Search This Blog

Friday, 16 May 2014

”இந்த உயிர்களை கொண்டுவரப் பட்டபாடு கடவுள் ஒருத்தனுக்குத்தான் தெரியும்.” முள்ளிவாய்காலின் சாட்சியம் : ரி சோதிலிங்கம் & எஸ் குமாரி

October 30th, 2009

”இந்த உயிர்களை கொண்டுவரப் பட்டபாடு கடவுள் ஒருத்தனுக்குத்தான் தெரியும்.” முள்ளிவாய்காலின் சாட்சியம் : ரி சோதிலிங்கம் & எஸ் குமாரி

Category: எஸ் குமாரி, சோதிலிங்கம் ரி, நேர்காணல்கள் 
வன்னி முகாம்களில் உள்ள ஒவ்வொருவருமே இலங்கைத் தமிழ் மக்களின் வரலாற்றில் ஏற்பட்ட மிக முக்கிய திருப்புமுனையின் வரலாற்றுச் சான்றுகள். இவர்கள் ஒவ்வொருவருடைய வரலாற்றுப்பதிவும் மிக முக்கிய சாட்சியங்கள். அந்த வகையில் வன்னியில் உள்ள மக்களுடன் தேசம்நெற் தொடர்ச்சியாகத் தொடர்புகளை மேற்கொண்டு அவர்களுடைய கருத்துக்களையும் தகவல்களையும் பதிவு செய்து வருகின்றது. அதன் தொடர்ச்சியாக வன்னி முகாம்களில் உள்ள சிலரின் கருத்துக்களையும் அவர்கள் தந்த தகவல்களையும் தேசம்நெற் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

ஒக்ரோபர் 16ல் வன்னி முகாமுக்கு தொடர்பு கொண்ட போது உருத்திரபுரம் 8ம் வாய்க்காலைச் சேர்ந்த குடும்பஸ்தருடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பை நாம் முன்னர் உரையாடியவர்கள் ஏற்படுத்தித் தந்தனர். இரண்டு பெண் குழந்தைகள் ஒரு பையன் என மூன்று குழந்தைகளின் தந்தையான இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவராக இருந்த போதும் பின்னைய வாழ்வு கிளிநொச்சியிலேயே சங்கமமமாகியது. இவரது பிள்ளைகள் பெரும்பாலும் யாழ்ப்பாணத்தை தெரிந்திருக்கவில்லை. அவருடனான நீண்ட உரையாடல் முள்ளிவாய்க்காலின் கடைசி நாட்களைக் கண்முன் கொண்டு வந்த நிறுத்தியது. கேள்வியைக் கேட்பதற்கு எம்மிடம் தைரியம் இல்லை. அவர் என்ன சொன்னாரோ அதனைப் பதிவு செய்தோம். அவருடைய வார்த்தைகளிலேயே உங்கள் முன் பதிவிடுகிறோம்.
‘நான் உருத்திரபுரம், வட்டக்கச்சி, கட்டைக்காடு, விஸ்வமடு, பாரதிபுரம், ஆச்சிக்காணி, இருட்டுமடு, சுதந்திரபுரம், பொக்கணை, முள்ளிவாய்கால் என்று அலைந்து கடைசியில் வன்னி முகாமுக்கு வந்திருக்கிறேன்.

எங்களைக் கொண்டுவந்து முதலில் zone 4ல் விட்டார்கள். இப்ப இரண்டு மாதமாக அருணாசலம் முகாமில் ஒரு யுனிற்ரில் இருக்கிறோம். zone 4 முகாம் செட்டிக்குளம் காட்டுக்குள் இருக்கும் ஒரு சின்ன முகாம். கடைசியாக புலிகளின் பிரதேசத்திலிருந்து வந்தவர்களை இங்கே வைத்திருந்தார்கள். கடைசியாக பிரபாகரனுடன் இருந்த ஆட்கள் என்பதால் இந்த முகாமை ஆமியும் பொலிசும் இது பிரபாகரன் முகாம் என்றும் சொல்வாங்கள்.

புலிகள் கடைசியாக நகை அடைவு பிடித்தவர்கள். இது புலிகளின் வைப்பகம். இந்த வைப்பகத்தில் சனங்கள் நகைகளை அடைவுவைத்து காணி, விதைப்பு, உழுவதற்கு நிலம்வாங்க, உரம்வாங்க, புலிகளிடம் காசு கடன் வாங்குவது வழக்கம். மே மாத தொடக்கத்தில் குடும்ப அட்டை இலக்கங்களைத் தந்துவிட்டு உங்கட நகைகளை எடுத்துக் கொண்டு போங்கோ எனச் சொன்னார்கள். பின்பு நீங்கள் காசு கட்டலாம் என்றும் சொன்னார்கள். ஆனால் பிறகு இதையெல்லாம் நிப்பாட்டிப் போட்டுப் போயிட்டாங்கள். ஒருவருக்கும் ஒன்றும் கொடுக்கவில்லை.

பிறகு பார்த்தால் மூன்று உரப்பை நிறைய காசு வந்து கிடந்தது. புலிகள் மூன்று பேர் நின்று ‘காசை அரசாங்கம் எடுத்துப்போடும். சனங்களுக்கு கொடுப்பம்’ என்று சொன்னாங்கள். மற்றவன் ஒருத்தன் சொன்னான் ‘காசு கொடுக்க வெளிக்கிட்டால் சனம் கூட்டம் கூட அவன் ஷெல் அடிப்பான் சனம் சாகும்’ என்று சொல்லிப் போட்டு காசை எரித்து விட்டார்கள். வெள்ளைமுள்ளி வாய்க்கால் அங்காலையும் கடல் இங்காலையும் கடல். ஒரு குறிப்பிட்ட இடம்தானே. ஒரு மூலையில்தான் இருந்தனாங்கள். தொகையான சனங்கள். காசுக்கு சனம்குவிய வெளிக்கிட்டால் குண்டடிப்பான் என்றுதான் முழுக்காசையும் எரிச்சவங்க. ஒரு கிழவிக்கு மட்டும் 18 லட்சம் ரூபாய்கள் கொடுத்தாங்கள். அதை தபால் வாற பையில் போட்டுக்கொண்டு வந்தவ. முழுக்க 2000 நோட்டுகள் புதுக்காசு. எல்லா நோட்டிலும் கடைசி ரெண்டு சைபரும் வெட்டிக்கிடக்குது. அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை. zone 4 வரைக்கும் கொண்டு வந்தவ.

5ம் மாதம் முதற் கிழமையிலிருந்து திரும்ப யோசித்தால் மிகப் பயங்கரம். 5ம் மாதம் 8ம் திகதிக்குப் பின்னர் எந்த உடல்களும் யாரும் புதைப்பதில்லை. எங்க பார்த்தாலும் உடல்கள். கடைசிச் சண்டை உக்கிரம். புலிகளும் சாரம் சேட்டுடன் ஆமிக்காரனும் சாரம் சேட்டுடன். யார் எவன் என்று தெரியாமல் நிக்கிறாங்கள். எல்லாப் பக்கமும் எல்லாரும் மாதிரி இருந்தது. முன்பு அரிசிக் கப்பல் புலிகள் வைத்திருந்தார்கள். அந்த இடத்தில் பனைகள் மரங்கள் திடீர் திடீரென எரியும். உக்கிரமாய் புலியும் ஆமியும் அடிபடும்.

நந்திக் கடலுக்குள்ளால் ஒருக்கா தப்பி ஓடிவர முயற்சிக்கையில் என்னுடைய பிள்ளையை புலிகள் பிடித்துப் போட்டாங்கள். எப்படி பிள்ளையை விட்டிட்டு வாறது. அதாலை நாங்கள் திரும்பிப்போய் அங்கேயே இருந்தோம். பிள்ளையையும் கூட்டிக்கொண்டு வரவேணும் எண்டதால் புலிகளின் இடங்களிலேயே சுத்தித் திரிந்தேன். எனது ரக்டர் அங்கு நிண்டது. தென்னங்குற்றிகள் ஏற்ற ரக்டர் ஓட வரச்சொல்லி புலிகள் கேட்டாங்கள். இப்படிச் செய்துகொண்டு இருக்கும்போது 5ம் மாதம் ஒன்பதாம் திகதி எனது பிள்ளையைக் கண்டேன். புலிகள் பிள்ளைக்கு பெற்சீற்றில ஒருசட்டையும் காற்சட்டையும் தைத்துக் கொடுத்திருந்தார்கள். பிள்ளையை ரக்டர் பெட்டிக்குள் தாய் ஏறச்சொல்ல பிள்ளை ஏறிவிட்டது. தளப்பாரால் பிள்ளையை மூடிக்கொண்டு வேற இடத்துக்கு வந்துவிட்டோம். 5, 6 நாளாக எங்களுக்கு சாப்பாடு இல்லை.

அங்க எங்கட ரென்ருக்கு முன்னுக்கு இருந்த தாய் தகப்பன் மகன் 3 பேரும் குண்டு விழுந்து ரென்டுக்குள்ளேயே முடிந்துவிட்டார்கள். பக்கத்து ரென்ட் கடைக்காரர் குடும்பம் 16 பேர். 16 பேரும் முழுதாக முடிந்து போனார்கள். எல்லாரும் ரென்ருக்குள் இருப்பதால் யாருடைய ஷெல் வந்து விழுகிறதென்று தெரியாது. எங்களுக்கு தெரிந்த ஆட்களின் உடல்களை உடனேயே எடுத்துப்போய் புதைப்போம்.

நாங்கள் 5 பேர். பிறகு இன்னொரு உறவினர்களும் சேர்ந்து கொண்டார்கள். இந்தக் காலத்தில் தப்பி ஓடுபவர்களை உடனடியாகச் சுடுவது வழக்கமாகி விட்டது. எங்களுக்குப் பக்கத்தில் ஒரு கலியாணம் கட்டாத வயது வந்த பெண் நின்றவ. அவ ‘சாப்பாடு இல்லை. பசி பட்டினியாய் இருக்குது. எங்களை போக விடுங்கோ’ எண்டு கேட்டு பேசுபட்டா. அவவை புலிகள் எங்களுக்கு முன்னாலேயே சுட்டாங்கள். எங்களை திரும்பிப் போகும்படி சொன்னாங்கள். வந்த இடத்திற்கு திரும்பிப் போய் ரக்டருக்குக் கீழே படுத்துக் கிடந்தோம். திரும்ப இரவு ஒன்பது மணிக்கு தப்பி ஓட நந்திக் கடல் பக்கம் வந்தோம். அன்றுதான் 72 மணித்தியாலத்தில் வெள்ளை முள்ளி வாய்க்கால் பிடிக்கிறது என்ற கடைசித் தாக்குதல் நடந்தது. இந்த இரவில் மட்டும் 1200 பேர்வரையில் செத்திருப்பார்கள். ரக்டர் பெட்டிக்கு கீழே லொறிக்குக் கீழே படுத்திருந்த ஆட்கள் என்று பலர் செத்துப் போச்சினம். தெருத்தெருவா எங்கை பார்த்தாலும் உடம்புகள் துண்டுகள் எண்டு பெரிய அழிவு.

கடைசியாய் 7 பஸ்ஸில் வரக்கூடிய ஆட்கள் மட்டுமே மிச்சம். இது 16ம் திகதி 5ம் மாதம். அப்பவும் புலிகள் ‘ஜசிஆர்சி வரும். ஒபாமா கப்பபல் வரும். போக வேண்டாம்’ என்று எங்களுக்குச் சொன்னார்கள்.
இப்பவும் புலிகளிடமிருந்து தப்பிவர நாங்கள் 18, 20 பேர்கள் வந்து இன்னுமொரு ரக்டர் பெட்டிக்குக் கீழே இருக்கிறம். 2, 3 பிரிவாக சனங்கள் படுத்திருக்கிறம். விடிய எழும்பி கேட்டால் குண்டு விழுந்திருக்குது. குடும்பத்தில் ஒரு பிள்ளையைத் தவிர மற்றவை எல்லாரும் சரி. குண்டுகள் எல்லா இடமும் எல்லா நேரமும் விழுகுது. யார் யாருக்கு என்ன எண்டு எதுவுமே தெரியாத இரவு. விடிந்தபிறகு பார்க்கிறதுகள்தான் மிச்சம்.

இங்க காம்பில் என்னோட என்ர எல்லாப் பிள்ளைகளும் இருக்கினம். பொழுதுபட இரவு நேரங்களில் சிஜடி வந்து எண்ணிப் பார்ப்பார்கள். இரவில் பெண்பிள்ளைகளை அம்புலன்ஸ் வந்து ஏற்றிக்கொண்டு போறாங்கள். விடிய கொண்டுவந்து விடுகிறாங்கள். கேட்டால் விசாரணை என்று சொல்கிறாங்கள். முகாமில் இருக்கிறவங்கள்தான் பொலிசுக்கு சொல்லிக் கொடுக்கிறது. ‘இந்தப் பிள்ளை புலி. புலிக்குப் பயிற்சி எடுத்தது’ என்று. இதை அவங்களும் நம்பி பிள்ளைகளை வவுனியா கச்சேரிக்கு முன்பாக ஒரு தகரத்தால் அடித்த சின்ன முகாம் உள்ளது. அங்கே கொண்டுபோய் விசாரிப்பாங்கள். பின்பு விடிய கொண்டுவந்து விடுவாங்கள். பிள்ளைகளை கொண்டு போனால் பின்னாலை தாய்மாரும் வெளிக்கிட்டு விசாரணை நடத்துற இடத்துக்குப் போய்விடுவினம். அம்புலன்ஸ்தான் பிள்ளைகளை எடுத்துக்கொண்டு போகும். ஏன் அப்படி இரவில் கொண்டு போகவேணும் என்று எனக்குத் தெரியாது. பிள்ளைகளுக்கு அப்பிடி ஏதுமொண்டு நடந்தால் பிள்ளைகள் தாய் தகப்பன் குடும்பம் மனம்சோர்வாக அழுது புலம்பிக்கொண்டு இருப்பினம். இல்லையோ? அப்படி நான் காணவில்லை. எங்கட முகாமிலை பெடியள் ஒருத்தரையும் அப்படி பிடிச்சுக்கொண்டு போகேல்லை. புலிகளில் இருந்த பெடியங்கள் என்று எங்கட காம்பில் ஒருத்தரும் இல்லை. அப்படி ஒண்டும் இல்லை.

முன்பு புலிகளில் இருந்தவர்களை ஓமந்தை வவுனியா மடுக்கந்தை பொலனறுவை இப்படியான இடங்களிலை உள்ளுக்கை கொண்டு போய் வைத்திருக்கிறாங்கள். தாய் தகப்பன்மார் ஜிஏ, ஜிஎஸ் மூலம் கடிதம் எழுதிக் கொடுத்து அனுமதி பெற்று மாதத்திற்கு ஒருக்காப் போய் பார்த்திட்டு வரலாம். அங்கே சாப்பாட்டுக்கு கன்ரீன் இருக்காம். காசு இருந்தால் எதுவும் வாங்கலாமாம். தாய் தகப்பன் போய் பார்த்திட்டு தங்களிட்ட இருக்கிற காசுகளை கொடுத்திட்டு வந்திருக்கிறார்கள். கொலை செய்யப்படுகிறார்கள் காணாமல் போகிறார்கள் என்று அப்படி ஏதும் நடப்பதாக பெற்றோர்கள் போய் வந்தவர்கள் சொல்லவில்லை. அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதாகத்தான் போய் பார்த்திட்டு வந்தவர்கள் சொல்கினம்.

நாங்கள் தங்கி இருக்கிற யுனிட்டுக்கு வெளிநாட்டவர்கள் யாரும் வரமுடியாது. இங்கை எங்கட குடும்பத்திற்கு (ஜவர்) தண்ணீர் 6 லீற்ரர் மட்டும்தான். அதுவும் சிலவேளை இரவு 10 மணிக்குத்தான் கிடைக்கும். தண்ணீர் பெரிய தட்டுப்பாடு.

சாப்பாடு என்றால் மா அரிசி பருப்பு கிடைக்கிறது. வெள்ளிக் கிழமைகளில் தருவாங்கள். மற்ற எல்லாச் சாமான்களும் நாங்கள்தான் வாங்க வேணும். ஒருநாளைக்கு நூறு ரூபாவாதல் வேணும். சிலவேளை யாரும் நிறுவனங்கள் வந்தால் சட்டி, பானை, கரண்டிகள் தருவினம். முந்திமாதிரி சமைச்ச சாப்பாடு தாறதில்லை. நாங்கள்தான் சமைப்பது. பலநோக்குக் கூட்டுறவுச்சங்கம் உள்ளது. வெள்ளியும் செவ்வாயும் மரக்கறி வரும். வேற ஏதாவது தேவை எண்டால் காசு கொடுத்துத்தான் வாங்கவேணும்.

உடுப்பு துணிகள் யாரும் பார்க்க வருபவர்கள் கொண்டு வந்து தந்தாலேயொழிய மற்றும்படி வேற ஒண்டும் இல்லை.

ரொய்லெட் சிலவேளை கிழமைக் கணக்காய் துப்பரவு பண்ணாமல் இருக்கும். இருந்திட்டு ஒரு நாளைக்குத் தான் துப்பரவு செய்வாங்கள். ரொய்லெட் பெரிய பிரச்சினை.

ரென்ட்ருகள் மழை வந்தால் இருக்க ஏலாது. பெரிய பிரச்சினை வரலாம். தண்ணி உள்ள வரும். 13ம் யுனிட், 3ம் யுனிட் இருப்பது பள்ளமான இடங்களில். மழை வந்தால் மழை வெள்ளத்தில் நீந்த வேண்டிவரும். இப்ப கொஞ்சம் கொஞ்சமாய் ஆட்களை எங்கேயோ கொண்டு போறாங்கள். எங்கேயோ புது காடுவெட்டி புது முகாம் போடுவதாகக் கேள்விப்படுகிறோம். எங்க என்று தெரியாது. மழைவந்தால் இங்க இருக்கேலாது எண்டதாலதான் மாத்துறாங்கள்.

வன்னியில் என்ன நிலவரம் என்று எமக்கு எதுவுமே தெரியாது. வேறு இடத்து செய்திகள் என்று கேட்க எங்கட காம்பில் ரேடியோ இருக்கிறது. தனித்தனிய எல்லோரிடமும் ரேடியோ இருக்கிறது. ஜபிசி ரேடியோ புலிரேடியோ எண்டு கேட்பதே பயம். ஜபிசி புலி ரேடியோ என்று பொலிஸ்காரனே சொல்வான்.

எங்களில் ஜந்துபேர் இன்னொரு குடும்பம் ஆறுபேர் பதினொரு பேர் இருக்கிறம். ஒரு தளப்பார் இருக்குது. பெண்களை உள்ளே படுக்க விட்டுவிட்டு ஆண்கள் வெளியே படுத்துக் கொள்வோம். இரவு பத்து மணிக்குப்பிறகு லைற் ஓவ் பண்ணிடுவாங்கள். எங்களுக்கு லாம்பு தந்திருக்கு.

பள்ளிக்கூடம் பக்கத்தில் உள்ளது. பின்னேரம் ஒரு மணிமுதல் மூன்று முப்பது வரை நடக்கும். பிள்ளைகள் பள்ளிக்கூடம் போகிறார்கள். 15ம் யுனிற்றிலும் 6ம்யுனிற்றிலும் ஒரு மருத்துவ சேவை உண்டு. அங்கே போகலாம். ஏலாது என்றால் ஆமிவந்து பார்த்து செட்டிக்குளம் ஆஸ்பத்திரிக்குத்தான் போக வேணும்.
இங்கே இருக்கேலாது. வெளியேவிட்டால் நிம்மதியாக இருக்கும். உறவினர் குடும்பம் வவுனியாவில் இருக்கினம். அவர்களோட போய் இருக்கலாம்.

கிளிநொச்சிக்கு ஆமி வந்தபோது புலிகள் எங்களை விட்டிருக்கலாம். நாங்கள் எங்கடபாட்டில எங்களிட்டை இருக்கிறத்தோடை ஆமியிட்டை போயிருக்கலாம். இப்ப புலிகள் எங்களை ஒண்டும் இல்லாமல் பண்ணிப் போட்டாங்கள். எல்லோரிடமும் நகைகளைச் சேர்த்துக்கொண்டு அவரவர்(புலிகள்) போய்விட்டினம். கையில் ஒண்டும் இல்லாமல் வந்தோம். ஆமி கொஞ்சம் தந்தது பிறகு ஜனாதிபதி மனைவி வந்து சேட்டு சாரம் தந்தார்கள். இது ஜந்தாம் மாதம் 30ம் திகதி என நினைக்கிறேன். பார்வைக்குறைபாடு உள்ளவைக்கு கண்ணாடி கொடுத்து உதவி செய்தார். ஒரு ஆஸ்பத்திரி கட்டித் தந்தவங்கள். படிக்கிற பிள்ளைகளுக்கு பள்ளிக்கூட உபகரணங்கள் புத்தகங்கள் உடுப்புகள் சப்பாத்துகள் எல்லாம் தந்தவைகள். எல்லாம் நொந்து கெட்டுப்போனம் அண்ணை. புலிகள் எங்களை கிளிநொச்சியிலேயே விட்டிருந்தால் இவ்வளவு பிரச்சினை அவலம் இல்லை.

காம்பிற்கு வந்தபிறகு zone 4ல் இலங்கை வங்கி வந்து அடைவு வைக்கிறவர்கள் அடைவு வைக்கலாம் என அறிவித்துக்கொண்டு வந்தது. அப்போது எங்களுடன் வரும்போது காசு கொண்டுவந்த மனிசி தன்னிடம் காசு இருக்குது என்றா. மகன் வெளிநாட்டில் இருந்து அனுப்பின காசு என்றும் சொன்னா. காசை எடுத்து வெளியே வைத்தால் 2000 ரூபா நோட்டுகள் எல்லாத்திலும் கடைசி ரெண்டு சைபரும் வெட்டியிருக்குது. இவவும் எதையும் திறந்து பார்க்காமல் காசை வாங்கிக் கொண்டு வந்தவ. செல்லடி ஒருபக்கம் பயம் ஒருபக்கம் யார்உதைப் பார்த்தது. ஆமிக்காரர் பஸ்ஸில் ஏத்திக்கொண்டு வரும்போது மனிசியும் எங்களோடைதான் வந்தவ. இது பொய்யான பணமாக செல்லாக்காசாக இருக்கவேணும். அது அனேகமாக புலிகளின் வைப்பகக் காசாகத்தான் இருக்கும். சிலவேளை வேறு என்ன சனியனோ தெரியாதுதானே அண்ணை. மனிசி கொண்டுவந்த காசு 18, 19 லட்சம் இருக்கும். உடனே பொலிசைக் கூப்பிட்டு கச்சேரி ஆட்களைக் கூப்பிட்டு 80 000 ரூபாய் புத்தகத்தில போட்டாங்கள். அவ்வளவுதான். மிச்சம் பறிமுதல். எனக்கு தெரிய அண்ணை ஆக 80000 ரூபாய்தான் கொடுத்தாங்கள்.

எங்களை வெளியே விடுவாங்களா? என்ன என்று ஒண்டுமே சொல்லுறாங்கள் இல்லையே. ‘முல்லைத்தீவுக்கு அல்லது யாழ்ப்பாணத்துக்கு பதியுங்கோ’ என்று கேட்டால் ஒரு பதிலுமே வருகுதில்லை. ‘கிளிநொச்சிக்கு இப்போதைக்கு போக இயலாது. உங்களுக்கு இங்க முகாம்களில் ஏதும் பிரச்சினை என்றால் கச்சேரிக்கு போய் அறிவியுங்கள்’ என்று சொல்லுவாங்கள். பொலிஸ் வந்து குடும்ப விபரம் இயக்கத்தில் இருந்தனீங்களோ தொடர்பு இருந்ததோ என்றெல்லாம் விபரங்கள் எடுப்பான். ‘சாப்பாட்டுச் சாமான்கள் தாறம் சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருங்கோ. எல்லாம் நேரம் வரேக்கை விடுவம்’ என்று சொல்கிறாங்கள்.

‘சனங்களின் வாகனங்கள் கார் லொறி ரக்ரர் எல்லா வாகனங்களும் கிளிநொச்சி கச்சேரி மைதானத்தில் கொண்டுவந்து விட்டிருக்குது. எல்லாம் தரப்படும். பரந்தனில் ஒரு மைதானத்திலும் எல்லாப் பொருட்களும் இழுத்து வந்து விடப்பட்டுள்ளது. அவரவர் பொருட்கள் அவரவரிடம் தரப்படும்’ என்றும் சொல்கிறார்கள். எங்கட வாகனப் புத்தகங்கள் எங்களிட்ட இருக்கின்றது.

ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாமுக்கு தெரிந்த ஆட்களை போய்ப் பார்க்க கதைக்க விடுவார்கள் நான் போய்ப் பார்த்துள்ளேன். பக்கத்திலுள்ள முகாம்களுக்கு போய்வரலாம்.  ஆனந்தகுமாரசாமி முகாமுக்கு காவலுக்கு நிக்கிற ஆமிக்காரங்கள் கொஞ்சம் சேட்டைக்குணங்கள் உள்ளவங்கள். அதால அங்குபோக நான் முயற்சிக்கவில்லை. சில ஆமிக்காரங்கள் குடிச்சுப்போட்டு வெறியில்நிண்டு தெருவில் போய் வரும்போது பெண்களை சேட்டை செய்வாங்கள் மற்றும்படி வேற பிரச்சினைகள் இல்லை.

இங்கு அருணாசலம் முகாமில் பத்தாம் யுனிட்டில் ஒரு பிள்ளையார் கோவில் இருக்கின்றது. காம்பில் மருத்துவம் செய்யும் சிங்கள டாக்டர் பெண்ணும் சேர்ந்துதான் இந்த கோயிலை அமைத்துத் தந்தார்கள். சனங்கள் கௌரி விரதம் இருக்கிறார்கள். அங்கே 50 ரூபாய்கள் கொடுத்து அர்ச்சனை செய்யப் போகிறார்கள்.

டக்ளஸ் தேவானந்தா எங்கட காம்பிற்கு வந்தார். அவர்தான் வந்து எங்களுக்கு என்ன தேவை என்று கேட்டு எல்லாப் பொருட்களும் அனுப்பி வைத்திருந்தார். எந்த விடயங்களும் எழுதிக் கொடுத்தால் அவரிடம் அது வந்து சேரும். 8, 9 பஸ்ஸில் எல்லோருக்கும் பார்சலாக உடுப்புக்கள் பொருட்கள் அனுப்பி வைத்தார். அவரை கட்டிப்பிடித்து கதைத்தவர்கள் பலர். அழுது குழறி அவரிடம் தங்கடை குறைகளை எல்லாம் சொல்லுவினம். புலிகள் செய்த அநியாயங்களையும், எப்படிச் சனங்களை கொன்று போட்டார்கள் என்றும் சனங்கள் ஒப்பாரி வைச்சு சொல்லிச்சினம். அவரிடம் எந்த விடயங்களும் எழுதிக் கொடுத்தால் அது கட்டாயம் வந்து சேரும். பிறகும் வந்து எல்லா மாற்றங்களும் செய்யப்பட்டிருக்கா என்று பார்த்துவிட்டுத்தான் போனவர். கூட்டமொன்றும் வைத்தவர். கூட்டத்தில் ‘ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம் ஒற்றுமையாக இருக்கவேணும் நாங்கள் உங்களுக்கு உதவி செய்வோம்’ என்றார். வேறு ஆட்கள் யாரும் வந்து எங்களைப் பார்க்கவில்லை.
அடுத்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் எங்களால் வாக்களிக்க முடியாது. நாங்கள் எல்லாம் கைதிகள் அண்ணை. அங்கே எல்லோரும் எங்களை கைதிகள் என்றுதான் கதைப்பினம். வாக்களிக்க விட்டால் சனங்கள் ரணிலுக்குத்தான் போடும்.
முள்ளிவாய்க்காலில் சண்டை நடந்த காலங்களில் மே 8ம் திகதிக்குப் பிறகு எங்களுக்கு ஒன்றுமே தெரியாது. ரேடியோ இல்லை. ஒரு பாதர் இருந்தவர் அவர் ரேடியோ கேட்டுச் சொல்வார். ‘வெளிநாடுகளில் உண்ணாவிரதம் இருக்கினம்’ என்று சொன்னார். அந்த பாதரும் செத்துப் போனார்.

மே மாதம் 8ம் திகதியிலிருந்து மே மாதம் 18ம் திகதிவரை சரியாய்க் கஷ்டப்பட்டுப் போனம். பயம். எண்டைக்கும் இப்படிப் பயந்ததில்லை. மரணப்பயம். எங்களோடை இன்னொரு பொடியனும் இருந்தவர். அவர் மனைவியையும் தாயையும் அனுப்பிவிட்டு எங்களோட நிண்டவர். தானும் சேர்ந்து போனால் ஆம்பிளை எண்டுகண்டதும் கட்டாயம் புலிசுடும் எண்டதால் தான் நின்றுகொண்டு அவங்களை அனுப்பி வைத்தனான் என்று சொன்னார். உடுக்கிற சீலையில் பதினொரு மண்மூட்டைகள் கட்டி வைத்திருந்தனாங்கள். எந்த நேரமும் நாங்கள் தப்பியோட வழி பார்த்துக் கொண்டுதான் திரிந்தோம். இது மே மாதம் 12ம் திகதி பின்னேரம். தேத்தண்ணி போட சீனி இல்லை. பசிவேறு. சீனி வாங்க காசு இல்லை. ஒண்டரைக் கிலோ சீனி 5500 ரூபாவுக்கு விக்கிறாங்கள். 13ம் திகதி விடிய இந்தப் பெடியன் தேத்தண்ணி குடிப்பம் எண்டு கடைக்குப் போனவர் திரும்பி வரேல்லை. கடைக்குமேல் ஷெல் விழுந்து அதில நிண்ட எல்லாரும் சரி. இந்தப் பெடியன் யார், எவன், எந்த இடத்தவன் ஒன்றுமே தெரியாது. அந்தப் பெடியனை நாங்கள் கட்டின மண்மூட்டையை அவிழ்த்து மூடிப்போட்டு இடம் மாறிவிட்டோம்.

இடம் அடிக்கடி மாறுவோம். அந்த நேரம் ஒரு இடம் ஒரு பங்கர் எண்டு ஒண்டுமே நிரந்தரம் எண்டில்லை. அலைஞ்சு கொண்டும் ஓடிக்கொண்டும் பதுங்கிக் கொண்டும் தலைவிதிப்படி நடக்கட்டும் என்றுதான் திரிஞ்சோம். இப்படி கொஞ்சம் அல்ல பல பேர்கள். தாய் தகப்பன் பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு ஒட புலிகள் பிள்ளைகளை சுட்டு செத்த சம்பவங்கள் பல நடந்தது. தப்பி ஓடுகிற சனங்களை தண்ணீக்கை போகவிட்டு புலிகள் சுட்டாங்கள். சனங்களின்ர கைகள் கால்கள் துண்டாடுகிற மாதிரி சுட்டவங்கள். அப்பிடியும் சனங்கள் தப்பி ஓடினது தான்.
15ம் திகதி ஆமி கிட்ட வந்திட்டாங்கள் நானும் பிள்ளைகளும் நிக்கிறம். என்ர கையில் ஒரு சாறம் சேட்டு மட்டும் தான். கட்டியிருந்த சாறம் அவிட்டுவிட ஏலாது கிழிஞ்ச சாரம். ஆமியிட்ட போவம் எண்டு வெளிக்கிட்டோம். வெளிக்கிட இயக்கம் ‘விடமுடியாது’ எண்டது. ‘ஜசிஆர்சி வருகுது. எங்கள் எல்லாரையும் காப்பாற்ற அமெரிக்க கப்பல் வருகுது. திரும்பிப் போங்கோ’ எண்டு கலைச்சு விட்டிட்டாங்கள். அப்படிச் சொன்ன புலி உறுப்பினர்கள் ‘யார் என்று தெரியுமோ’ என்று கேட்க இல்லை அவர்கள் எல்லாரும் புதியவர்கள். 7 பேர் நிண்டாங்கள். ‘நாங்கள் ஒரு கூட்டம் கூடி முடிவு எடுத்துள்ளோம். ஒபாமா கப்பல் அனுப்புகிறார். ஜசிஆர்சி கப்பல் வருது. ஒருபிரச்சினையும் இல்லை. எல்லாரும் தப்பிப்போகலாம்’ என்று தடுத்தார்கள். அந்த நேரம் நிண்ட ஆட்களும் மிக கொஞ்சம். கன சனம் தப்பி ஓடிவிட்டது. நான் பிள்ளைகளை தண்ணீக்காலை கொண்டு போகேக்கை புலிகள் சுட்டுப் போடுவாங்கள் எண்ட பயத்தில் தான் நிண்டனாங்கள்.

பிறகு நாங்கள் பனங்குத்திகளுக்கை படுத்துக் கிடந்தோம். இங்கே தான் அந்த நியாயம் கேட்ட பொம்பிளையை சுட்டவங்கள். இதில ஒரு பனை நிழலுக்கு அப்பிடியே நீளத்துக்கு சனங்கள் 20 பேர் மட்டில நிழலுக்கு இருந்தவைகள். இவர்கள் ஆமியின்ர பக்கம் ஒட ஆயத்தமாக இருந்தார்கள். ஆமியும் ஒரு கூப்பிடு தொலைவிலேதான் நிண்டது. ‘அங்கால போங்கோ இங்க நிக்காதேங்கோ’ எண்டு புலிகள் சத்தம் போட்டாங்கள். பிறகு ஆமிக்கு புலிகள் கிரனைட் எறிய ஆமி திருப்பி அடிச்ச ஷெல் இந்த சனங்களுக்குப் பக்கமாய் விழுந்து. அதில 17 பேர் செத்துப் போயிட்டினம். இது 16ம் திகதி பகல் 1 மணிக்கு நடந்தது. நாங்க ஒரு கொஞ்சப் பேர்தான் பெருந்தோகையான சனங்கள் வேறு வேறு இடங்களால ஓடித் தப்பிவிட்டினம். நாங்கள் ஒரு கொஞ்ச நாய்களிட்டை எம்பிட்டிட்டோம். நிண்டு அலைக் கழிஞ்சது தான். பிள்ளைகளை சுட்டுப்போடுவாங்க எண்ட பயம்.
எங்கட ஊரில நீர்ப்பாசன இலாகாவில் வேலை செய்தவர். அவரின் பிள்ளை இயக்கத்தில் பிடித்து வைத்திருந்தவங்கள். பிள்ளையையும் கூட்டிக் கொண்டு போய்த்தப்புங்கோ எண்டு புலி ஒருத்தன் கூட்டிக் கொண்டு வந்தான். இன்னுமொரு பொம்பிளைப் பிள்ளையும் - 10ம் வாய்க்கால் பிள்ளை -வந்தது. இந்தப் பிள்ளையின்ர தாய் தகப்பன் முந்தியே வவுனியாவுக்கை ஓடி வந்துவிட்டினம். இயக்கம் இந்தப் பிள்ளையையும் பொடியனையும் கூட்டி வந்து தப்பி போங்கோ என்று காட்டிவிட்டு முழங்கால் அளவு தண்ணீக்கை போகவிட்டுட்டு பொடியனையும் பொம்பிளைப் பிள்ளையையும் சுட்டுப் போட்டாங்கள். நான் ரக்ரரில் குத்திகளை ஏற்றி வந்து போட்டுவிட்டு பக்கத்தில பார்த்துக்கொண்டு நிண்டேன். இவ்வளவும் எனக்கு முன்னால நடக்குது. பொடியனுக்கு காதிலும் நெஞ்சிலும் காயம். பொம்பிளைப் பிள்ளை உடனேயே செத்துட்டுது பொடியன் காயத்துடன் ‘அப்பா அம்மா’ எண்டு தகப்பன்ர காலைப் பிடித்து கெஞ்சுகிறான். பொடியனை தூக்கிக் கொண்டு கிட்ட இருந்த இயக்கத்தின்ர ஆஸ்ப்பத்திரிக்கு போக ‘எங்களிட்டை மருந்து ஒண்டும் இல்லை. போங்கோ’ எண்டு கலைச்சு விட்டினம். பிறகு பொடியனும் செத்துப் போச்சு. மண்ணில் ஒரு அரை அடி தாளம் கிடங்கு கையால கிண்டி உடனேயே தாட்டுப்போட்டோம்.

அந்தப் பொடியனுக்கு ஒரு 22 வயது இருக்கும். இந்த பொடியன் இயக்கத்தில் இருக்கவில்லை. கோயில் துப்பரவு பண்ணி தேவாரம் பாடி கோயில் வேலை செய்கிற பொடியன். வீட்டுக்கு ஒருத்தர் வரவேண்டும் எண்டு கட்டாயப்படுத்தின நேரம் புலி பிடிச்சுக் கொண்டு போனது. பிறகு இவனை தகப்பன் இயக்கத்திலிருந்து களவாக கூட்டிவந்து மல்லாவியில் ஒளிச்சு வைச்சிருந்து. பிறகு திரும்ப முள்ளி வாய்க்காலில் இந்தப் பொடியன் பிடிபட்டுப்போச்சு.

எங்களுக்கு மற்றமற்ற பக்கங்களில் என்ன நடக்குது எண்டு தெரியாது. விடிய 5.30க்கு மேல் ஒருத்தரையும் காணவில்லை. புலிகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாது. ஆமி ஒரு 50 யார் தூரத்தில் மண் மூட்டை கட்டி நிற்குது ‘கெதியா வாங்கோ. கெதியா வாங்கோ’ எண்டு ஆமி கையை காட்டினாங்க. நானும் பிள்ளையளோட ஆமியிட்டை ஒடிவந்திட்டோம். ஒரு பிஸ்கட் பைக்கட்டும் தண்ணீர்ப் போத்தலும் தந்தாங்க. பிறகு பஸ்ஸில் ஏத்தி இங்க வந்தோம்.” என்று தன் மரண அனுபவத்தை அவர் எம்முடன் பகிர்ந்துகொண்டார். ”முகாமில் முக்கியமான சில பெண்கள் இருக்கினம். அவர்கள் தான் யார் வந்தாலும் முன்னுக்கு போய் கேள்வி கேட்பார்கள். பிரச்சினைகளை சொல்லுவார்கள். அவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். அவர்களுடனும் கதைக்கலாம்” என்று ஒரு பெண்மணியிடம் தொலைபேசியை வழங்கினார்.

இராமநாதன் முகாம் குடும்பப் பெண் ஒருவரின் கதை இது: ”சேர்த்த பணங்களையும் சொத்துக்களையும் அநியாயமாக இழந்து ஒன்றுமில்லாமல் இருக்கிறோம். ஒரு இடி சாம்பலும் மக்களுக்கு செய்ய மாட்டாங்கள். தாங்கள் தங்கட வாழ்க்கையை பார்த்துக் கொண்டு போய்விட்டாங்கள். இவங்கள் எப்பவோ போயிருந்திருக்க வேணும். இந்தச் சிதறுவார் என்ன செய்தவங்கள். நாங்கள் கட்டின வீட்டிலும் இருக்க முடியவில்லை. உழைச்ச காசையும் நாங்கள் அனுபவிக்கவில்லை. எப்ப பாத்தாலும் வரி அது இது எண்டு காசை பறிப்பது தான் தொழில். மனிசருக்கு உதவாத நாய்கள் இவங்கள்.” என்று அப்பெண் கடும் கோபத்துடன் கூறினார்.

அப்போது அங்கு வந்த அப்பெண்ணின் மகளுடனும் கதைக்க முடிந்தது. மகள் வருமாறு தனது முகாம் அனுபவத்தைத் தெரிவித்தார். ”எனது பள்ளி நான் இருக்கும் முகாமுக்குள்ளேயே இருக்கின்றது. அன்று (16ம் திகதி) நான்கு பாடங்கள் தான் நடந்தது. மற்றப் பாடங்களுக்கு ஆசிரியர்கள் வரவில்லை. எனது சகோதரர்கள் கதிர்காமர் முகாமுக்குப் போய்ப் படிக்கின்றனர் (அவர்கள் உயர்தர வகுப்பினர்)” என்றும் கூறினார்.

படிக்கக்கூடிய தனது பிள்ளைகளுக்கு படிக்க வசதியான இடமில்லை என தாய் குறைபட்டா. தொடர்ந்து தாய் கதைக்கையில் ”தமக்கு அரிசி சீனி பருப்பு மா தேங்காய் எண்ணெய் இதோட ரின்மீனும் சோளன் மா பைக்கற்றும் தருவார்கள். இந்தக் கிழமை ரின்மீன் தரவில்லை. குடிக்கிற தண்ணீர் தரப்படும். குளிப்பதற்கு குழாய்க் கிணறு இருக்கின்றது. மற்றது லைன் பைப்பிலும் ஒரு யுனிட்டுக்கு ஒரு மணித்தியாலம் தண்ணீர் தருவாங்கள். நாங்கள் வாளியைப் போட்டுவிட்டு வரிசையாக நிண்டு குளிப்பம்” என்றார்.

ஒக்ரோபர் 17ல் எம்முடன் கதைத்த குடும்பத்தினருடன் மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றபோது: ‘அவர்கள் அன்று தீபாவளி கோவிலுக்குப் போய்விட்டார்கள்’ என்று கூறினார்கள். எனவே வவுனியாவில் வதிபவரும் எனக்கு வேறு ஆட்கள் தொடர்புகள் கிடைக்க உதவுபவருமான ஒருவருடன் தொடர்பு கொண்டேன். “அவனவனன் இஞ்சையிருந்து எங்கையாவது வெளிநாட்டுக்கு ஓடித்தப்ப திரியிறான். நீங்கள் என்னடாவெண்டால் உங்கை இருந்துகொண்டு இங்கை என்ன நடக்குது எண்டு கேட்டுக்கொண்டு. உங்களுக்கு வேற வேலையில்லையோ?  உங்கட பிள்ளை குட்டி குடும்ப அலுவல்களைப் பார்த்துக்கொண்டு சும்மா இருங்கோ” என்றார்.
இருந்தாலும் அவர் வவுனியாவில் உள்ள தன்னுடைய நண்பருடன் தொடர்பை ஏற்படுத்தித் தந்தார். 

”வவுனியாவிற்கு சனங்கள் தொகையாக வெளியேறி வருகிறார்கள். இவர்கள் தங்களுக்கு காம்பில் கொடுத்த சாமான்கள் கொடுத்த பருப்பு சீனி கூடுதலாக சேர்ந்தால் வெளியே வரும்போது கொண்டுவர விடுவாங்கள். அதை விற்றால்த்தான் அவர்களுக்கும் மற்றச் செலவுக்கு காசு வரும். அதால விக்கிறாங்கள். உள்ளுக்க பருப்பு 30 ரூபா என்றால் வெளியில் அதை 60 ரூபாக்கு விக்கினம். கொழும்பு மார்க்கற் 170 ரூபா. வெளியால வாறவங்க உள்ளுக்குள் இருக்கும் ஆட்களிட்டை 30 ரூபாய்க்கு வாங்கிக் கொண்டுவந்து 60 ரூபாய்க்கு விக்கினம். உள்ளுக்குள் இருப்பவனுக்கும் காசு. வெளியில வந்தவருக்கும் காசு. இப்படி பிழைக்கத் தெரியாட்டி வாழ இயலாது என்றார்.
கனசனத்தை வெளியால கொண்டுவந்து பள்ளிக்கூடத்தில வைச்சு தங்கட தங்கட ஆட்களோட போக விட்டிட்டாங்கள். இப்படி தொடர்ந்து நடக்குது.

இனிமேல் ஏதும் புதிசாய் பிரச்சினை வந்தாலும் அவன்ர ஆமி சமாளிக்கும் எண்ட துணிவு அரசாங்கத்திற்கு வந்து விட்டது” என்றார் அந்த நண்பர்.

உருத்திரபுரம் 8ம் வாய்க்காலைச் சேர்ந்த குடும்பஸ்தருடன் ஓக்ரேபார் 24ல் மீண்டும் கதைத்தேன். இப்போது முன்னர் உரையாடியவரின் மனைவியுடன் பேசினோம். அவர் சொன்னார் ”இன்று புதிதாக வவுனியா மானிப்பாய் போக உள்ளவர்களுக்கு ரோக்கன் தந்திட்டார்கள். எங்களுடைய ரோக்கன் நம்பர் இரண்டாயிரத்து எழுநூற்றிச் சொச்சம். நாங்கள் வவுனியா போக ஆயத்தம் எப்ப ஏற்றுவது என்று தெரியாது. முல்லைத்தீவு. மல்லாவி துணுக்காய், பாசியன்குளம் இடங்களுக்கு போக உள்ளவர்களுக்கும் ரோக்கன் கொடுக்கப்பட்டுள்ளது. இனி சிஜடி விசாரித்து ஏற்றுவார்கள். வயது கட்டுப்பாடுகள் உள்ள பிள்ளைகளை புலிகளுடன் தொடர்புகள் இருந்தவர்களா என சிஜடி விசாரிப்பார்கள். சிலநேரங்களில் மற்றவர்கள் இவர்கள் புலியில் இருந்தவர்கள் என்றும் சொல்லிக் கொடுப்பார்கள். அப்படி புலிகளுடன் தொடர்பு உள்ளவர்களை புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பி, மனம் மாறக்கூடிய பயிற்சிகள் அளிக்கப்படும். வயது கட்டப்பாடு உள்ள பிள்ளைகளுக்கு கட்டாயம் விசாரணைகள் இருக்கும்” என்றார்.

முகாமில் உள்ளவர்களிடம் புலிகளினால் ஏற்ப்படுத்தப்பட்ட வயது கட்டுப்பாடு உள்ளவர்கள் என்ற வார்த்தைப் பிரயோகம் உண்டு. அதாவது இந்த இளம் வயதினர் முன்பு புலிகளிடம் அனுமதிபெற்றே போகவேண்டும். இன்று சிஜடி விசாரணையின் பின்பே போக அனுமதிக்கப்படும் அல்லது புனர்வாழ்வு முகாம் போக வேண்டி வரும்.
உருத்திரபுரம் 8ம் வாய்க்காலைச் சேர்ந்தவரின் மனைவி தொடர்ந்தார் ”வெளியேற பஸ்ஸில் ஏற்றும் மக்களை பள்ளிக் கூடங்களில் வைத்திருந்து அங்கிருந்து ஒவ்வொரு குடும்பங்களாக பேசி அவர்கள் வீடு தங்க இடம் ஏதும் இருக்கிறதா? அல்லது இவர்களுக்கு வேறு ஏதும் உதவிகள் தேவையா என ஆராயப்படும். எல்லோருக்கும் ஒவ்வொரு ரென்டும் கொடுக்கப்படும் 5 000 ரூபாய் பணமும் கொடுக்கப்படும். 20 000 ரூபாய் வங்கியில் இடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது எங்களுக்கு தரும்வரை தெரியாதுதானே. முன்பு போனவர்களுக்கு 25 000 ரூபாயும் கொடுக்கப்பட்டு அதில் 4000 ரூபாய் இவர்கள் சாமான்கள் ஏற்றிச் சென்ற லொறிக்கு கூலி கேட்கப்பட்டதாகவும் நாங்கள் கேள்விப்பட்டோம் உண்மைகள் தெரியாது.

பள்ளிக்கூடங்களில் மக்களை இறக்கிவிட்டு அங்கே இருந்து அவரவர் வீட்டுக்கு கூட்டிச்செல்கின்றனர். அவரவர் வீடுகள் இருக்கா? அந்த வீட்டில் சீவிக்க முடியுமா? அல்லது இவர்களுக்கு இவர்களது வளவில் ரென்ட் வேணுமா? என பல விடயங்களைப் பார்த்தே வீட்டுக்கு அனுப்பப்படுவதாக சொல்லப்படுகிறது. இனி நாங்கள் போகும் போதுதானே மிச்சம் மீதி தெரியவரும். சிலவேளை நாங்கள் போகும் போது நிலமைகள் வேறுமாதிரியும் மாறிவிடுமல்லோ. பாப்பம். உயிராபத்து இல்லாத அலுவல் என்றால் எங்களுக்கு ஓகே.

வவுனியாகாரர்களை வவுனியா கச்சேரியில் இறக்குவினம். அவை தாங்களே போகலாம் அங்க மிதிவெடி ஆபத்து பிரச்சினை இல்லைத்தானே. வன்னிப்பகுதிதானே பிரச்சினை. சும்மா நேரடியாக போக ஏலாதுதானே. வவுனியா போறவர்களுக்கு சொந்தக்காரர்கள் இருப்பவர்களுக்கு பிரச்சினை இல்லை. மற்றவை தங்கட பாடுகளை பாப்பினமாக்கும். வெளியிலவிடு வெளியில விடு எண்டு கேட்டு வெளியே போய்விட்டு யாரைக் கேட்பது. உள்ளே இருந்தால் சாப்பாடும் வசதிகளும் இவர்களின்ர (அரசாங்கத்தின்ர) பொறுப்பு. யோசிக்கவெல்லோ வேணும்.
கிளிநொச்சிபோக சனங்கள் பயப்பிடுதுகள் திரும்பி ஏதும் இதண்டாலும் எண்டு. நாங்கள் அதுதான் வவுனியாவிற்கும் பதிந்திருக்கிறோம். வவனியாவிலிருந்து பிள்ளைகளைப் பற்றி யோசிச்சு செய்வம். எனது பெரிய பிள்ளைகளை வெளிநாடு அனுப்பிப்போட்டு குழந்தைப் பிள்ளைகளுடன் கிளிநொச்சி போகலாம் எண்டு இருக்கிறம்.

காம்பிலிருந்து போறவர்களை பள்ளிக்கூடத்தில் வைத்திருந்து பிறகு தகரம் தளப்பார் சாமான்கள் கொடுத்து அவரவர் வீட்டுக்கு அனுப்புகினம். போய் வீடுகளை துப்பரவு பண்ணிப்போட்டு இருங்கோ எண்டு விடுகினமாம். எல்லோருக்கும் ஒரே மாதிரித்தான் கொடுக்கினம்.சிலவேளை நிலைமைகளைப் பார்த்து செய்ய அரசாங்கத்திற்கு வசதியாக இருக்குது போல. நாங்கள் அவங்கட பக்கத்தையும் பார்த்து தானே யோசிக்க கதைக்க வேணும்.
நாங்க நினைக்கிறோம் மழை வந்தால் இங்கை சில காம்புகள் அல்லோல கல்லோலமாய் போய்விட்டாலும் எண்ட பயம் போலவும் கிடக்கு. காணி வளவு உள்ளவர்கள் தங்கட பிட்டியான பகுதியான பகுதிகளில் ரென்டை போட்டு இருந்தாலும் அவைக்கு தெரியும்தானே மழை வெள்ளம் வந்தால் என்ன செய்யிறது என்று. எது செய்தாலும் பள்ளிக்கூடம் போய் முழுவிபரங்கள் கொடுத்து பதிஞ்சுதான் பிறகு போகலாம் சிலருக்கு பள்ளிக்கூடத்தில் இருந்து பதிஞ்சு தங்கட காணிகளுக்கு போய் துப்பரவு பண்ணிப்போட்டு, பிறகு மாலை 6 மணிக்கு பள்ளிக்கூடம் வாங்கோ என்றும் சொல்லுகினமாம்.
அரசாங்கம் பயப்பிடுகிறது அங்க போய் என்ன நடக்கும் என்று. சனமும் பயப்பிடுகுது. அங்கே போய் என்னென்ன சிக்கல்கள் வருமோ தெரியாது என்ற பயம்தான். காட்டுக்குள்ளே இருக்கினம் என்றுதான் சனம் பயப்பிடுகிறார்கள். இப்ப நாங்களும் அதுக்குதானே பயப்பிடுகிறோம். நாங்கள் திரும்பி போக அங்கினை எங்கேயும் இருந்துட்டு வந்து சாப்பாட்டைத்தா? அதைத்தா? இதைத்தா? என்று ஆக்கினைப் படுத்துகின்றாங்களோ என்று நாங்களும் இதுக்கு பயப்பிடுகிறோமல்லோ. சொல்லஏலாது முந்தினமாதிரி திரும்பி வந்து சாப்பாட்டைத்தா? பிள்ளையைத்தா? அப்பிடி இப்பிடி……….

ஆமியால பிரச்சினை என்று பயப்பிடேல்ல. இயக்கத்திக்குத்தான் பயப்பிட வேண்டி இருக்கு. எங்கே யார் இருக்கிறாங்க என்று தெரியாதெல்லோ பிறகு வந்து பிள்ளையளை இழுத்துக்கொண்டு போக வந்தாலும் எண்ட பயம்தான்.

போன கிழமை காம்பிலிருந்து கோவில்பற்றுக்கு போன எங்கட சொந்தக்காரர் போன் எடுத்தவர். அவருக்கு 2 வயது பிள்ளை இருந்ததால் அவருடைய தாய் கையெழுத்து போட்டு யாழ் கச்சேரிக்கு போய் பதிவுசெய்து நேரடியாக வீட்டுக்கு போய்விட்டார். அவருக்கு 25 000 ரூபாய் கையில் கொடுத்தது அரசாங்கம். இப்ப யாழ்ப்பாணம் போறவர்களுக்கு 5 000 காசும் 20 000 வங்கி புத்தகத்திலுமாம். கச்சேரியில் இருந்து கொஞ்சப்பேர் ஆட்டோவிலும் சிலர் கார் பிடித்தும் வீடுகளுக்கு போனவர்களாம்.

நாங்கள் வவுனியாவில் கொஞ்நாள் இருந்து பார்ப்போம். பிறகு பெரிய பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பத்தான் வேணும். இங்க வைத்திருப்பது ஆபத்து என்று யோசிக்கிறோம். நாங்கள் அவ்வளவு பட்டு தெளிந்து வந்து விட்டோம். எங்கட அடுத்த நடவடிக்கை மிக கவனமாக இருக்க வேணும்தானே. அதுதான் பயமாக கிடக்கு. இந்த உயிர்களை கொண்டுவரப் பட்டபாடு கடவுள் ஒருத்தனுக்குத்தான் தெரியும். போட்ட உடுப்போடதானே ஓடி வந்தனாங்கள். எங்களிட்டை ஒண்டும் இல்லை.

இங்கு காம்பில அரிசி மா பருப்பு தருவார்கள். வேறு மரக்கறிகள் வாங்கித்தான் சாப்பாடு சமைக்க வேணும். தாற உணவுப்பொருட்களுடன் சாப்பாடு சமைக்க மிச்ச சாமான்கள் வாங்க காசு வேணும். சரியான கஸ்டம். காசு இல்லாதவர்கள் எப்படி இந்த சாமான்களை வாங்க முடியும். காசு இல்லாத சனங்கள் சரியா கஸ்டப்படுகிறார்கள். அவர்கள் சோற்றை அவித்து பருப்பையும் அவித்து மாத்தளனில் சாப்பிட்ட மாதிரித்தான் சாப்பிடுகினம். வேறு என்ன செய்கிறது.

எங்கட ஏஎல் படிக்கிற பிள்ளையைத்தான் புலி பிடித்துப்போனது. கஸ்ரப்பட்டு பிள்ளையை இழுத்து வந்து சேர்த்திட்டோம். இப்ப பள்ளிக்கூடம் போகிறா? வவுனியாவிற்குப் போனால் வேற பள்ளிக்கூடம் போக வேண்டிவரும். வாற வருடம் ஆவணிக்கு ஏஎல் எடுப்பா! பிள்ளை கெட்டிக்காரி ஒஎல் 7ஏ எடுத்துபாஸ் பண்ணின பிள்ளை. 5ம் வருட ஸ்கொலர்சிப் பாஸ் பண்ணினவ.

கசிப்பு காய்ச்சி குடிப்பது பற்றி அவர் கதைக்கையில் உங்களுக்கு தெரியும் தானே எங்கட சனங்களை. சிங்களம் கதைக்கத் தெரிந்தவர்கள் ஆமிக்காரனோட கதைத்து அவன் சாமான் வாங்கி வந்து கொடுக்கிறான் காய்ச்சி, குடிக்கிற நாய்கள் வாங்கி குடிக்கும். இது விக்கிறவருக்கும் காசு, உழைப்பு. ஆமிக்காரனுக்கும் கசிப்பு. சனங்கள் கஸ்டம் தானே, சீவியத்தை கொண்டு போக. கசிப்பு காய்ச்சி வித்து சீவியம் நடாத்துதுகள். ஆமிக்காரன்களும் காசு கொடுத்து வாங்கி குடிப்பாங்களாம். இப்படி சிங்களம் கதைச்சு தங்கட அலுவல்களை பலர் பலவிதமாக பார்த்திருக்கிறாங்கள். சிலர் வெளியாலையும் போயிட்டினம்.

இந்த காம்பால் வெளியே போய் வவுனியாவில் உறவினர் குடும்பத்துடன் இருப்பம். அவர்கள் இருக்கிற வீடும் கஸ்டம்தான். கொஞ்ச நாளைக்கு ஏதோ பாப்போம் என்ன நடக்குது எண்டு. கிளிநொச்சி இப்ப போகமுடியுமோ தெரியாது. ஆனால் எங்களுக்கு போக பயமாக இருக்குது.” என்று அவர் பலதையும் பத்தையும் எம்முடன் பேசினார்.

இப்போது மீண்டும் குடும்பஸ்தவருடன் பேசினோம். ‘காம்பில் இருந்து இங்கு இரவும் பகலுமாக ஆட்களை ஏற்றுகிறார்கள். எத்தினையாயிரம் பேரோ தெரியாது ஆனால் ஏத்திக்கொண்டே இருக்கிறாங்கள். இங்கயும் ரென்டுக்கை இருக்க ஏலாது. ஒரே வெய்யில், சனங்களுக்கு கொப்புளிப்பான் சின்னமுத்து என்று நோய்களும். சனங்களுக்கு கஸ்டம். நாங்கள் முதலில் வவுனியா போய் இருந்து நிலமைகளைப் பார்த்து பின்னர் கிளிநொச்சி போவோம் எங்கட வீடுகள் உடைஞ்சு போய்விட்டதோ தெரியாது. எல்லாம் போனால்த்தான் தெரியும்” என்று முகாமை விட்டு வெளியே செல்லும் நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

உருத்திரபுரம் 8ம் வாய்காலைச் சேர்ந்த குடும்பத்தினருடன் இரு தினங்களுக்கு முன் தொடர்பு கொண்டதில் அவர்கள் முகாமை விட்டு வெளியேறி வவுனியாவில் உள்ள உறவினர்களுடன் தங்கி இருப்பதாகத் தெரிவித்தனர். அந்த உறவினர்களுடன் இவர்களுக்கு முன்னர் வெளியேறியவர்களும் தங்கி உள்ளனர். அதனால் அவர்களுடைய வீட்டுமுற்றத்தில் இன்னுமொரு சிறு கொட்டிலை அமைத்து அதில் தற்காலிகமாக சிறிதுகாலம் தங்கி இருக்கப் போவதாக அக்குடும்பத்தினர் தெரிவித்தனர்.
உங்கள் கருத்து

This entry was posted on Friday, October 30th, 2009 at 1:04 am and is filed under
எஸ் குமாரி, சோதிலிங்கம் ரி, நேர்காணல்கள். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
18 Comments so far
1.     மாயா on October 30, 2009 1:04 pm
மனது கனக்கிறது. மக்களுக்கு நேரடியாக உதவக் கூடிய நிலையில் உள்ளவர் தோழர் டக்ளஸ் மட்டுமே எனத் தெரிகிறது. சாவை நோக்கியிருந்த அதே மனிதர் , சாவிலிருந்து மீண்டவர்களுக்கு உதவுவதில் முன் நிற்பது மகிழ்வாக இருக்கிறது.
// இங்க காம்பில் என்னோட என்ர எல்லாப் பிள்ளைகளும் இருக்கினம். பொழுதுபட இரவு நேரங்களில் சிஜடி வந்து எண்ணிப் பார்ப்பார்கள். இரவில் பெண்பிள்ளைகளை அம்புலன்ஸ் வந்து ஏற்றிக்கொண்டு போறாங்கள். விடிய கொண்டுவந்து விடுகிறாங்கள். கேட்டால் விசாரணை என்று சொல்கிறாங்கள். //
இதில் ஏதோ விபரீதம் தெரிகிறது. இதை தோழர் அவதானித்தால் நல்லது. விசாரணை என்ற பெயரில் சேட்டையோ என சந்தேகமாக இருக்கிறது? உயிர் பயத்தில் மக்கள் வாய் திறக்க மாட்டார்கள். இது தொடரலாகாது. அந்த மக்கள் நிம்மதியாக வாழ வழி செய்யுங்கள்.
தேர்தலில் வாக்களிக்க கிடைத்தால் ரணிலுக்கு என்று எடுத்த முடிவை சொன்னவர் மட்டுமல்ல , தமிழர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். காரணம், ரணில் முப்படைத் தளபதி சரத் பொண்சேகாவை யை அதிபர் தேர்தலுக்கு வேட்பாளராக நிறுத்த அல்லது அவரது ஆதரவை தேடி வலை போட்டுத் திரிகிறார். அமெரிக்கா சென்றுள்ள சரத்தோடு சிங்கப்பூரில் வைத்தும் வெளியில் இருந்தும் பேசி வருகிறார்.
நாட்டின் அமைதிக்கு பங்கம் விளையும் என்றால் தான் யுனிபோர்மை களட்டவும் தயார் என சரத் பொண்சேகா , அமெரிக்காவில் வைத்து பேசியுமிருக்கிறார். இவை குறித்து தீர்க்க தரிசனம் தேவை. ஐதேகட்சிக்கோ அல்லது ரணில் ஆகியோருக்கு முகாமுக்குள்தான் போக அனுமதியில்லை. ஆனால் அவர்களால் அரச அதிபர்கள் வழி உதவலாம். அதை அவர்கள் செய்யாமல் , தமிழர் வாக்குகளை பெற சில அரசியல் பித்தலாட்டங்களில் ஈடுபடுகிறார்கள். தமிழரது உரிமைகள் கிடைக்காமல் பண்ணியதில் ஐதேகட்சியின் பங்கு சிறீலங்கா சுதந்திரக் கட்சியை விட அதிகம்.
அதிபர் மகிந்தவுக்கு , சரத்தின் பிரச்சனை , தமிழர் பிரச்சனையை விட பெரிதாக இருக்கிறது. அதற்கு முடிவு கட்ட வேண்டும். எனவே அவதானமாக தமிழர்கள் யோசிக்க வேண்டிய தருணம். ரணிலுக்கு தமிழர்கள் வாக்களித்தாலும் , ரணில் தோற்கலாம். அது தமிழருக்கு கிடைக்கும் நன்மையையும் இல்லாமல் செய்துவிடும்.
அதிபர் தேர்தலும் , பாராளுமன்ற தேர்தலும் ஒரே நேரத்தில் நடந்தால் ரணிலின் நிலை இதுதான் என லக்பிம கார்டூன் போட்டுள்ளது.
http://www.lakbima.lk/img/car-la.jpg
http://www.lakbima.lk/img/p-3-1.jpg
ஒன்றை தாங்குவதே முடியாத போது
இரண்டும் ஒரே நேரத்திலானால்…..?
என சிந்திக்க வைத்துள்ளது.
நாம் தொடர்ந்தும் புதை குழிகளை நாடலாகாது. புலத்தில் இருந்து , அரசியல் சித்தாந்தந்தங்கள் பேசுவோரை , தாயக மக்கள் அதிகம் நம்பக் கூடாது. அதுவே இன்றைய அவலத்துக்கு காரணமாகியுள்ளது. உங்களை நீங்கள் நம்புங்கள். அங்குள்ள நல்ல அரசியல்வாதிகளை நம்புங்கள். புலம் பெயர் அரசியல்வாதிகள் பலர், தமது இருப்புக்காக சில உதவிகளை செய்கிறார்கள். ஒரு சிலர் மட்டுமே உதவும் நோக்கம் கொண்டவர்கள்.அதை மறக்க வேண்டாம். கிடைப்பதையாவது பெற்றுக் கொள்ள முயலுங்கள். இன்றைய நிலையில் ரணிலை விட மகிந்தவே யதார்த்தமானவர்.

2.     பார்த்திபன் on October 30, 2009 1:47 pm
// இங்க காம்பில் என்னோட என்ர எல்லாப் பிள்ளைகளும் இருக்கினம். பொழுதுபட இரவு நேரங்களில் சிஜடி வந்து எண்ணிப் பார்ப்பார்கள். இரவில் பெண்பிள்ளைகளை அம்புலன்ஸ் வந்து ஏற்றிக்கொண்டு போறாங்கள். விடிய கொண்டுவந்து விடுகிறாங்கள். கேட்டால் விசாரணை என்று சொல்கிறாங்கள். //
இது சம்மந்தமான சில விபரங்கள் முன்பும் அரசல் புரசல்களாக வெளிவந்தன. மாயா சொன்னது போல் இவற்றை பற்றி டக்ளஸ் மூலமாகவோ அல்லது சித்தார்த்தன் போன்றவர்கள் மூலமாகவோ அரசிற்கு தெரிவித்து உடன் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விடுதலைப் போரில் இருந்தவர்கள் என்பதற்காக அந்த பெண்கள் சிங்கள மிருகங்களால் சீரரழிக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருந்து விட முடியாது.

3.     chandran.raja on October 30, 2009 2:24 pm
பார்த்திபன் நீங்கள் அளவுக்கதிகமாக உணர்ச்சி வசப்படுகிறீர்கள். இதனால் உண்மையை கண்கள் மறைக்கின்றன. வன்னியில் புலிபிடியில் வாழ்வதிலும் பார்த்து மேலான வாழ்வு வாழ்கிறார்கள் முகாம்களில் என்பதை துணிகரமாகச் சொல்வேன். வார்த்தைகளை அளந்து பாவிக்க பழகவும். சிங்கள மிருகங்களால் சீரளிக்கப்படுவதை… தமிழ் மிருகங்களால்… என்றால் திருப்திப்படுவீர்களா? இல்லை.
விவாதங்கள் தொடரும்…

4.     Kusumbo on October 30, 2009 3:43 pm
சரி முகாம் பாதுகாப்பற்ற இடம் யாழ்பாணத்தில் பெண்கள் தனியாக இருக்கும் இடங்களுக்கு இராணுவம் சென்று தொந்தரவு செய்வது வழமையாக உள்ளது என்று தெரியவருகிறது. அது இளம்பிள்ளைகளாகத் தான் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. முக்கியமாகப் பெண்பிள்ளைகளை வைத்திருப்பவர்கள் தம்பிள்ளைகளை ஆண்கள் உள்ள வீடுகளிலேயே விட்டு விட்டு வெளியில் போவதாக அறிய முடிகிறது.

5.     பார்த்திபன் on October 30, 2009 4:33 pm
chandran.raja,
நான் உணர்ச்சி வசப்பட்டு கருத்தெழுதவில்லை. சில விடயங்களை தனிப்பட்ட முறையினாலும் என்னால் அறிய முடிந்தது. அந்த வகையில் “இரவில் பெண் பிள்ளைகளை அம்புலன்ஸ் வந்து ஏற்றிக்கொண்டு போறாங்கள். விடிய கொண்டுவந்து விடுகிறாங்கள்” என்பது விசாரணை செய்ய என்பதை என்னை நம்பச் சொல்லுகின்றீர்களா?? அம்பேபுச முகாம்களில் உள்ள போராளிச் சிறார்கள் நன்றாக இருக்கின்றார்கள் என்பதை நானும் அறிந்தேன். அதற்காக போராளிகள் இருக்கும் எல்லா முகாம்களும் ஒழுங்காகத் தான் இருக்கின்றன என்பதல்ல அர்த்தம். புலிகள் செய்த தவறுகளால்த் தான் இந்த மக்கள் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அரசை நம்பி சரணடைந்தவர்களை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை.

6.     uma on October 30, 2009 4:50 pm
கிழக்கில் 38000 பெண்கள் விதவைகள். வடக்கில் புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட இடத்தில் கணக்கெடுப்பு செய்தார்களோ இல்லையோ தெரிந்தவர்கள் சொல்லவும். இப்ப நடந்த அவலத்தின் பின் விதவைகள் மட்டும் வருவார்கள் ஒரு தொகையாக. இவர்களுக்கு மறுவாழ்வோ உதவியோ யார் கொடுக்கப் போகிறீர்கள். தாய் தந்தை இருவரையும் இழந்த குழந்தைகள் அல்லது அவர்களில் ஒருவரை இழந்த குழந்தைகள் ஆயிரக்கணக்கில். யார் கவனிக்கப் போகிறார்கள்? இதை இனவாத அரசாங்கம் செய்யவே செய்யாது. அதையும் சேர்த்து இங்கே கதையுங்கோ.

இளம் பிள்ளைகளை புலிகள் கடத்திவிடும் என்று இளம்வயதில் கலியாணம் செய்து கொடுக்கப்பட்ட பிள்ளைகளும் பலர் இன்று விதவைகளாக உள்ளனர். வெளிநாடுகளில் உள்ளவர்கள் மேற்குறிப்பிட்ட இவர்கள் எல்லோரினதும் எதிர்கால வாழ்விற்காக என்ன செய்வீர்கள் என்பதை தயவு செய்து இங்கே நிரைப்படுத்துங்கள்.

இதைவிட எனது மனதை பாதித்த விடயமொன்று. வெளிநாடுகளில் புலிகளுக்குப் பணம் கொடுத்து யுத்தத்துக்கு உதவியவர்களுக்கும் புலிகளின் ஆதரவாளர்களுக்கும் மே 18ன் பின்னர் அவர்கள் உளவியல் ரீதியாக தாக்கம் அடைந்து விட்டார்கள் என உளவியற் பயிற்சிகள் கோவில்களிலும் சேர்ச்சுகளிலும் சங்கங்களிலும் கொடுக்கிறார்கள். போதாக்குறைக்கு இந்தியாவிலிருந்து விஷேடமாக இறக்குமதி செய்த சாமிமார்களையும் பாதிரிமார்களையும் கொண்டு இவர்களுக்கு வாராந்தம் கட்டம் கட்டமாக பயிற்சிகள் கொடுக்கப்படுகினறன. பயிற்சிகள் இலவசமாம். விரும்பினவர்கள் அவர்களின் போக்குவரத்து செலவுக்கு விரும்பினால் உதவி செய்யலாமாம். செய்யுங்கள் தாரளமாக செய்யுங்கள். ஆனால் இங்கிருப்பவர்களின் நிலையே இப்படி என்றால் யுத்தத்தில் பாதிக்கப்பட்வர்களின் மன நிலையை கொஞ்சம் சிந்தியுங்கள். அவர்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்.

இங்கிருந்து யுத்தத்திற்கு உதவி செய்தவர்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?
வெளிநாட்டில் இப்படியான பயிற்சிகளுக்கு ஒழுங்குகள் செய்யும் ஒருவரிடம் கதைக்கையில் அவர் சொன்னார் அங்கிருப்பவர்களை விட வெளிநாட்டிலுள்ள புலிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும்தான் கூடிய பாதிப்பாம்.
கட்டுரையில் பயமாக இருக்கு பயமாக இருக்கு என்று சொல்வதையும் படிக்க வழியில்லை என்று சொல்வதையும் சாப்பாட்டுக்கு வழியில்லை என்று சொல்பவர்க்கு ஒரு தொழில் வசதியை செய்து கொடுக்கக் கூடியமாதிரியும் முன்னேடுப்புக்களை முன்வையுங்கள். எல்லாம் அரசாங்கத்தின் பொறுப்பு அரசாங்கம் தான் செய்ய வேணும் என்று இங்கே இருந்து கொண்டு சொல்லிக் கொண்டிருந்தால் அரசாங்கம் செய்யும் உதவியை மட்டும் நம்பி இருக்கும் சனங்கள் தமது உரிமைக்காக, தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்க முடியுமா? அல்லது செய்வார்களா? சற்று சிந்தியுங்கள் எதிர்காலம் பற்றி.

7.     Kusumbo on October 30, 2009 4:53 pm
இங்கே புலிக்கு வால்பிடித்தவர்களை உளக்க வேணும் போல் இருக்கிறது. அதற்காக அரசு செய்வது சரி என்று ஏற்க இயலாது. அரசுக்கு என்று ஒரு தார்மீகப் பொறுப்பு உண்டு. பயங்கரவாதிகள் போல் யார் அழிந்தாலும் சரி என்று கண்மூடித்தனமாகக் குண்டு போட இயலாது. இதுவும் பயங்கரவாதம் தான். இனிப் புலிகளை நல்லவர்களாக்குவதும் கெட்டவர்களாக்குவதும் சிங்கள அரசின் கைகளில்தான் இருக்கிறது. இக்கட்டுரையை வாசிக்க கை கால்கள் பதறுகிறது. பிரபாகரன் சரணடைந்து இவ்வளவு உயிர் கொலையையும் தடுத்திருந்தாலாவது இந்தமக்கள் கடவுளாகக் கும்பிட்டிருப்பார்கள்.

8.     மேளம் on October 30, 2009 9:32 pm
உமா - விதவைகளுக்கு என்ன செய்யப்போகின்றீர்கள்? அநாதைகளுக்கு என்ன செய்யப் போகின்றீர்கள் என்று கேட்டுக் கொண்டிராமல் நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் அல்லது உங்கள் அடுத்த நடவடிக்கை என்ன என்பதைக் கூறுங்கள். உங்களைப் பார்த்து மற்றவர்கள் தொடரட்டும். அல்லது நீங்கள் செய்யவிருப்பதை இங்கு கூறுங்கள். உங்களுடன் சேர்ந்து மற்றவர்களும் செய்ய முடிந்ததைச் செய்யட்டும். மற்றவர்கள் செய்வார்கள் என்றிருப்பதை விட முதலடியை நாமெடுத்து வைப்பது இலகுவல்லவா?
நாம் சில நண்பர்களுடன் சேர்ந்து ஏற்கனவேயிருந்த ஒரு இல்லத்துக்கு உதவுகின்றோம். இன்று நேற்றல்ல 13 வருடங்களாக. அமைதியாக ஆர்ப்பாட்டமில்லாமல் நடந்துகொண்டிருக்கின்றது.
ஒரு விதவைத்தாய்க்கு சுயஉழைப்புக்கு அல்லது பெற்றோரை இழந்த ஒரு பிள்ளையை ஒரு நல்ல பாடசாலைக்கு அனுப்பி கல்வி கற்பிக்க என்று எத்தனையோ வழிகள் இருக்கின்றன. மனமிருந்தால் இடமிருக்கும் இடமிருந்தால் வழி பிறக்கும்.

9.     thalaphathy on October 30, 2009 9:58 pm
Dear Friends,
முடிந்துவிட்ட புலிகளைப்பற்றியோ அல்லது இழந்துவிட்ட உயிர்களையும், உடைமைகளைப் பற்றியோ இந்த பின்னோட்டங்களில் எழுதுவதினூடாக நடந்துமுடிந்த இந்த இனவாத யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கோ அல்லது பலியிடப்பட்ட உயிர்களுக்கோ எந்தவித விமோசனமும் கிடைக்கப்போவதில்லை.
எனது அறிவிற்கேற்பட்ட வகையில், கடந்த 60(2400) ஆண்டுகளுக்கு மேலாக இலங்கைத்தீவில் வாழ்ந்த தமிழர்கள் தமது அதிகரங்களுக்காகவும், ஆதிக்கத்திற்குவாகவுமே போராடினார்களே தவிர, இவர்கள் தமது நிய வாழ்விற்கும் மற்றும் இவர்களது எதிர்கால சந்ததியின் வாழ்விற்முகமாக போரடவில்லை. இவர்கள் தமது கற்கால மற்றும் இதிகாச காலங்களில் ஏற்படுத்தபட்டிருந்த கற்பனைப் பெருமைகளை தமது வாழ்வின் இயங்குதலாகவும், கலாச்சாரமாகவும் கருதியே தமற்கு மேலதிக அதிகாரங்கள் தரப்பட வேண்டுமென்ற அடிப்படையிலேதான் இவர்களது போராட்டங்கள் இன்றுவரை இலங்கையிலும் சரி இலங்கைக்கு வெளியேயும் சரி இடம்பெற்றுள்ளன.

இந்த இலங்கைத் தமிழர்கள் நவீன உலகத்தையும் அதன் இயங்கியலையும் அறிவுபூர்வமாகா ஏற்றுக்கொள்ளாதவர்களாகவும், தமது வாழ்வியல் கோட்பாட்டை சர்வ உலகமும் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்று நினைத்தே இன்றுவரை தமது போராட்டங்களை(லண்டன் ஹம்பேர்கர் உட்பட) நாடாத்தியிருக்கிறார்கள். இவர்களின் இந்த வாழ்வியல் கோட்பாடு முல்லிவாய்க்காலுடன் முடிவடைந்துவிட்டது.
இதுபோன்ற போராட்டங்களினூடாக அமெரிக்க கண்டத்தில் செவ்விந்தியர்களும், ஆஸ்த்திரேலிய கண்டத்தில் பழங்குடியினரும், மத்தியகிழக்கில் குர்திஸ் மக்களும் தமது இனரீதியானா அடையாளங்களை இழந்து வாழ்பவர்களாக வாழ்கிறார்கள்.
எனது கேள்வி இதுதான்
மனிதன் வாழப்பிறந்தவனா? சாகப்பிறந்தவனா? அல்லது ஆழப்பிறந்தவனா?

10.   palli on October 30, 2009 10:48 pm
//மனிதன் வாழப்பிறந்தவனா? சாகப்பிறந்தவனா? அல்லது ஆழப்பிறந்தவனா?//
தளபதி; மூன்றாவைதை சொல்லி இரண்டாவதை உன்மையாக்கி மூன்றாவதை அழித்தவன் தமிழ் மனிதன்: இது யார் என்பது தெரியாதா என்ன??

11.   BC on October 30, 2009 10:49 pm
தளபதி, மனிதன் வாழத்தான் பிறந்தவன். ஆண்ட இனம் மீண்டும் ஆள நினைப்பதில் என்ன பிழை என்று உசுப்பேத்தி அவனை சாகடிப்பது மாபெரும் தவறு. மற்றவர்களுக்கு குப்பி கடிக்க கொடுத்த தலைமையும் இறுதியில் தாங்கள் வாழ்வதற்காக வெள்ளை கொடி பிடித்தது.

12.   குகபிரசாதம் on October 30, 2009 11:15 pm
முள்ளிவாய்க்காலில் வெள்ளிபார்த்த வெங்காயத்தலையன் உள்ளைவிட்டு அடிப்பான் என்று இனவெறியில் வெங்கிணாந்திகள் நாங்கள் நம்பியிருக்க எங்கள் இரத்த உறவுகள் எல்லாம் அத்தனையும் இழந்து இறந்தவர்களை கூட அரையும் குறையுமாக புதைக்ககூட வழியே இல்லாமல் இரக்கம்கெட்ட நரபலி நரியர்களின் இரத்தவேள்வி திருவிழாவில் இரத்த ஆறில் மூழ்கி இன்று முகாம்களில் மூச்சு விட்டு கொண்டிருக்கையில் நாங்களோ தமிழீழக் கனவு கலைந்ததால் தூக்கம் கெட்டு அரை தூக்கத்தில் இருக்கிறோம்

13.   kavi on October 31, 2009 12:12 am
குன்றும் குழியும் குறுகி வழிநடப்பது
என்று விடியும் எமக்கு? என்கோவே!- ஒன்றும்
கொடாதானைக் ‘கோ’ என்றும் ‘கா’ என்றும் கூறில்
இடாதோ நமக்குஇவ் இடி.

14.   gobi on October 31, 2009 10:34 am
/அரசுக்கு என்று ஒரு தார்மீகப் பொறுப்பு உண்டு. பயங்கரவாதிகள் போல் யார் அழிந்தாலும் சரி என்று கண்மூடித்தனமாகக் குண்டு போட இயலாது. இதுவும் பயங்கரவாதம் தான்/
குசும்புசொல்வது சரி. அரசு எங்கள் எதிரி. தமிழர்கள் எத்தனை பேர் செத்தார்கள் என்று அரசு கவலைப்படாது. ஆனால் போர் என்ற வடிவத்தை மாத்தி யுத்தம் என்ற வடிவத்துக்கு மாத்திப் போட்டீங்களே. அப்படியாயின் சனங்கள் இருக்கும் இடத்தை தவிர்த்து போரை வைத்திருக்கலாமே. ஏன் அதை புலி செய்யவில்லை. சரி சனத்தை தங்கட அலுவல்களை தாங்களே பார்த்துக் கொள்ளட்டும் என்றுவிட்டு புலி அரசுடன் போரைச் செய்திருக்கலாம்தானே. ஏன் செய்யவில்லை. சனத்தை அள்ளிக் கட்டிக் தள்ளிக் கொண்டு போகாதிருந்திருக்கலாமே. எது எப்படியோ 30 வருசம் அவர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தவன் அவன்தானே என்போர் அவர்களை பாதுகாக்க முயலாது அவர்களுக்குள் ஒழிந்தது ஏன் என்று சொல்வார்களா? இவ்வளவு பேரும் சாக்க்கொடுத்த பின் சரணடைந்தது ஏன்? இருந்த காலம் முழுக்க சனத்தை நிலத்திலும் தாங்கள் நிலத்தின்கீழும் (பங்கர்) பாதுகாப்பாக வாழ்ந்ததுக்குப் பெயர்தான் போராட்டமா?

15.   பார்த்திபன் on October 31, 2009 11:01 am
கோபி,
புலிகள் செய்த தவறுகளினால்த் தான், இன்று இந்த மக்களுக்கு துயரங்கள் என்பதை எவரும் மறுக்கவில்லை. ஆனால் அந்த மக்கள் அரசை நம்பித்தான் அரசிடம் சரணடைந்தார்கள். ஆனால் அரசும் புலிகள் செய்த தவறுகளையே தொடர்ந்தால், அம்மக்கள் யாரை நம்புவது. எல்லோரும் இந்நாட்டு மக்கள் தான் என்று வெறும் அறிக்கைகளை மகிந்த விடுவதிலேயோ அல்லது தமிழைப் பேச முயல்வதினாலேயோ அந்த மக்களின் சீரழிவுகள் இல்லாது போய்விடப் போவதில்லை. அரசின் செயற்பாடுகள் தான் அந்த மக்களை நம்ப வைக்கும். அதனை நீங்களும் புரிந்து கொள்ளுங்கள்.

16.   மாயா on October 31, 2009 12:08 pm
// வெளிநாடுகளில் புலிகளுக்குப் பணம் கொடுத்து யுத்தத்துக்கு உதவியவர்களுக்கும் புலிகளின் ஆதரவாளர்களுக்கும் மே 18ன் பின்னர் அவர்கள் உளவியல் ரீதியாக தாக்கம் அடைந்து விட்டார்கள் என உளவியற் பயிற்சிகள் கோவில்களிலும் சேர்ச்சுகளிலும் சங்கங்களிலும் கொடுக்கிறார்கள். - uma on October 30, 2009 4:50 pm //

புலிகளில் இருந்தவர்களுக்கும் , புலிகளின் ஆதரவாளர்களுக்கும் உடனடியாக மனநல மேம்பாட்டுக்கான பயிற்சிகள் மிக மிக அவசியம். இவர்கள் அனைவரும் மனநோயாளிகளே. (ஏனைய இயக்கங்களிலும் இவர்களைப் போன்ற குறிப்பிட்ட சிலர் இருக்கிறார்கள்.) அதிலும் புலிகள் குறிப்பாக சாவுகளை வைத்து சந்தோஷப்பட்ட மனநோயாளிகள். இன்றும் இவர்களது அனைத்து நிகழ்வுகளிலும் இறந்தவர்களுக்கான அகவணக்கத்தோடுதான் தொடங்குகிறார்கள். இங்கே போராட்டத்தின் பேரில் இறந்தவர்களுக்கு மரியாதை செய்வதாக முக்கியப்படுத்திக் காட்ட முற்படுகிறார்கள். இதன் மறுபக்கம் இருப்பவர்கள் இறக்கும் போதும் , அவர்களை நினைவு கூருவோம் எனும் ஒரு மனநிலையை உருவாக்கி போராட்டத்துக்காக சாவதற்கு முன்வரும் ஒரு நிலையை ஊக்குவிக்கும் ஒரு விளம்பர உத்தியாகவே நடத்தப்பட்டது. வெற்று மனிதனாக சாவதை விட மாவீரனாக சாவாதாக எண்ண வைத்ததே இந் நிகழ்வுதான். எந்த முட்டாளும் மக்களால் மாவீரனாக கருதப்படலாம் எனும் உத்தி. இதன் உச்சம்தான் மாவீரர் நாளாகும். இதை வைத்து இறந்தவர்களது படங்களை வைத்து இறந்த போராளிகளது உறவுகளை மகிழ்ச்சிப்படுத்தி , கெளரவப்படுத்தி, ஏனையவர்களும் தற்கொலை சாவுக்கோ அல்லது போராடி சாகவோ முன்வந்து மாவீரர்களாக வேண்டும் எனும் மனநிலையை உருவாக்கி சாகடிக்க வழி கோலுவது. அத்தோடு´அவர்களது குடும்பத்துக்கான சலுகைகள். கடைசியில் மாவீரர் குடும்பம் என முள்ளிவாய்க்காலில் அச்சமாக வெளியேறாதவர்களதும் சாவுகளே இறுதியில் நடந்தது. மனிதன் எதை நினைக்கிறானோ அதுவாகிறான் என்கிறது சைகாலஜி தத்துவம்.

நீங்கள் சாவதில்லை, விதைக்கப்படுகிறீர்கள் என்றே சொல்லி சொல்லி கடைசியில் எங்கே விதைக்கப்பட்டார்கள் என்றே தெரியாமல் மண்ணுக்குள் விதையாகவோ அல்லது எரிந்து மண்ணுக்கு உரமாகவோ ஆகிவிட்டதுதான் கண்களில் தெரியும் அல்லது தெரியாது கேள்விப்படும் நிஜம். அதையே ஏனைய அமைப்புகளும் வைரஸாக ஏற்றுக் கொண்டு , வீரமக்கள் தினம் அல்லது ஏதோ பெயர்களில் பின் பற்றி செய்து வருகின்றனர். இவை சிரிக்கவே வைக்கிறது.

இந் நிகழ்வுகளில் அதன் தலைவர்களது கொலைகளுக்கு பொறுப்பானவர்களையும் அருகில் வைத்து கெளரவிப்பதை பார்க்கும் போது, இவற்றை எள்ளி நகையாடவே வைக்கிறது. ஒருவரின் சாவுக்கு பொறுப்பானவன் , அவனுக்கு பக்கத்திலேயே படத்தில் அழகாக இருக்கிறான். என்ன கொடுமை? இந்நிகழ்வுகளை செய்பவர்களுக்கு அந்த அமைப்புக்குள் நடந்தவைகள் குறித்து எதுவும் தெரியாது என்றே நினைக்கிறேன். தெரிந்தவர்களும் அமைதி காக்கின்றனர்? எதையாவது செய்ய வேண்டும் என்ற ஆவலே அதைச் செய்யத் தூண்டி நிற்கிறதே தவிர, என்ன செய்கிறோம் என அறியாத மூடர். பிரபா தன்னால் கொல்லபட்டவனுக்கே புலிகளின் தேசிய கொடியை போர்த்தி பட்டம் கொடுத்த மாபியா. சாவுக்கு காவு கொடுக்கும் இளைஞர்களை கட்டியணைத்து சிரித்தபடி புகைப்படம் எடுத்த மனநோயாளி. அதே ரேன்ஜில் இன்னும் சிலர் வாழவே செய்கிறார்கள். காந்தியின் நினைவு தினத்தில் கோட்சேயின் படத்தையும் வைத்து கொண்டாக் கூடிய மூடர்கள் இவர்கள்.

ஒருமுறை சுவிஸிலிருந்து பேசிய ஒருவர் என்னிடம் சொன்னார், புளொட்டின் அடுத்த வீரமக்கள் தினத்தை புலிகளின் மாவீரர் தினத்தை விட விஷேசமாக கொண்டாட இருக்கிறார்களாம் என்று. எப்படி என்று கேட்ட போது , ஆயுதங்களோடு கண்காட்சியும் நடத்த திட்டமிட்டிருக்கிறோம் என்றார். எனக்கு ஆத்திரம்தான் வந்தது. அடுத்த புலியாகவா உருவாகப் போகிறீர்கள் என்றேன். புளொட்டின் அழிவுக்கு இது போதும். இலங்கையில் அனைத்து இயக்கங்களின் ஆயுதங்களும் களையப்படுகின்றன. தலைமைகளின் பாதுகாப்புகள் விலக்கிக் கொள்ளப்படுகின்றன. இந்நேரத்தில் புலத்து புண்ணாக்குகள் மீண்டும் ஆயுதக் கலாச்சாரத்தின் ஊடாக வீரமக்கள் தினம் கொண்டாடினால் , இலங்கையில் செயல்படும் அப்பாவிகள் கொல்லப்படவோ அல்லது கைதாகவோ வழிவகுக்கும் என்று சொன்னேன். மறுமுனை தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் தொடர்பு கொள்ளவே இல்லை. புலத்தில் புளொட் என இயங்கும், பலர் புளொட் சித்தாந்தங்களே தெரியாதவர்கள். இவர்களால் இனி ஆபத்து உண்டு. அவர்கள் புலிகளோடு மோதி வாழ்ந்தவர்கள். அவர்கள் புலிகளாக உரு மாற முயல்கிறார்கள். இவர்கள் மட்டுப்படுத்தப்பட வேண்டும். இந்த வீரமக்கள் தினம் போன்றவை தேவையற்றது. வேண்டுமானால் பிறந்தநாளையோ அல்லது நினைவு நாளாகவோ கொண்டாடுங்கள். வீரம் அல்ல விவேகமே இன்று தேவையானது. வாழ வைக்க அந்த அமனிதருக்காக எதையாவது செய்ய நிகழ்வுகளை செய்யுங்கள்.சாவை நோக்கி மன எண்ணங்களை உருவாக்காதீர்கள். உலக நாடுகள் அனைத்தும் யுத்தங்களை கண்டே முன்னேறியுள்ளது. அவர்கள் தனிமும் தனது நிகழ்வுகளில் அகவணக்கமோ அல்லது இறந்தவர்களுக்கான அஞ்சலியோ செலுத்துவதில்லை. அதற்கான நாளில் மட்டுமே அதை நினைவு கூருகின்றனர். அதையாவது உணருங்கள். இதை இனியும் உணராவிட்டால் எதிர்காலத்தில் அனைத்து தமிழரையும் மனநல முகாம்களில் அடைக்க வேண்டி வரும்.

17.   குகபிரசாதம் on October 31, 2009 2:12 pm
ஆண்டபரம்பரை மீண்டும் ஒருமுறை ஆழநினைப்பதில் என்ன குறை என்று எண்ணி சிதம்பரத்தை சேர்ந்த திருவேங்கடத்தின் பேரன் வேலுப்பிள்ளை பிரபாகரனை ஆளவிட்டு முப்பதுவருடமாக நாம் கண்டதென்ன?? பூச்சியத்துக்குள்ளே ஒரு ராச்சியத்தை வைத்துக் கொண்டு எதுவும் புரியாமல் புளிய மரத்தில் ஏறி வெள்ளி பார்த்ததுதான் வேறென்ன?
நாங்கள் புலிக்கு காசு அள்ளி கொடுத்தால் ஈழம் வருமென புளுகில் இருந்தோம்
புலிகளின் தலைகளோ கில்லரிக்கு நம்ம காசை குடுத்து வைகோவுக்கும் திருமாவுக்கும் நம்ம காசை கொடுத்து நம்ம பிள்ளைகளை பலி கொடுத்து பிணக்கணக்கு காட்டி தாங்கள் மட்டும் சொகுசாக இருந்து கொண்டு ஈழம் வருமென முள்ளிவாய்காலில் வெள்ளி பார்த்தனர்.
சாகப்பிறந்தவர்கள் ஆளப்புறப்பட்டு வாழப் பிறந்தவர்களை பல்லாயிரக்ககணக்கில் பலி கொடுத்து தாங்களும் கொள்ளி வைக்கவே ஆள் இல்லாமல் இருந்த இடமே தெரியாமல் ஆளப்பிறந்தவர்கள் என்று சொல்லி அழிந்து போனதுதான் இன்று மிச்சம்.

18.   The Final Phase « the Blacklight Arrow on December 24, 2009 8:12 am
… (not real name) is from 8th Channel, Uruthirapuram. His testimony is taken from Thesam.net of 30th October 2009. It comes across as the plain, honest testimony of a simple man. Like with….


No comments:

Post a Comment