November
21st, 2009
வவுனியா தமிழருக்கு
நாம் தீண்டத்தகாதவர்கள்; முகாமிலிருந்து வெளியேறிய பெண்ணின் சாட்சியம்: ரி சோதிலிங்கம்
& எஸ் குமாரி
எஸ் குமாரி, சோதிலிங்கம்
ரி,
கட்டுரைகள்/ஆய்வுகள் கிளிநொச்சியில் வாழ்ந்த ஒரு குடும்பத்தினர் முகாம் வாழ்க்கையின் பின்னர் அங்கிருந்து வெளியேறி வவுனியாவிற்கு இம்மாதம் 5ம் திகதி வந்துள்ளனர். கிளிநொச்சியில் தமது உயர்தர வகுப்புப் படிக்கும் இரு பிள்ளைகளையும் புலிகளிடமிருந்து பாதுகாக்கப் போராடி, பின்னர் செல்லடிக்குள் உயிர் தப்பினால் போதுமென போராடி, மாசி மாதத்தில் ஒரு பிள்ளையைப் பிரிந்த நிலையில் இவர்கள் முகாமிற்கு வந்தனர். ஒரு மாதத்தின் பின்னர் மற்றைய பிள்ளையை உறவினர்களுடன் சந்தித்த போதிலும் அவர்களின் மகன் புலிகளின் வலுக்கட்டாய பயிற்சியில் 10, 15 நாட்கள் அகப்பட்டதால் தற்போது நலன்புரி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்களில் 2006ம் ஆண்டின் பின்னர் புலிகளால் கட்டாயப் பயிற்சிக்கு உட்படுத்தப் பட்டவர்களை ஒரு வருடத்தின்பின் தாம் விடுவிப்போம் எனக் கூறியுள்ளனர் எனவும் அவர் சொன்னார்.
தம்முன்னால் மகன் புலிகளால் இழுத்துச் செல்வதை கண்டு இருதய நோயால் பாதிக்கப்பட்ட கணவருடனும் மற்றைய பிள்ளையுடனும் முகாமினுள் அடுத்த போராட்ட வாழ்வை வாழ்ந்தார்கள். வெய்யில் என்றால் இருக்க முடியாத வெக்கை, மழை என்றால் ஈரம் ஊறும் நிலத்தில் பொலித்தீன் துணையுடன் படுக்கை, விடியமுதல் வரும் இலையான்கள், அட்டைகள் பாம்புகள் சுண்டெலிகள் இவற்றுடனும் ஒரு போராட்டம். தற்போது இவற்றைத் தாண்டி வவுனியா வந்தபோதும் தமது போராட்டம் ஓயவில்லை எனக்கலங்கினார்.
தாம் வவுனியாவில் எதிர்நோக்கும் வேதனைகளையும் எப்போது கிளிநொச்சி போவோம் எனகாத்திருப்பதன் காரணங்களையும் எம்முடன் உரையாடுகையில் வெளிப்படுத்தினார்.
நாம் வவுனியாவுக்குப் பதிவுசெய்து ஒருமாதிரி முகாமைவிட்டு வெளியேறிவிட்டோம். இங்கு வந்தால் நாங்கள் கிளிநொச்சிக்காரர் முகாம்காரர் அகதிகள் என்று வவுனியா மக்களுக்கு எங்களில் ஒரு கீழ்த்தரமான எண்ணம். முகாம்காரர் என்றால் ஏதோ குப்பைகள் கூளங்கள் என்றமாதிரி தாழ்வான எண்ணங்கள். எங்களோடு ஒட்டமாட்டினம்.
பள்ளிக்கூடம் போனால் முகாம்பிள்ளை என்று சுட்டிக் காட்டப்படுகிறார்கள். வித்தியாசமாய் நடத்துகிறார்கள். நாங்கள் அனுபவித்தமாதிரி வவுனியா மக்கள் அனுபவிக்கவில்லை. எங்களுக்கு இது சரியான தாக்கமாய் இருக்கிறது. எல்லாம் இழந்து வந்திருக்கிற எங்களை இவர்கள், வேறொங்கோ உலகத்திலிருந்து வந்த தீண்டத்தகாத ஆட்கள் மாதிரி நடத்துகிறார்கள்.
குடியிருக்க வீடு பார்க்கப் போனால் ஒரு இன்ரவியூவே நடத்துவினம். உங்களுக்கு எத்தனை பிள்ளைகள் என்ன வயது. பிள்ளைகள் எங்கே. ஒருபிள்ளை நலன்புரி முகாமில் இருக்கிறதென்று சொன்னாலும் பிரச்சினை. வீடு தரமாட்டாங்கள் என்ற பயம். சொல்லாவிட்டாலும் என்ன நடக்குமோ என்ற பயம். என்ன சொல்வது என்று தெரியாமல் தவிக்கிறோம். வசதியாக இருந்தவர்கள் என்று சொன்னால் வாடகை கூடக் கேட்பாங்களோ என்ற பயம். வசதி குறைந்தவர்கள் என்று சொன்னால் வீடு தரமாட்டார்களோ என்ற பயம். நேற்று முழுக்க வீடு பார்க்கப்போய் ஒவ்வொரு விதமான ஆட்களை சந்தித்து வந்தோம். ஜந்தாம் திகதி வந்தோம் இன்னும் ( Nov 18ம் திகதி) வீடு எடுக்க முடியாமல் அலைகிறோம்.
இரண்டு அறைகள் கொண்ட ஒரு மண்குடிசையில் ஒரு அறையில் நான்கு குடும்பம் இருக்கிறோம். இந்த வீட்டில் இருப்பவர்கள் எமக்கு உறவானவர்கள். எமக்கு சில மாதங்கள் முன்பாக வெளியேறினவர்கள். அட்வானஸ் றென்ட் என்று வீட்டுக்காரர் வாங்குவார்கள் ஆனால் மழைக்கு எல்லாப் பக்கத்தாலும் ஒழுக்கு ஒன்றும் செய்து தரமாட்டார்கள். எல்லாம் நாமே பார்த்துக்கொள்ள வேணும். புதிதாக ஒரு தட்டிகூட இறக்க விடமாட்டார்கள். நாங்கள் எவ்வளவு காலம் இருக்கலாம் என்று எதுவும் சொல்ல மாட்டினம் இருந்தாப்போல் எழும்பச் சொன்னால் எழும்ப வேணும் இதில் எதை நம்பி எந்தப் பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பது என்றும் யோசிக்க வேணும்.
ஆஸ்பத்திரிக்குப் போனால் நீங்கள் முகாம்காரரோ. கடைக்குப் போனால் நீங்கள் முகாம்காரரோ. எங்கை போனாலும் கிளிநொச்சிகாரரோ முகாம்காரரோ அகதிகளோ என்று தாழ்வான எண்ணங்களே.
இடம்பெயர்ந்து வந்தனாங்கள் கையில் ஒன்றும் இல்லாமல் வந்தனாங்கள் இங்கையெண்டாலும் பிள்ளைகளைப் படிப்பிப்பம் என்று போனால் ‘என்ன சீருடை இல்லாமல் வாறீங்கள்’ என்று கேள்வி. பிள்ளைகளுக்கு ரெஸ்ட் வைத்துத்தான் எடுப்பார்கள். 3ம் வகுப்புப் பிள்ளைக்கும் தேவாரம் பாடச்சொல்லி வாய்பாடு கேட்டார்கள். பாஸ் என்றால்தான் சேர்ப்பார்கள். பெயில் விட்ட பிள்ளையென்றால் எங்கு போகுமோ எனக்குத் தெரியாது. பிள்ளைகளுக்கு படிப்பு முக்கியம் என்று அங்கு போனால் ‘என்ன நீங்கள் நிறச்சட்டை போட்டுக்கொண்டு வந்திருக்கிறீங்கள்? என்ன ஒண்டும் தெரியாதனீங்களே வன்னியில் இருந்தனீங்கள். யூனிபோம் போடவேணுமெண்டு தெரியாதோ?’ என்று கேள்வி. ஆசிரியர்கள் அதிபர் இவர்கள் எல்லாம் படித்தவர்கள் பண்பானவர்கள் நாட்டுநிலைமை தெரிந்தவர்கள் இந்தப் பிள்ளைகள் எந்தச் சூழ்நிலையில் இருந்து வந்தவர்கள் என்று யோசிக்கவில்லைத்தானே. அன்பாக என்றாலும் அவர்களை வரவேற்று கைகுடுக்கத் தெரியவில்லை. டீசன்ட் டிசுப்பிளின் தெரியாதவர்களா இவர்கள்.
வவுனியாவில் பள்ளிக்கூடங்களிலும் வசதிகள் குறைவு. முகாமில் இருந்த படிப்பு இங்கு இல்லை. முகாமினுள் அங்கிருந்து வந்த ரீச்சர்மாரே படிப்பித்தாங்கள். மேசை கதிரை கூட இல்லை. ஒருசில பிள்ளைகளுக்குத்தான் மேசை கதிரை இருந்தது. பிள்ளைகள் நிலத்தில் இருந்து மடியில் வைத்து எழுதுவாங்கள். இருந்த வீடுகளுக்கு லைட் இல்லை. பிள்ளைகள் றோட்டு லைட் வெளிச்சத்தில்தான் படிப்பார்கள். றோட்டு லைட்டுக்கு கீழே பாயைப் போட்டுவிட்டு மடியில் புத்தகங்களை வைச்சுப் படிப்பாங்கள். ஏதோ அந்த நிலைமைகளுக்கேத்த மாதிரி உணர்ந்து அவங்களும் இருந்தாங்கள். இங்கை பள்ளிக்கூடத்திலும் முகாம் பிள்ளையைப் பாருங்கோ நல்லாசெய்யுது என்று மற்றப் பிள்ளைகளுக்கு ரீச்சர் சொன்னாவாம்.
எதற்கும் முகாம் பிள்ளை முகாம்பிள்ளை என்று பிரித்துத்தான் பார்ப்பார்கள். ஒருக்கா உழுக்குளம் பாடசாலையில் ஒரு பிள்ளைக்கு குளவி கடித்து விதையொன்று வீங்கிவிட்டது. பிள்ளைக்கு அதில் ஒப்பறேசனும் செய்த இடம். ரீச்சரிடம் பிள்ளை போய் தனக்கு இப்பிடி என்று சொல்ல அவ அதிபரிடம் அனுப்பிவிட்டா. அதிபர் இன்னும் ரெண்டு பிள்ளைகளைப் பிடித்து அவர்களுடன் வீட்டுக்கு அனுப்பிவிட்டார். பிள்ளைக்கு எங்கை நோகுது என்ன நடந்தது என்று ஒருத்தரும் பார்க்கவேயில்லை. இன்னொரு பிள்ளைக்கு கிபீர் சத்தம் கேட்டாலே மயக்கம் வரும். ஒருக்கா கிபீர் வருகுதென்று ஓடிப்போய் ஒழிக்கையில் பிள்ளையின் தலையில் அடிபட்டுவிட்டது. பிள்ளைக்கு கை கால் குளிர்ந்து மயங்கி ஒருமாதிரி வந்து மருந்தெடுத்தது. சில நேரங்களில் அவனுக்கு ஒருமாதிரி வரும். நல்லாய் படிக்கக்கூடிய பிள்ளை. அந்தப் பிள்ளையின் பிரச்சினை என்னவென்று தெரியாமல் அவனை பழக்கவழக்கம் தெரியாத பிள்ளை என்று பேசியிருக்கினம். எங்கடை பிள்ளைகளை எப்பவும் தாழ்வாய்த்தான் நடத்துவினம். சரியான கவலையாக இருக்குது. முகாமிலை தண்ணியதுகள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை முகாமிலேயே இருந்திருக்கலாம். வெளியாலை வந்து வவுனியாச் சனங்களோடை துன்பப்படுவது பெருங் கவலையாக இருக்கிறது.
நாங்கள் இங்கை படுகிறபாடு நீங்கள் இங்கை வந்து பார்த்தால்தான் தெரியும். என்னென்ன கஷ்டங்கள் எல்லாம் அனுபவிக்கிறம். என்ன வாழ்க்கையோ. புலிகளின் கட்டாயப் பயிற்சிக்காக சேர்க்கப்பட்ட எமது குழந்தைகள் இப்போது புலிப்பட்டம் சூட்டப்பட்டு உள்ளுக்கிருக்கினம். பொதுமக்கள் எங்களுக்கு அகதிப்பட்டமும் கம்பிவேலி வாழ்க்கையும். வவுனியா தமிழருக்கு நாம் தீண்டத்தகாதவர்கள். நாங்கள் வீடுவாசல் சொத்து சுகம் பிள்ளைகள் படிப்பு எதிர்காலம் எல்லாத்தையும் இழந்து போதாதற்கு வவுனியாவில் மரியாதையும் இழந்து நிக்கிறோம். முகாம் போன ஆட்கள் எல்லாம் பயிற்சி எடுத்த ஆட்கள் என்று பார்க்கினமோ என்னத்தை நினைத்துக்கொண்டு எங்களை இப்படி நடத்துகிறார்களோ தெரியவில்லை. இங்கையிருந்தும் ஒரு இடம்பெயர்வு வரும் என்றுதான் நான் நம்புகிறேன்.
இங்கு காசுக்குத்தான் முதலிடம். வன்னிக்குள் உறவினர்களுடன் நாங்கள் எப்பிடி வாழ்ந்தம். வன்னிக்குள் இருந்த எல்லாரும் ஒன்றாய்தான் இடம்பெயர்ந்து வந்தனாங்கள். ஆனால் இங்கை வந்து பார்த்தால் சொந்தக்காரரோ தள்ளி நிக்கிறாங்கள். வன்னிக்காரரோடை அண்டினால் பிரச்சினையாம். வீடுவாசல் கொடுப்பதற்குப் பஞ்சிப்படுகினம். சில சொந்தங்களுக்கு போன் பண்ணினால் எடுக்கிறாங்களேயில்லை. உங்களையெல்லாம் வைச்சிருந்து விட்டு பிறகு கோட்டு வழக்கு பொலிஸ் என்று நாங்கள் அலைய ஏலாது என்று சிலர் சொன்னார்கள். சொந்தங்களை வைத்திருந்தால் தமக்கு பொறுப்பு செலவு என்று வந்துவிடும் என்றும் யோசிக்கிறார்கள் போலிருக்குது. முகாமுக்குள் இருந்தவர்களை சொந்தச் சகோதரமே வந்து பார்ககாமலும் இருந்திருக்கினம். பிறகு தமக்கு ஏதும் தொல்லை வந்திடுமோ என்ற பயம். எனது தம்பி குடும்பம் முகாமில் இருக்கிறார்கள் அவர்களைப் பார்க்கப் போனபோது இங்கு நாங்கள் படுகிற கஷ்டம் எல்லாத்தையும் சொன்னோம். அங்கிருந்த அதிபர் ஒருவரையும் சந்தித்து கதைத்தேன். வவுனியா வந்து அடிமை வாழ்க்கை வாழுவதைவிட இங்கேயே இருந்துவிட்டு நாம் நேரடியாக கிளிநொச்சிக்கே போவோம் என்று முடிவெடுத்துள்ளார்கள். இந்த 54 வயதில் எதுவுமில்லாமல் வந்து இனிமேல்தான் புதிதாக எல்லாத்தையும் ஆரம்பிக்கவிருப்பதை நினைத்தால் பயமாக இருக்கிறது என்றார்.
‘கிளிநொச்சி போக விடுகிறாங்களில்லை. ஏன் என்றும் தெரியாது. நாங்கள் எல்லோரும் எப்பிடி ஒன்றாய்ச் சேர்ந்து புலிகளை மீறி இராணுவத்திடம் வந்து சேர்ந்தோமோ எப்படி உந்த செல்லடி குண்டடிக்குள்ளால அடிபிடிக்குள்ளால் வெளியே வந்தோமோ அதேமாதிரி இனி வவுனியாவிலிருந்து நாங்கள் எல்லோருமாக சேர்ந்து உந்த முள்ளுவேலி இராணுவத்தை தள்ளிப்போட்டு கிளிநொச்சிக்கு வெளிக்கிட்டுப் போவதுதான் ஒரே வழி போலுள்ளது’ என வேகத்துடன் சொன்னார்.
This entry was posted on Saturday, November
21st, 2009 at 6:47 pm and is filed under எஸ் குமாரி, சோதிலிங்கம் ரி, கட்டுரைகள்/ஆய்வுகள். You can follow
any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own
site.
1. Arasaratnam
on November 26, 2009 8:30 pm
முகாங்களிவிருந்து
வெளியே போகும் மக்கள் இதபோல இன்னம் எள்னென்ன சிக்கல்களை எதிர்கொள்ளுகிறார்களோ.
அந்தந்த இடத்த எம்பிமார் இதை கவனத்திற்கெடுத்து செயற்பட வேண்டும்
No comments:
Post a Comment