில் உள்ள பாலர்பாடசாலைகளில் கூட  இருப்பது அறியக்கூடியதாக உள்ளது. வெளிநாடுகளில் உள்ளவர்கள் உதவிமூலம் சில  பெற்றோர்களும், நகைஅடைவு வைத்து சில பெற்றோர்களும் இந்த டொனேசனை கொடுத்தே பிள்ளைகளை  பாடசாலையில் சேர்க்கிறார்கள். இப்படியாக டொனேசனை கொடுத்து பாடசாலையில் சேரும்  பிள்ளையும் பின்னர் பாடசாலைக்கு வெளியே ரியூசன் வகுப்புகளுக்குப் போய்தான் தனது  உயர் புள்ளிகளை பெற முடிகிறது. இன்று இலங்கையின் வட பகுதியில் ரியூசன் போகாமல் ஒரு  பிள்ளை இல்லை என்றே கூறலாம். தம்பிள்ளைகளை ஆங்கில மொழிமூலத்தில் படிப்பிற்பதில்  பெற்றோர்கள் மிகவும் நாட்டங் கொண்டுள்ளனர். அதற்காக ரியூசன்களுக்கு பணத்தை செலவு செய்கிறார்கள். இன்று பாலர் பாடசாலைகளில் ஆரம்பித்து பேராதனை பல்கலைக்கழகத்தின்  மாணவர்கள் வரை ரியூசன் இல்லாமல் படிப்பதில்லை.

யாழ்ப்பாணத்தில் சிங்கள பாடங்களை படிப்பித்தலில் மக்கள் கவனம் செலுத்த  ஆரம்பித்துள்ளார்கள் பலர் வீடுகளில் ரியூசன் சொல்லி கொடுக்கிறார்கள். இதற்கான  அறிவிப்புப் பலகைகளை மானிப்பாய், சங்கானை, இடங்களில் அதிகமாக காணக்கூடியதாக  இருந்தது.

கடந்த பல காலமாக வெளிநாட்டவர் பார்வைக்கு அனுமதி  மறுக்கப்பட்டிருந்த கீரிமலைப்பிரதேசம் அண்மையில் முழுமையாக மக்களின் பாவனைக்கு  திறந்து விடப்பட்டுள்ளது. இதுவரை காலமும் வெளிநாட்டவர்களுக்கு கீரிமலைப் பிரதேசம்  ஏன் மறுக்கப்பட்டிருந்தது என்பதை அறிய நகுலேஸ்வரம் கோயில் முன் இருந்த கடையில்  கேட்டபோது அது எமக்கும் புரியாததொன்று என்றனர். அன்றும் இன்றும் எந்தவிதமாற்றங்களோ  வேறுபட்ட எந்த வேலைகளும் யாரும் செய்யவில்லை என்றனர். பல இடங்களில் நாம் குடும்பமாக  செல்வதாலும் வெளிநாட்டிலிருந்து வந்திருப்பவர்கள் என்பதாலும் எம்முடன் பலர் மிகவும்  அன்னியோன்யமாகவும் துணிவுடனும் பேசக்கூடியவர்களாக இருந்த போதிலும், இலங்கை நாட்டில்  ஒரு ஜனநாயக இடைவெளி உருவாகியுள்ள போதிலும், மக்கள் துணிந்து தமது கருத்துக்களை  வெளிப்படையாக பேச தயக்கம் கொண்டவர்களாக இருப்பதை நாம் கீரிமலை பகுதியிலும் ஏனைய  இடங்களிலும் அவதானித்தோம்.

கீரிமலை கடற்பகுதியிலிருந்து கிழக்கு நோக்கி  காங்கேசன்துறை துறைமுகத்தை பாக்கும்போது பெண்புலிப் போராளிகளால் புரட்டப்பட்ட பாரிய  கடற்படைக்கப்பல் கவிழ்ந்தபடியே இருக்கின்றது. இந்த பாரிய கப்பலை நிமிர்த்திக்கொள்ள  பல நடவடிக்கைகளை மேற்கொண்டும் சீர்செய்து கொள்ள முடியவில்லை. அரசாங்கம் இந்த கப்பலை  நிமிர்த்தும் பணிக்கும் காங்கேசன்துறை துறைமுகத்தை துப்பரவு செய்ய என இந்திய உதவிகள் நாடியதும் இந்தியா காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய உள்ளதும்  தெரிந்ததே!

அரசின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களை குறிப்பாக வடக்கு பிரதேச மாணவர்களை தெற்கு பிரதேசத்திற்கும், தென்பிரதேச மாணவர்களை வடக்கு பிரதேசங்களுக்கும் சுற்றுலா  எடுத்துச்செல்லும் ஒரு நல்ல முயற்சியினை அண்மைகாலங்களில் அரசு, கல்வி அதிகாரிகள் பிரிவினரால் ஏற்படுத்தப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டும் வருகின்றது.

இந்த திட்டங்களுக்கு அமைய அநுராதபுரத்திலிருந்து  மாணவர்களை கீரிமலைக்கு அழைத்துவந்து கீரிமலையின் பிரதேசமும் இந்துக்களின்  முக்கியத்துவம் (மூர்த்தி – தலம் – தீர்த்தம்) பற்றியும் விரிவுரைகள் அளித்தமையை  அவதானித்தோம். இதேபோன்று வல்வெட்டித்துறை மகளிர் கல்லூரி மாணவர்கள் அக்கல்லூரி  ஆசிரியர்களுடன் கண்டி வந்திருந்ததையும் நாம் கண்டோம். இந்த மாணவர்களை கண்டியிலுள்ள இந்து மாமன்றத்தில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இப்படியான சந்தரப்பங்கள்  தமிழ், சிங்கள மாணவர்களிடையேயான கலாச்சார தொடர்புகளை அறியவும், இலங்கையின்  இனங்களின் மூலங்களை தொடவும் வாய்ப்புக்களை அதிகரிக்கும் என நாம் நம்புகிறோம்.

கீரிமலையில் தம்பகொல படுன என்ற இடத்திற்கு திசைகாட்டும்  அறிவுப்புப் பலகை இருந்தது. அது எந்த இடத்திற்கு செல்வதற்காக என இராணுவத்தினரிடம்  கேட்டபோது மாதகல் என பதில் தந்தார்கள். மாதகல் கடற்கரையையொட்டி  பரந்த, விசாலமான பிரதேசத்தில், வரலாற்றுப் புகழ்மிக்க, பெளத்த பிக்குணி சங்கமித்தை  வருகை தந்த இப்பிரதேசத்தில், இந்துக் கோவில்களையும் உள்ளடக்கிய ஒரு பெரிய
பெளத்தகோவில் நிர்மாணிக்கப் பட்டிருக்கிறது. பல புதிய இளமையான செழித்து வளர்ந்த  அரச மரங்களையும் தென்னைகளையும் கோவிலின் உள்,வெளிப் புறங்களில் காணலாம்.

அதற்கப்பால் ஆள் நடமாற்றம் அற்ற பிரதேசமாக உள்ளது. பத்து வருடங்களின் பின்னர் தாம் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டு மாதகல் வந்தபோது, பல தனியார் காணிகளைச் சுவீகரித்து இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளதைக் கண்டதாக அவ்விடத்தைச் சேர்ந்தவர் கூறினார்.

யாழ் வடக்குப் பகுதியிலுள்ள கடற்கரை நீளமாகவும் தீவுப்பகுதி முழுவதாகவும் கடலில்  செல்லும் இயந்திரப் படகுகளை அவதானிக்கும் ராடர்கள் பொருத்தப்பட்டிருப்பது காணக்  கூடியதாக உள்ளது. மாதகல் திருவடிநிலை கீரிமலைப் பகுதிகளில் சில ராடர்கள்  அகற்றப்பட்டும் உள்ளது. ராடர்கள் பொருத்தப் பட்டிருக்கும் இடங்களில் பொதுமக்களின் போக்குவரத்துக்கு அனுமதிக்கப் பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

**யாழ்ப்பாணம் வரும் சிங்கள பிரதேச பஸ்களில், அறிவிப்புப் பலகைகளில் உள்ள  பெரும்பான்மையான தமிழ் சொற்கள் எழுத்துப் பிழைகளுடன் இருக்கின்றன. இலங்கையின்  முக்கியமான பிரதேசங்கள், தெருக்கள், அறிவுறுத்தல்கள், தலங்கள் சின்னங்களில் உள்ள  வரலாற்றுக் குறிப்புகள் என்று பரவலாக எங்கும் எழுத்துப் பிழைகளுடனான தமிழ் சொற்களை  காணலாம். இவற்றைவிட தமிழ் பிரதேசங்களில் பல அறிவிப்பு பலகைகளும் அறிவித்தல்களும்  சிங்களத்தில் மட்டுமே இடப்பட்டுள்ளன. இங்குள்ள தமிழ் மக்கள் எப்படி இதனை வாசித்துக்  கொள்வார்கள் என்று அரசும், இராணுவத்தினரும், பௌத்த துறவிகளும் சிந்திக்கவில்லை.
இவைகளைப் பற்றி பொதுவாக யாரும் கவலைப்படுவதில்லை. காரணம் அவர்கள் கவலைப்பட பல விடயங்கள் உள்ளன.

வடக்கின் கரையோரங்களில் சிங்கள குடியேற்றம் என்பது பரபரப்பான செய்தியாகவே  எப்போதும் இருக்கின்றது. அதேபோல் புதுக்குடியிருப்பு சிங்கள மீனவர்களின் நடமாட்டம்  அதிகமாகவும், அந்த கிராமத்தை சிங்கள கிராமமாக மாற்றி அங்கு நடைபெற்ற இனவாதப்போரின்  வடுவை அழித்துவிட அரசு கவனம் செலுத்துவது, தமது அரசினால் நடாத்தப்பட்ட இனவாத  நடவடிக்கைகளை மூடிமறைக்க எல்லா சிங்கள கட்சிகளுமே அக்கறையுடன் இருப்பது, அதற்கும்  மேலாக பௌத்த கோவில்களை அந்த இடங்களில் கட்டியெழுப்பி வரலாற்றையே மாற்றிவிடலாம் என்ற  அரசினதும் புத்தமத ஆலோசகர்களினதும் கருத்து, பாதிக்கப்பட்ட யாழ் நூல்நிலையத்தின்  பகுதிகளை தொடர்ந்தும் இருக்கவிடாது அதே கட்டிடத்தையே மீள புனர்நிர்மாணம் செய்தது,  இதேபோன்று இன்று எல்லாளனின் சிலை இருந்த இடம் துட்டகைமுனுவின் நினைவுச்சின்னமாக  மாற்றும் திட்டம் இருப்பது பற்றிய பேச்சுக்கள் உண்டு. இவைபோன்ற பல விடயங்களில் அரசு  அக்கறையுடன் செயற்படுவதாக அவர்கள் நம்புகிறார்கள்

கன்னியா வென்னீரூற்றுப் பிரதேசத்திலுள்ள இந்துக்கோவில்  பாழடைந்த நிலையிலேயே இருக்கின்றது. வென்னீரூற்றுக்கு மேல்நோக்கிய பகுதியில் பெரிய  புத்தர் சிலை ஒன்று புதிதாக நிறுவப்பட்டு இன்று இந்த கன்னியா வென்னீரூற்று  பிரதேசம், புனித நகரமாக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் காலையிலும், மாலையிலும்  புத்தசமய பிரார்த்தனைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்படியாக நிரந்தரமாக பௌத்த துறவியும், இராணுவ முகாமும் நிலை கொண்டுள்ளார்கள். தனிச்சிங்கள  அறிவுறுத்தல்களையும் காணலாம். தொடராக அமைக்கப்பட்டுள்ள சிறிய கடைகள்  சிங்களம்மட்டும் பேசுபவர்களால் நடாத்தப்படுகின்றது. இது மிகவிரைவில் தமிழர்களை  வரவேற்க விரும்பாத, தமிழர்க்கு உரிமையில்லாத பிரதேசமாக்கும் நடவடிக்கையாகவே  எமக்குப் புலப்பட்டது.

இவற்றை உறுதிப்படுத்தும் முகமாக இந்த இடங்களில் இலங்கை  தொல்பொருளியில் திணைக்களத்தின் அறிவிப்புப்பலகை இருப்பதையும் அவதானிக்கலாம்.  புதிதாக புத்த சிலைகள் புத்த கோவில்கள் அமைக்கப்பட்ட இடங்களில் இலங்கை  தொல்பொருளியல் திணைக்களம் உடனடியாகவே முன்வந்து ‘இந்த இடங்களில் உள்ள எந்தவொரு  பொருட்களையோ, சிலைகளையோ இடம்மாற்றம் செய்யவோ, நீக்கவோ கூடாது’ என்றும் அத்துடன்  ‘இந்த இடங்களில் உள்ள எந்த மரம், செடிகளையும் வெட்டக்கூடாது’ என்றும் யாரும் இங்கு  குடியேறக்கூடாது என்றும் இதனை மீறுபவர்கள் 5 வருட ‘சிறைத்தண்டனை அல்லது 50000
குற்றப்பணம் செலுத்த கட்ட நேரிடும்’ என்றும் அறிவிப்புப்பலகை போடப்பட்டிருக்கும்.  “இது புனிதப்பிரதேசம்” என பிரகடனப் படுத்தப்பட்டுள்ள அறிவிப்பு தம்மால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை பாதுகாக்கும் பொருட்டு சட்டத்தையும் தொல்பொருளியில்  திணைக்களத்தையும் மகா சங்கத்தினர் பாவிப்பதையே எடுத்துக் காட்டுகின்றது. இது அரசின்  அங்கீகாரத்துடன் தமிழர் பிரதேசங்களில் தமக்கு வேண்டியதை ஆக்கிரமிப்பு செய்வதையே  உறுதிப்படுத்துகின்றது. இந்த அறிவிப்புக்களை கன்னியா வென்னீரூற்றுப் பிரதேசத்திலும்  மாதகலிலும் நிலாவரைக் கிணற்றுப் பகுதியிலும் காணக்கூடியதாக இருந்தது. இந்த
அறிவிப்புக்கள் மட்டும் தமிழில் எழுத்துப் பிழையின்றி குறிக்கப்பட்டு இருப்பதையும்
அவதானிக்கலாம்.

நிலாவரைக் கிணற்றுப் பகுதியிலும் இப்போது நிரந்தரமாக  இராணுவம் நிலைகொண்டுள்ளதுடன் அங்கேயும் ‘இது புனித பிரதேசம் இப்பிரதேசத்தில் எந்த நடவடிக்கைகளும் அங்கீகாரமற்று செய்யக்கூடாது’ என அறிவித்தல்கள் போடப்பட்டுள்ளது. அத்துடன் இப்பிரதேசங்களில் பல திருட்டு சம்பவங்கள் நடைபெறுகின்றது என்றும்  திருடர்கள் பற்றிய தகவல்களை தந்து உதவும்படி இராணுவம் கேட்கும் அறிவித்தல்களும்
இங்கே உள்ளது. இந்த திருடர்கள் பற்றிய தகவல்களை தரும்படி கேட்பதும் இந்த பிரதேசத்தை
பாதுகாக்கவே என்பதாகவே எமக்கு புலப்பட்டது.

நிலாவரைக் கிணற்றிலிருந்து இன்றும் யாழ்ப்பாணத்தின் சில  பகுதிகளுக்கு நீர்ப்பாசன சபையினரால் குடிநீர் எடுத்துச்செல்லப்பட்டு வினியோகங்கள்  நடைபெறுகின்றன என நீர்பாசனத் திணைக்கள ஊழியர்கள் கூறினர்.

நிலாவரை கிணற்றடியின் அண்மைப்பிரதேசங்களில் சிறிய கடைகள் சிங்களம் மட்டும்  பேசுபவர்களால் நடாத்தப்படுகின்றது. இப்படியான இடங்களில் தமிழர்கள் கடைகள் விற்பனை  நிலையங்கள் நடாத்த அனுமதி மறுக்கப்படுவதாகவும், கிணற்றின் முன்னுள்ள பெரிய  அரசமரத்தின் கீழும் புத்தர் சிலை வருவதற்கு அதிக காலம் எடுக்காது எனவும் எம்முடன்  பஸ்ஸில் பயணித்தவர் கருத்துத் தெரிவித்தார்.

நிலாவரை கிணறும் அதன் புவியியல் முக்கியத்துவம் பற்றிய  ஆய்வும் எம்மை அந்த கிணற்றை பார்க்க வேண்டும் என்ற விருப்பம் காரணமாக அங்கு செல்ல  யாழ் பஸ்நிலையத்தில் குடும்பத்தினராக வந்து நிலாவரை போகும் பஸ் இலக்கத்தினை அறிந்து  கொண்டு மற்றைய மக்களுடன் பஸ் நிலையத்தில் நின்று எம்மிடையே பஸ்சை விட்டு இறங்கி  அதிக தூரம் நடக்க வேண்டுமோ தெரியாது என பேசிக்கொண்டிருக்க எம்மருகே அமைதியாக நின்ற  ஒரு வயது வந்த பெண்மணி நிலாவரைக் கிணற்றடியில்தான் பஸ் நிற்கும் என பதிலளித்தார்.  பின்னர் எம்மை பற்றியும் விசாரித்துவிட்டு, கிணற்றடியும் அதை சுற்றியுள்ள பிரதேசம்
பற்றியும் அறிவுரைகள் சொன்னார். அவர் எம்மை வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்பது போல வேறுபாடோ, வித்தியாசமோ இல்லாது எமக்கு பல கதைகளை சொல்லியவாறு எம்முடன் பஸ்சில்
பயணம் செய்தார். அவர் குறிப்பிட்ட முக்கிய விடயம் ‘இங்க யாரிட்டையும் கதைக்கிறது  ஆபத்து’ என்பதே. எமது பிள்ளைகளை தொட்டு நல்லா இருங்கோ என்று சொல்லிவிட்டுப்  போனார்.

இராணுவம் மீள்குடியேற அனுமதித்த பிரதேசங்களில் தமிழர்கள்  சுதந்திரமாக தமது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருப்பதையும், அவர்களால்  வீடுகள் புனரமைப்பு செய்வதையும் வயல்கள், தோட்டங்கள் போன்ற இடங்களில்  பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதையும் அவதானித்தோம்.

**கண்டியில் நடைபெறும் பெரகரா விழாக்கள்  இனிதே நடைபெற வழமைபோல அரசும், இராணுவத்தினரும் தமது முழுமையான பாதுகாப்பு  ஒத்துழைப்புகளை வழங்குகின்றனர். அங்கே வரும் யாத்திரிகர்கள் மிகவும் மரியாதையுடன்  நடாத்தப்படுகின்றனர். பெரகராவிற்கான ஏற்பாடுகளில் எடுத்துவரப்படும் பாரம்பரிய  களியாட்டங்களில் கொப்பராவில் எரியும் விளக்குகள் தூக்குதல், அவற்றிக்கான உதவிகள்  போன்றவற்றை மலையக தமிழ் இளைஞர்களே செய்வதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இந்த  விழா இந்திய தமிழ்நாட்டு கேரள கர்நாடக மாநிலங்களில் நடைபெறும் ‘தசரா’ விழாவுடன்  மிகவும் ஒத்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

தலதா மாளிகையினுள் கண்டி மன்னர்கள் தமது காலத்தில் பாவித்த ‘பத்திருப்பு’  பகுதிக்கு செல்ல மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த வெளி நோக்கிய சிறிய இடம்  மன்னர்கள் தமது ஓய்வு நேரத்தின்போது வெளியிடங்களை ‘பார்த்திருக்கும் இடம்’ ஆகும்.  தலதா மாளிகையின் உள்ளே பொருட்காட்சியறைகளில் உள்ள பல பொருட்கள் கண்டியின் கடைசி  தமிழ் மன்னனின் உடமைகளாகும். இந்த மன்னன் கண்ணுசாமி விக்கிரமபாகசிங்கன் பெயர்,  தனியே சிறீ விக்கிரமபாகு என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கோவிலில் தமிழில் எந்த  மொழிப் பிரயோகங்களும் காணப்படாமல் ஆங்கில மொழிமூலம் பதிவுகளும் செய்யப்பட்டுள்ளன.  தலதா மாளிகையின் அருகே உள்ள கண்ணகி அம்மன் கோவில்கள் பொலிவு இழந்து உள்ளது. இந்த  கண்ணகி அம்மன் கோவில்கள் இந்தியாவில் இருந்து கொண்டு வந்த கற்களால் இந்திய
அரசர்களின் அன்பளிப்பாக கட்டப்பட்டதே.

ராஜபோக தலதா மாளிகை என்பது இப்போது ராஜபோகங்களைத் துறந்த பௌத்த இளவரசர் கௌதம புத்தரினால் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது.

சங்கிலியன் சிலை திறப்புவிழாவின் போது  பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்வுகளும் திறப்புவிழாவும் மிகவும்  நன்றாக நடைபெற்ற போதிலும் யாழ்மேயர் யோகேஸ்வரி அவர்களின் பேச்சுக்கள்  கட்டைமீறியிருந்தன. அங்கு பேசும்போது அவர் பாவித்த ‘வெளிநாட்டிலுள்ள எட்டப்பர்கள்’ என்ற பேச்சு கூட்டத்தில் இருந்தவர்களின் முகத்தில் சுள்ளிட்டதை அவதானிக்கக்  கூடியதாக இருந்தது. ஒரு வரலாற்று நிகழ்வு, பொதுநிகழ்வில் மதிப்பிற்குரிய அமைச்சர்  முன்னிலையில், மதிப்புக்குரிய மேயரின் இப்படியான பேச்சு, இனவாதிகள் இனங்களை மோதவிட  பாவிக்கும் பேச்சுக்கு ஒப்பானது. தமிழர்களை ஒற்றுமைப்படுத்தும், தமிழர்களை தவறுகளை  திருத்தி இணைத்துக்கொள்ளும் இந்நேரத்தில், தனது மக்கள் தந்த ஆணைக்கு மரியாதையுடன்  மதிப்பளிக்க வேண்டிய இந்நேரத்தில், வரலாற்றில் பதிவுகள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் காலம் இது என்பதையும் உணரத்தவறி யாழ் மேயர் தான் விட்ட தவறை அவர் விமர்சித்து திருத்திக்கொள்ள வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம்.

யாழ்மேயர் யோகேஸ்வரி அவர்களின் பேச்சு

[youtube=http://www.youtube.com/watch?v=STNMZj3EOZY&w=500&h=281]

யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் திரு புஸ்பரட்ணம் அவர்களது
பேச்சு

[youtube=http://www.youtube.com/watch?v=60Xz4NSQHOU&w=500&h=375]

வடபகுதியில் உள்ள முக்கிய அரச மற்றும் பொதுசமூக பணிகளில் பல பெண்கள்  உயர்பதவிகள் வகிப்பது வரவேற்கக் கூடிய ஒருவிடயமாகும். இலங்கைத் தமிழர் வரலாற்றில்  பெருமளவில், பெண்கள் ஒரே காலத்தில் உயர்பதவிகளில் அங்கம் வகித்துள்ளது என்பதும்  இன்றைய காலகட்டமே. இப்படி பெண்கள் உயர்பதவி வகிக்கும் காலங்களில் பெண்களுக்கான  சமூக, பாதுகாப்பு வசதிகள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் விதவைகள்,  குழந்தைகள் பற்றிய விடயங்களிலும் கூடிய கவனம் செலுத்துவது வரவேற்கத்தக்கது.

யாழ் நூலகம் இன்று அமைதியாக மிக குறைந்த  வாசிப்பாளர்களுடன் இயங்குகின்றது. இந்த அமைதியில் யாழ் நூலகம் நூலகத்துக்குரிய  அத்தனை அம்சங்களையும் இன்னும் உள்ளடக்கிக் கொள்ளவில்லை என்பதும் ஒரு புதிய நவீன  சமுதாயத்திற்குமான அறிவுத் தளங்களை வழங்ககூடிய நிலையில் இல்லை என்பதையும் புரிந்து  கொண்டோம். மேற்குலகில் நூல்நிலைய கட்டிடங்கள் மூடப்படும் நிலையும் அறிவுத்  தேடலுக்கான இடமாக இணையவலைகள் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் காலங்களில்,  யாழ் நூலகம் என்பது தனியே புத்தகங்களை மட்டும் உள்ளடக்கியதும் அந்த புத்தகங்களை  வாசிக்க இரவல் கொடுப்பது மட்டும்தான் என்ற விடயத்தில் கட்டுடைப்பை செய்ய  வேண்டியுள்ளதை நாம் குறிப்பிட விரும்புகிறோம். இப்படியான கட்டுடைப்புக்களை செய்வதன்  மூலம் யாழ் நூலகம் வெறும் நூலகம் என்ற பாரம்பரிய நூலக சிந்தனையிலிருந்து வெளியேறி  இந்திய பிராந்திய, சர்வதேச உறவுகளை வளர்த்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். இதன்  மூலமே புதிய அறிவியல் உலகிற்குரிய பணியை செய்ய முடியும், தன்னை வளர்த்துக்கொள்ள  முடியும். யாழ் நூலகத்தை சர்வதேச வலைக்குள் கொண்டு வரவேண்டிய அவசியம் உள்ளதாகவே  நாம் உணர்கிறோம்.

**ஜரோப்பாவில் உள்ள முற்போக்கு பேசுபவர்கள் சமூகத்தில் அக்கறை  உள்ளவர்கள் இலங்கைக்கு தமிழர் பிரதேசங்களுக்குப் போய் அந்த மக்களுடன் வாழ்ந்து அந்த  சமூகத்தில் தமது ஜரோப்பிய வாழ்வியல் அனுபவங்களை தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்த  வேண்டும். சமூகத்தில் புதிய சிந்தனைமுறை நல்ல செயற்திறன் கொண்ட வழிவகைள்  புகுத்தப்படல் வேண்டும் இவற்றிக்கு மேற்கு ஜரோப்பிய அமெரிக்க நாடுகளின் தொழில்  அனுபவம் வாழ்வியல் அனுபவங்களை மாற்றீடு செய்யக் கூடியவர்களினால் மாற்றீடு செய்தல்  மூலமே கடந்த கால போர் இடைவெளியின் பாதிப்பை நிரப்ப முடியும், சமூகத்தில்  பாய்ச்சலையும் ஏற்படுத்த முடியும். இதன் மூலமே சமூகத்திற்கு உதவமுடியும், இதனூடாகவே  அரசியல் உரிமைக்காக இயங்கமுடியும்.

குறிப்பாக வடபகுதி தமிழர்கள் மத்தியில் உள்ள முஸ்லீம்கள் பற்றிய தப்பான  அபிப்பிராயங்களும் முரண்பாடுகளும் புலிகள் காலத்தில் ஒப்புவித்தது போன்றே இன்றும்  உள்ளது. இதன் காரணமாகவும் வட பகுதி தமிழர்கள் முஸ்லீம்களை இனவிரோதியாகவே  பார்க்கிறார்கள். இந்த மக்களின் இன விரோதப்போக்கை களையும் எந்தவித நடவடிக்கையும் யாராலும் வடபகுதியில் எடுக்கப்படவில்லை.

முஸ்லீம்கள் ஒரு தனி இனம் அவர்கள் தமக்குரிய இன அடையாளங்களுடன் வாழ்பவர்கள் தமது  இனத்தை தீர்மானிக்கும் பொறுப்பு அவர்களுடையது என்பதை பொதுவாக எடுத்துக்கூறும்  துணிவு இன்னமும் தமிழர்,சிங்கள தரப்பிடம் வரவில்லை என்றே நான் உணர்ந்தேன்.  தமிழர்கள் இன்னமும் இஸ்லாமியர்களை தமிழர்களாக பார்க்கும் தவறினை இழைக்கும் அதேவேளை  அவர்களுடன் காழ்ப்புணர்வுடனேயே உள்ளதையும் அவதானிக்கலாம். இவை யாவற்றிக்கும்  காரணமாக உள்ளவற்றில் முதலாவது கடந்த ஈழப்போராட்டத்தின் தவறேயாகும். மக்களை அரசியல்  மயப்படுத்தாது வெறும் இராணுவ நோக்கில் செயற்பட்டதேயாகும். முஸ்லீம்கள் புலிகளினால்  தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் இரு கூறுகளாக பிரிக்கப்பட்ட பின்னர் முஸ்லீம்  சந்தர்ப்பவாத தலைமைகளும் நிலைமைகளை பாவித்துக் கொண்டு முஸ்லீம் தரப்பும் பதிலுக்கு  தமிழர்களை படுகொலைகள் செய்ததின் மூலம் இனங்கள் வேறு வேறாகிக் கொண்டன.

இப்படியான இனவிரோதப்போக்கினை களைய விரும்பும் தமிழ், முஸ்லீம்தரப்பினர்  உள்நாட்டில் இயங்கும் முற்போக்கு சக்திகளின் அரசியல் தளங்களை பலப்படுத்தப்படல்  வேண்டும். அவற்றிக்கு புலம்பெயர் நாடுகளில் உள்ள முற்போக்கு சக்திகளின்  கூட்டிணைவும், உதவிகளும் அவர்களுக்கு தேவைப்படுகின்றது.

வடபகுதியில் தொடர்ந்து வசித்து வரும் முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சியின்  இஸ்லாமியத் தோழர்கள் சைவக்கோயிலுக்கு போய் திருநீறும் பொட்டும் வைத்து தம்மை  தமிழர்களுடன் ஜக்கியப்படுத்தும் உணர்வுகளை வெளிப்படுத்தி கோயிலில் நடைபெற்ற  கூட்டத்தில் பங்கு பற்றியதை ஒரு நல்ல உதாரணமாக காட்ட முடியும். மேலும் இன்று  ஈபிடிபி, மற்றும் வேறு சில கட்சிகளுடன் இணைந்து இயங்கும் பல இஸ்லாமிய தோழர்களின்  ஜக்கியத்துக்கான வெளிப்பாட்டையும், கிழக்கு மாகாணசபை அங்கத்தவர்களிடம் உள்ள  முற்போக்கையும் எடுத்துக்காட்ட முடியம், இதே போன்று முன்மாதிரிகள் இரு தரப்பிலும் உள்ள போதிலும் மேலும் இவற்றை பரந்த பரப்பில் பலம்வாய்ந்த நடவடிக்கைகளாக எடுத்து செல்லப்படவில்லை என்பது குறையே.

மொழியால் ஒன்றுபட்டவர்களான முஸ்லீம்களுடனான இன உணர்வுகள் பற்றி முன்னின்று பேச  30 வருடங்களாக போராட்டம் நடாத்திய தரப்பினரிடமிருந்து இன்னமும் துணிவு வரவில்லை.  போராட்ட அனுபவம் பெரியது, இதிலிருந்து பெற்றுக்கொண்ட பாடம் அளப்பரியது, என்று  கூறும் பல முன்னாள் போராளிகள் பலர், இன்னமும் இஸ்லாமியர்கள் ஒரு தனிஇனம் என்ற சமூக  அடிப்படையை விளங்கிக் கொள்ளவில்லை, உணர்ந்து கொள்ளவில்லை, இவற்றை பொதுவில்  முன்வைக்க முடியாதுள்ளனர்.

இவை யாவற்றிக்கும் இன்று வரையில் இலங்கையின் வட பகுதியில் நிலை கொண்டிருக்கும்  அரச,இராணுவ யந்திரங்களின் நடத்தைகளும், குறிப்பாக அரசு இராணுவத்தில் திட்டமிட்டு  தமிழ் பிரதேசங்களில் வேலைக்கமர்த்தியிருக்கும் இஸ்லாமிய இராணுவ  புலனாய்வுத்துறையினரின் நடத்தைகளும் மேலும் தமிழர்களையும் இஸ்லாமியர்களையும்  பிளவுபடுத்தும் செயலாகும் என்பதை தமிழ்மக்கள் உணரமுடியாதுள்ளனர். இதேபோன்று தமிழ்  இளைஞர்களை, முன்னாள் புலிகளை, அரசு இஸ்லாமிய பிரதேசங்களில் பயன்படுத்துவதாகவும்  பலராலும் பேசப்படுகின்றது.

இலங்கை அரசின் இனக்கையாள்கைகளும் பிராந்திய நெருக்குவாரங்களும் இந்த இரு  சிறுபான்மையினரையும் தமிழ்பேசும் மக்கள் என்ற ஒற்றை அடையாளத்துக்குள் கொண்டு வர
கட்டாயப்படுத்தும் நிலைமைகளை எதிர்காலத்தில் எதிர்பார்க்கலாம். எது எப்படி  இருப்பினும் தம்மை ஓர் இனங்களாக அடையாளம் கொண்ட இனங்கள் அந்த கட்டைவிட்டு  வெளியேறியது கிடையாது.

இலங்கையில் சிங்கள தரப்பினரும் முஸ்லீம்களை இனமாக ஏற்றுக்கொள்ளும் தன்மையில்  தயக்கமான போக்கே காணப்படுகின்றது. அத்துடன் தமிழர்களுக்கு இஸ்லாமியர்கள் பற்றிய  தப்பபிப்பிராயங்களும், நம்பிக்கையின்மையும் தமிழர்கள் போன்றே இஸ்லாமியர் தரப்பில்  தமிழர்கள் பற்றிய சந்தேகங்களும் இருதரப்பினரின் இறுக்கமான மத நம்பிக்கைகளும்  இடையூறாகவே உள்ளன, காலப்போக்கில் இந்த இடைவெளிகள் குறைந்து இன உறவுகள் ஏற்படும்  என்ற நம்பிக்கை சிறிதாகவே உள்ளது.

வடபகுதி தமிழ் மக்களின் உணர்வுகளில் இதர இனத்தவர்களை அங்கீகரிக்கும் பண்பில்  மாற்றங்கள் ஏற்படவில்லை. வரலாற்று ரீதியான உறவு கொண்ட சிங்கள பௌத்தத்துடனான உறவுகள்  பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை. தமிழ் ஊடகங்களும் தலைவர்கள் எனப்படுவோரும் இவை  பற்றி மக்களுடன் பேசவதில்லை. மக்களை வெறும் அரசியலுக்கு வாக்காளர்களாகவே  பயன்படுத்துகிறார்கள். மக்களின் தாழ்வான சிந்தனைப் போக்கிற்கே போராட்ட ஆரம்பகாலங்களில் கூட்டணி போன்று பின்னாளில் புலிகளின் சுத்த இராணுவ கண்ணோட்டம்  அமைந்துவிட்டது. தற்போது மீண்டும் ரிஎன்ஏ அதே மாதிரியான அணுகு முறைகளை  பயன்படுத்தியே தமிழர்களின் வாழ்க்கைகயை தமது சுய நலன்களுக்காக பாவித்து
விட்டுப்போகிறார்கள்.

இலங்கையில் முஸ்லீம்கள் ஆட்சிக்கு வரும் எந்தவோரு கட்சியுடனும் அதிகாரத்தில்  இருந்து கொள்ளும் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் அரசியலை தமிழ் மக்கள் செய்ய  தயங்குகிறார்கள் அல்லது இவற்றை பரீட்சித்துப்பார்க்க கூட தயங்குகிறார்கள். இதற்கான  காரணமாக 1970 களில் ஆரம்பித்த சுயநல அரசியலும் 1977களில் ஊட்டிய இனவாத  நஞ்சுமேயாகும். மக்கள் மறுபக்கம் பார்த்தால் துரோகம் என்ற மனப்பான்மையுடன்  வளர்க்கப்பட்டுவிட்டது. இவற்றை கட்டுடைப்பு செய்ய வேண்டிய நிலையில் வடபகுதி தமிழ்  மக்கள் இருக்கிறார்கள் அதிகாரப்பகிர்வு என்பது என்ன? அதிகாரப்பகிர்வு யாருடன்? என்ற கருத்துக்களில் தமிழ் மக்களுக்கு போதிய அறிவூட்டல்கள் தேவைப்படுகின்றது. இந்த  அறிவூட்டல்களை செய்ய வடபகுதியில் போதிய அளவு அரசியலில் அக்கறை கொண்டவர்கள் இல்லை  எனலாம். அரசியலில் இருப்பவர்களை, இந்த வகையில் அரசியலை சிந்திப்பவர்களை அரசின்  கைக்கூலிகள் தமிழினத்தின் துரோகிப்பட்டங்களை வழங்கி அவர்களது முன் நோக்கிய நகர்வை  புலம்பெயர் ஊடகங்களும் சேர்ந்து தடைசெய்கின்றன.

இனவாதத்தை கக்கி தமது ஆசனங்களை காப்பாற்றிய கூட்டணியும், சுத்த இராணுவ  கண்ணோட்டத்தில் போராட்டத்தை நடாத்திய புலிகளும் இன்று மக்கள் மத்தியில் இல்லை.  ஆனாலும் இந்த இரு தரப்பினரும் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கம்  பாரியதும் வரலாற்று தவறுமாகும். இந்த தாக்கங்களிலிருந்து தமிழ் மக்கள் குறிப்பாக வட  பகுதி மக்கள் வெளிவரமுடியாதுள்ளனர்.

கடந்த 30 வருட போராட்ட யுத்த கெடுபிடிகளினால் மக்கள் தம்மை சுற்றியும் தமது  குடும்பங்களையும் சுற்றியமைத்த இரும்புவேலியை அவர்கள் இன்னமும் அகற்றவில்லை. இந்த  இரும்புவேலியை வடபகுதி மக்கள் இராணுவங்களின் காவல் அரண்கள் உள்ளவரையில் அகற்ற  மாட்டார்கள் என்றே நாம் கருதுகிறோம்.

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக வடபகுதியில் ஏற்படுத்திருந்த பயம் காரணமாக, பொது  முயற்சியில் அக்கறையின்மை, சமூகத்தில் விருப்பமின்மை போன்ற விடயங்களிலிருந்து தமிழ்  மக்கள் வெளிவர மேலும் காலங்கள் எடுக்கும். இன்றைய காலகட்டங்களில் அன்றைய புலிகளின்  நடவடிக்கைகள் போன்று அரசும் அதன் புலனாய்வுத்துறையினரும் தமிழ் மக்கள் மீது  கொடுக்கும் அழுத்தங்கள், இனவேறுபாடு கொண்ட கட்சிகளை அழித்தல் அல்லது உள்வாங்குதல்  அதிலும் ஆட்சியிலுள்ள கட்சியினை நோக்கி தமிழ் மக்களை தள்ளும் நடவடிக்கைகளும்,  மேலும் மக்கள் சமூகத்தில் அக்கறையற்ற நாட்டில் விருப்பமற்ற நிலைமைகளை தோற்றுவிக்கிறது.

இன்று வடபகுதியில் இருக்கும் மக்கள் அரசியல் சக்திகள் ரிஎன்ஏ யும்  ஈபிடிபியுமாகும். இதில் ரிஎன்எ தொடர்ந்தும் தமிழ் மக்களை கடந்தகால சிந்தனைப்  போக்கிலிருந்து வெளியேறி
விடாதவாறு வைத்திருக்கவே விரும்புகிறார்கள். ரிஎன்ஏ யின்  தலைமைகள் இன்றும் மக்களிடம் வாக்கு பெற மட்டுமே செல்கிறது.

இன்று ஈபிடிபி கட்சியினால் மேற்கொள்ளப்படும் மக்கள் உதவிப் பணிகள் போன்று, அந்த  பணிகளுக்காக அரசிடம் இணக்கப்போக்கை கொண்டிருப்பதே சரியானதாகும். இதன் மூலம் மட்டுமே  சமூகத்திற்கு இன்றுள்ள சூழ்நிலைகளிலும் எதிர்கால நிலைப்பாடுகளிலும் சரியாக  உதவிபுரிய முடியும். அரசிடம் கொள்ளும் இணக்கப்போக்கு என்பது ஆட்சிக்கு வரும்  கட்சிகளுடனான இணக்கப்போக்காகவே இருக்கும். இதன் ஊடாகவே தான் அரசின் அதிகாரத்தில்  பகிர்வு பற்றி பேச முடியும்.

இலங்கை அரசு சர்வதேச வல்லாதிக்க அரசுகளின் பாணியில் இலங்கையில் இனங்களை கூறு  போட்டு பிரித்தாளும் தந்திரோபாயங்களை தனது யந்திரங்கள் மூலம் ஒப்பேற்றுகின்றது.  இதில் தொழில் வாய்ப்பில்லாத இளைஞர்களை இராணுவத்தில் இணைத்து இலங்கையில்  பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தல் என்ற போரின் பின்னால் இனங்களிடையே முரண்பாடுகளை  கச்சிதமாக செய்து கொள்கிறது. சிறுபான்மையினரின் வாக்குகளில் தங்கியிருக்க  தேவையில்லை என்ற நிலை இலங்கையில் உருவாகி விட்டதால் சிறுபான்மையினரை  அடக்குவதின்மூலம், பெரும்பான்மையினரின் பாதுகாவலராக தன்னை உருவகித்து இனக்குரோத வளர்ப்பினால்தான் மாறி மாறி ஆட்சிக்கு வந்துகொள்கிறது.

தமிழ் சிங்கள மக்கள் அடிப்படையில் ஓர் இனமக்கள் ஒரே இந்திய கலாச்சார பண்புகளை  கொண்ட மக்கள் என்ற உண்மையை இரு இனங்களுக்கும் எடுத்துக்கூறும் துணிவு இது வரையில்  தமிழ் சிங்கள் தலைவர்கள் முற்போக்குவாதிகள் நாட்டின் பெறுப்பில் உள்ளவர்களிடம்  இல்லை குறைந்தது கிராமிய மட்டங்களில் கூட இவை பற்றி, ஜக்கியம் பற்றி கூற  திராணியற்றவர்களாகவே உள்ளனர். மாறாக கிராமங்களுக்குள் இயங்கும் பௌத்த துறவிகள்  தமிழர்கள், முஸ்லீம்கள் பற்றிய தவறான விசங்களையே சிங்கள மக்களுக்கு  விதைக்கிறார்கள். அவர்களின் வாக்குபலத்தை தமக்கு வேண்டிய கட்சிக்கு திருப்பும்  பலத்தையும் உருவாக்குகிறார்கள்.

தமிழ் பிரதேசங்களில் இராணுவத்தினராலும் பொலீசாராலும் உளவுப்படையினராலும்  செய்யப்படும் ஒவ்வொரு துர்நடத்தைகளும் தமிழ் பேசும் மக்களை இலங்கை அரசுக்கு  எதிராகவே வைத்திருக்கும். இலங்கை பொலீசாரும் இராணுவத்தினரும் தமது இந்த நிலையில்  எந்தவித மாற்றங்களையும் கொண்டுவர முடியாதபடியான அரசியலே இலங்கையில் நடைபெறுகின்றது.  இனங்களிடையே மோதல்களையும், முரண்பாடுகளையும் வைத்தே இலங்கையில் அரசியல் பிழைப்பு  நடாத்தும் அரசியலும் இதன் மூலம் தமது சுய லாபங்களை ஈட்டும் தொழிலுக்காகவே அரசின்  பதவிகளுக்கு எஸ்எல்எப்பி, யுஎன்பியினர் வருகிறார்கள் என்பது வெளிப்படையானதாகும்.  இவர்களின் இந்த அரசியல் நிலைப்பாடுகளை பயன்படுத்தி, பௌத்த துறவிகளும் தமது பௌத்த  மேலாதிக்கத்தை செய்ய முனைகிறார்கள்.

இந்த சிங்களம் பௌத்தம் இணைந்த தேசியவாதம் இன்று இதர மதத்தவர்களுக்கு எதிராக திசை  திரும்பும் ஆபத்தின் நுனியில் உள்ளது.

இன்று இலங்கையில் தமிழ் மக்கள் திட்டவட்டமான அரச எதிர்ப்பு நடவடிக்கைகளையே  செய்கிறார்கள். இந்த நடவடிக்கைகளில் இருந்து அவர்கள் தம்மை தமிழ் மக்களின் அரசியல்  அபிலாசைகளை தீர்க்கும் அரசியல் தீர்வு உருவாகும் வரையில் அரசை எதிர்த்தே நிற்பர்.  இன்றைய தமிழ் மக்களின் அரச எதிர்ப்பு என்பது தமிழ் மக்கள் இலங்கை அரசிடமிருந்து  தனது உரிமைகளை பெற்றுக்கொள்ளும் போராட்டத்தின் ஒரு விடயமே. இதில் ரிஎன்ஏ தாம் தான்  தமிழ் மக்களின் ஏகபோக தலைமை என்று கனவு கண்டால் அவர்களும் பாடங்கள்
கற்றுக்கொள்வார்கள் என்றே நாம் புரிந்து கொண்டோம்.

இணக்க அரசியலுக்கும் எதிர்ப்பு அரசியலுக்குமான இழுபறியில் தமிழர் வாழ்வு  அல்லல்ப்படுகின்றது. இதன் காரணமாக தமிழ் மக்கள் மீண்டும் இன நெருக்குவாரத்துக்கு  உள்ளாக்கப்படலாம். தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளுக்கான போராட்டமாக தேர்தல்களை  மீண்டும் பாவிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்கள் தாமகவே தமது அரசியல் பாதையினை  தெரிவுசெய்து கொள்வார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை. இதற்கான பலமான அரசியல்  பின்தளமின்றி இது சாத்தியமில்லை.

ஆயுதங்கள் அற்ற ஒரு அரசியல் செய்வதற்கான ஒரு ஜனநாயக இடைவெளி இலங்கையில் தற்போது உள்ளது இந்த இடைவெளியை பயன்படுத்த முன்வந்து தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல்  பங்களிப்பு செய்ய, பாரம்பரிய அரசியலில் இருந்து வெளியேறி, சமூகத்தின் சமாதான சக  வாழ்விற்காக புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்க வேண்டும். இந்த அரசியல் பிரவேசத்தில்  மீண்டும் சிக்கலான நிலைமைகளை சந்திக்க வேண்டும். ஆனாலும் கடந்தகால  அனுபவங்களிலிருந்தும் இன்றைய இலங்கை நிலவரங்களிலிருந்தும், சர்வதேச  நிலைமைகளிலிருந்தம், இந்திய பிராந்திய நிலைமைகள், புலம்பெயர் தமிழர்களின் ஆதரவுத்  தளங்களிலிருந்தும் ஆயுதங்கள் அற்ற ஜனநாயக வழிப்போராட்டம் உயர்கிறது. தமிழர் உரிமைப்  போராட்டம், கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல்களுடன் மீண்டும் ஆரம்பித்துள்ளதை நாம்
அவதானித்தோம்.

நீண்ட பல காலமாக இலங்கைத்தீவில் தமிழ்மக்கள் மீது அரசு செலுத்தும் ஆதிக்கம்  பற்றி அவற்றினால் ஏற்பட்ட, ஏற்படும் தவறுகளிலிருந்து தமிழ் சிங்கள மக்கள் பாடங்களை  கற்றுக்கொள்ளும் காலம் தூரத்தில் இல்லை. இந்த பாடங்கள் இவர்களை இலங்கையில் இன  உறவுகள் பற்றிய சிந்தனையை தூண்டும் என எதிர்பார்க்கலாம். இவை இலங்கையில் சிங்கள  தமிழ் மொழி பேசும் மக்களின் இணைந்த உரிமைப்போராட்டத்தை முன்னெடுக்கும் புதிய  அத்தியாயத்தை ஆரம்பிக்கலாம்.

இலங்கையில் சிங்கள மொழிபேசும் தமிழ் மொழி பேசும் மக்களின் உறவும் கலாச்சார  மேம்பாடும், இணக்க அரசியலில் மத்தியில் கூட்டாட்சியும், பாரம்பரிய இனவாத, மதவாத  பிற்போக்கு அரசியல் கொள்கைகளை தூக்கி எறிந்து சமதர்ம கொள்கைகளை பின்பற்றுவதே  சரியான, பலமான ஆயுதம் என்பதை உறுதியாக உணர்வார்களா?.

எங்கள் குடும்பத்துடன் பல்வேறுபட்ட இலங்கையின் இடங்களுக்கு  எம்முடன் இணைந்து பிரயாணங்களை மேற்கொண்ட 16 குடும்பத்தவர்களுக்கும், பலஇடங்களில்  தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டவர்களுக்கும், எம்மை வேறு பல அனுபவசாலிகளிடம்  கூட்டிச்சென்று பேச உதவியவர்களுக்கும், ஒலி/ஒளி மூலம் பதிவுகளைபெற  அனுமதித்தவர்களுக்கும், பல இடங்களில் எமக்கு உதவி செய்த அரச ஊழியர்கள்,  இராணுவத்தினர், பொலீசாருக்கும் எமது நன்றிகள்.

sothi@btinternet.com

No comments:

Post a Comment