Friday, 16 May 2014

பெளத்தமும் தமிழும் : கலாநிதி எஸ் தியாகராஜா

February 15th, 2011                                                                

 அண்மைக் காலமாக புத்தர் சிலைகளும் அரசமரங்களும் தமிழ் மக்களின் தாயகப் பிரதேசங்களை நோக்கி வருவதாக பல குற்றச்சாட்டுகள் அச்சங்கள் தமிழ் ஊடகங்களினால் திட்டமிட்டு மிகைப்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழுக்கும் பெளத்தத்துக்கும் உள்ள உறவை முற்றாக நிராகரிக்கும் இச்செய்திகள், ஆய்வுகள் பெளத்தம் சிங்கள மக்களின் ஏகபோகமான மதமாகக் காட்டுகின்றனர். மருத்துவ கலாநிதியான எஸ் தியாகராஜா வரலாற்றுத்துறையிலும் பட்டம் பெற்றவர். இவர் தேசம் சஞ்சிகையில் எழுதிய தொடர் கட்டுரையின் சாரம்சத்தை இங்கு பதிவிடுகிறோம். (2003)
._._._._._.
யாழ்ப்பாணத்தில் பௌத்த மதச் சின்னங்கள் இருப்பதால் அங்கு சிங்களவர்கள் வாழ்ந்தார்கள் என்று கூறுவது அறியாமை. மாறாகத் தமிழர்கள் பௌத்தர்களாக இருந்தார்கள் என்பதே உண்மை. மேலும் கி மு 500 முதல் ஏறக்குறைய 1500 ஆண்டுகள் பௌத்த மதம் தமிழகத்தின் முக்கிய மதங்களில் ஒன்றாக விளங்கியது. சாதிப் பிரிவினையை ஏற்றுக் கொள்ளாத தமிழர்கள், பிறப்பினால் மேல் சாதி - கீழ் சாதி எதுவும் இல்லையெனப் போதித்த பௌத்தத்தை இலகுவாக ஏற்றுக் கொண்டனர்.

நாகப்பட்டினம் சூடாமணி விகாரம்:
தமிழகத்தில் பௌத்தமதம் தழைத்தோங்கிய மற்றொரு நகரம் நாகப்பட்டினமாகும். பல பௌத்த விகாரைகளைக் கொண்டிருந்த இப்பட்டினம் பிரசித்திபெற்ற சூடாமணி விகாரத்தைக் கொண்டிருந்தது. ஸ்ரீ விஜயத்து மன்னனால் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட இந்த விகாரம் திராவிடக் கட்டிடக்கலை அமைப்பில் கட்டப்பட்டு, மூன்று மாடிகளுடன் கோபுர வாசலையும் கொண்டிருந்ததாக லெய்டன் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.

தொல்லியல் கண்டுபிடிப்புகள்:
சமீப காலங்களில் காவிரிப் பூம்பட்டினம், நாகப்பட்டினம் ஆகிய துறைமுக நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் பௌத்த விகாரைகளின் அடித்தளங்களும், பௌத்தமத கருவூலங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  காவிரிப்பூம்பட்டினத்தில் கி.மு.மூன்றாம் நூற்றாண்டுக்குரிய புத்தரின் கற்சிலைகளும், கி.மு.முதலாம் நூற்றாண்டிற்குரிய செப்புத் திருவுருவும் கண்டெடுக்கப் பட்டிருக்கின்றன.

மதுரையில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்குரிய பிராமி எழுத்துக்கள் வரையப்பட்ட பௌத்த மதக்குகைகள் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன. இவை யாவும் தமிழகத்தில் பௌத்தமதம் பரவியிருந்த ஒரு காலகட்டத்தை எடுத்துக் காட்டுகின்றன.

சூடாமணி விகாரத்தின் கோபுரம்:
கி.பி.10ஆம் நூற்றாண்டின் பின்னர் பௌத்தம் சிறிது சிறிதாகத் தனது ஆதிக்கத்தை இழந்து 13ஆம் நூற்றாண்டளவில் தமிழகத்திலிருந்து இல்லாமலே போய்விட்டது. சூடாமணி விகாரமும் ஆதரிப்பார் இல்லாது அழிவுற்ற நிலையை அடைந்துவிட்ட போதிலும் அதன் கோபுரம் 19ஆம் நூற்றாண்டு வரை உயர்ந்து நின்றது.
17ஆம் நூற்றாண்டின் சீன யாத்திரீகரான லின் கியு, நாகப் பட்டினத்துறையை அடைவதற்கு வெகு தூரத்திலிருந்தே இக்கோபுரத்தைத் தனது கப்பலிலிருந்து காணக் கூடியதாக இருந்ததைப் பதிவு செய்துள்ளார்.
பல நூற்றாண்டுகளாக இந்துக்களாலும், பௌத்தர்களாலும் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வந்த சூடாமணி விகாரமும், அதன் கோபுரமும் 1867ஆம் ஆண்டில் பிரெஞ்சு கிறிஸ்தவ சங்கத்தினரால் இடிக்கப்பட்டுத் தரை மட்டம் ஆக்கப்பட்டது.

பௌத்த மகாகாவியம்:
தமிழ்நாட்டில் பௌத்தமதம் உன்னத நிலையை அடைந்திருந்த காலத்தில் மணிமேகலை, உதயணன் காதை, குண்டலகேசி, நீலகேசி, வீரசோழியம் ஆகிய காப்பியங்கள் தமிழ்ப்பௌத்தப் புலவர்களால் இயற்றப்பட்டன.
மதுரைக் கூலவாணிகன் சாத்தனாரின் மணிமேகலைக்கு நிகரான இன்னொரு பௌத்த காவியம் உலகின் வேறெந்த மொழியிலும் இன்றுவரை உருவாகவில்லை என்றும் சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டும் தமிழர் நாகரீகத்தின் உச்சநிலையை எடுத்தியம்பும் காவியங்கள் என்றும் மேனாட்டு அறிஞர் அலெயின் டானியலு எடுத்து உரைக்கிறார். (Leidon Copper Plates இராஜராஜ சோழன் 1 வழங்கிய ஆனைமங்கலச் செப்பேட்டுச்சாசனம்.)
இன்று பௌத்தத்தின் பாதுகாவலர்கள் எனப் பீற்றிக்கொள்ளும் சிங்களவர்களால் மணிமேகலை, குண்டலகேசி, நீலகேசி, உதயணன் காதை, வீரசோழியம் ஆகிய தமிழ்ப்பௌத்த காப்பியங்களுக்கு நிகரான ஒரு பௌத்தமத காவியத்தை இருபத்துமூன்று நூற்றாண்டுகளாகத் தரமுடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

தமிழ் பௌத்தஞானிகள் இயற்றிய பாளி மொழி இலக்கியங்கள்;
தமிழகத்தைச் சேர்ந்த பௌத்த ஞானிகளும், துறவிகளும் பௌத்தமத மொழியான பாளி மொழியைப் பயின்று, அந்த மொழியிலேயே பல பௌத்த சமய இலக்கியங்களை உருவாக்கியிருக்கின்றார்கள். (இராசவேலு, க. திருமூர்த்தி, கோ. தமிழ்நாட்டுத் தொல்லியல் அகழ்வுகள், சென்னை 1995.)

தமிழகத்திற்கும் இலங்கைக்குமிடையே நிலவிய பௌத்த கலாச்சாரத் தொடர்புகளை எடுத்துரைக்கும் உபாசக ஜனலங்கார (Upasaka Janalankara) என்ற பாளி நூலில் தமிழகத்தின் பௌத்த துறவிகளைப் பற்றியும், அவர்கள் உருவாக்கிய பாளி இலக்கியங்களைப் பற்றிய விவரங்களும் தரப்பட்டுள்ளன. (தனபாக்கியம், ஜி. இலங்கையிற் தொல்லியலாய்வுகளும் திராவிடக்கலாச்சாரமும், சென்னை 2001. பக. 256-258.)

புத்தகோசர்:
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வந்த பௌத்த ஞானிகளில் காஞ்சிபுரத்துப் பௌத்த பள்ளியைச் சேர்ந்த புத்தகோசர் குறிப்பிடத்தக்கவர். இலங்கையை மகாநாமன் (கி.பி.409-431) ஆட்சி புரிந்த காலப் பகுதியில் அநுராதபுரம் மகா விகாரையில் மூன்று ஆண்டுகள் தங்கியிருந்த புத்தகோசர் “விசுத்தி மார்க்கம்” என்ற பௌத்தமத நூலை பாளிமொழியில் இயற்றினார்.

புத்த தத்தர்:
உறையூரைச் சேர்ந்த புத்ததத்த மகாதேரர், தமிழகத்தில் வாழ்ந்த காலத்தில் மதுரத்த விலாசினி, வினய வினிச்சயம், உத்தர வினிச்சயம், ரூபாரூப விபாகம் ஆகிய பௌத்த நூல்களை எழுதியுள்ளார். பின்னர் இவர் இலங்கைக்கு வந்து தங்கி இருந்த காலத்தில் ஜினாலங்காரம், தந்ததாது, போதிவம்சம், ஆகிய நூல்களை இயற்றியபின் திரும்பி காவிரிப்பூம்பட்டினம் சென்றடைந்தார்.

காவிரிப்பூம்பட்டினத்தில் காளிதாசரின் பௌத்தப் பெரும்பள்ளியில் தங்கி அபிதம்மாவதாரம் என்ற காவியத்தை உருவாக்கினார். புத்ததத்தரின் நூல்கள் இன்று இலங்கையின் பௌத்தசங்கத்தினரால் பொக்கிஷங்களாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

ஆச்சாரிய தருமபாலர்:
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தின் பௌத்த மகாவிகாரையின் மகாதேரராக இருந்தவர் ஆச்சாரிய தருமபாலர். இவர் இலங்கைக்கு வந்து அநுராதபுரம் மகாவிகாரையில் தங்கியிருந்த பொழுதில் தமிழகத்துப் பௌத்தப் பள்ளிகள் வைத்திருந்த பழைய தமிழ் உரைகளையும் இலங்கையிலிருந்த பாளி உரை நூல்களையும் ஆராய்ந்து திரிபிடகத்திற்கு பதினான்கு உரைகளை எழுதியுள்ளார். ஆச்சாரிய தருமபாலர் பல்லவ அரச வம்சத்தைச் சேர்ந்தவராவார். கந்தவம்சம் என்னும் நூல் இவர் இயற்றிய பௌத்த நூல்களை பட்டியலிட்டுச் சொல்கிறது.

அநிருத்த தேரர்:
பாண்டிய நாட்டில் மதுரையிலிருந்த சோம விகாரையின் தலைவராக இருந்தவர் அநிருத்த தேரர். இவர் எழுதிய அபிதர்மார்த்த சங்கிரகம் என்ற பாளி நூல் இலங்கைப் பௌத்த சங்கத்தினராலும், பர்மா பௌத்த சங்கத்தினராலும்;  படித்துப் பேணப்பட்ட பிரபல பௌத்த காவியம். பரமத்த வினிச்சயம், காமரூபப் பரிச்சேதம் ஆகியன இவர் எழுதிய மற்ற நூல்களாகும்.

காஸ்யப தேரர்:
சோழநாட்டில் காவிரிப் பட்டினத்தைச் சேர்ந்த காஸ்யப தேரர் விமதிவிச்சேதனி, விமதிவிநோதின், மோகவிச்சேதனி, அநாகத வம்சம் ஆகிய பௌத்த தர்ம உரை நூல்களை எழுதியுள்ளார். இவரது நூல்களும் இலங்கையின் பௌத்த சங்கத்தினரால் பேணப்பட்ட இலக்கியங்களே.

இவ்வாறு தமிழ்நாட்டின் பௌத்த சங்கத்தைச் சேர்ந்த ஞானிகளும், துறவிகளும் காலத்திற்குக் காலம் இலங்கைக்கு வந்து இலங்கையின் தேரவாத பௌத்த கோட்பாடுகளை ஆதரித்துப் பேசியும் எழுதியும் வந்த சம்பவங்களும், அதே போன்று இலங்கையின் பௌத்த சங்கத்தைச் சேர்ந்த தேரர்கள் தமிழகத்தில் பரவியிருந்த மகாயான பௌத்தத்தை ஆதரித்து வந்த செய்திகளும்  இலங்கையிலுள்ள பௌத்த பாளி நூல்களில் பொதிந்து கிடக்கின்றன.
இன்று இலங்கையில் பௌத்தம் சிங்கள மக்கள் கடைப்பிடிக்கும் மதமாக இருப்பினும், சரித்திர காலத்தில் பௌத்தம் தமிழ் மக்களின் முக்கியமான மதங்களில் ஒன்றாகவே இருந்தது. (சீனி. வேங்கடசாமி. பௌத்தமும் தமிழும், சென்னை 1978 )கி.மு.400 முதல் கி.பி.600 வரை ஆயிரம் ஆண்டுகளாக பௌத்தம் தமிழகத்தில் பிரபல்யமான ஒரு மதமாக இருந்துள்ளது. ஆறாம் நூற்றாண்டின் பின்னரே சைவசமயக் குரவர்களும், நாயன்மார்களும் தோன்றி பௌத்தத்தை தமிழகத்திலிருந்து முற்றாக இல்லாதொழித்தனர்.
 
1. இலங்கையிலும் இந்தியாவிலும் கண்டெடுக்கப்பட்ட கி.மு.200ம் ஆண்டிற்குரிய “பௌத்த சக்கரம்” என்றழைக்கப்படும் நாணயங்கள், தமிழகத்தின் பாண்டிய மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களே எனப் பிரித்தானிய அகழ்வாராய்ச்சியாளர்கள் இனம் காணுகின்றார்கள்.(Codrington,H.W. Ceylon Coins and Currency, Colombo, 1924) 

2. கி.மு.300ஆம் ஆண்டுக்காலப் பகுதியில் கொற்கைப் பாண்டியர்கள் யானையைத் தங்கள் அரச சின்னமாகக் கொண்டிருந்தது அவர்களது பௌத்த மத சார்பைக் குறிப்பதாக நாணய இயல் வல்லுநர் லோவந்தால் கருதுகிறார்.(Loventhal, Rev. E. The Coins of Tinnevelly, Madras, 1938 )
கி.பி.25ஆம் ஆண்டில் பாண்டியர்கள் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சியை ஆரம்பித்த பின்னரே தங்கள் சின்னத்தை மீனாக மாற்றினார்கள். மீன் சின்னமும் பௌத்தமதச் சின்னமே என லோவந்தால் தெரிவிக்கிறார்.(Loventhal, Rev. E. The Coins of Tinnevelly, Madras, 1938) 

3. தமிழில் உள்ள ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலைக்கு இணையான ஒரு பௌத்த மத காவியம் இன்றுவரை உலகில் வேறு எந்த மொழியிலுமே உருவாகவில்லை என்பதே பல மேலைநாட்டு அறிஞர்களின் அபிப்பிராயம்.(Alain Danielou. Introduction to Maniekhalai The Dancer with the Magic Bowl, New York, 1989) 

4. காவிரிப் பூம்பட்டினத்திலும், நாகைப் பட்டினத்திலும் நடைபெற்ற அகழ்வுகளில் காணப்பட்ட கிறீஸ்தவ காலத்திற்கு முற்பட்ட, பௌத்த விகாரங்களின் அடித்தளங்களும், பௌத்த ஸ்தூபிகளும், கருவூலங்களும், புத்தபிரானின் உருவச் சிலைகளும், தமிழகத்தில் பௌத்தமதம் பரவியிருந்த ஒரு காலகட்டத்தை எடுத்துக்காட்டுகின்றன. (நடன காசிநாதன்: பூம்புகாரும் அகழ்வாய்வும், சென்னை, 1999.) 
இவ்வாறே கந்தரோடை அகழ்வுகளில் காணப்பட்ட பௌத்த மதச் சின்னங்கள் அக்கால மக்கள் மேற்கொண்ட மதச்சார்புகளை எடுத்துக் காட்டுகிறதேயன்றி வேறேதும் அர்த்தமில்லை. கந்தரோடையில் பௌத்த மதச் சின்னங்கள் காணப்படுவதால் அவ்விடத்தில் ஒரு காலத்தில் சிங்கள மக்கள் வாழ்ந்தார்கள் என்பது அபத்தமான வாதமாகும்.

Related Articles:

உங்கள் கருத்து

This entry was posted on Tuesday, February 15th, 2011 at 12:14 pm and is filed under
 கட்டுரைகள்/ஆய்வுகள், தியாகராஜா எஸ்,மறுபிரசுரங்கள். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.Edit this entry. 

22 Comments so far
1.     thurai on February 15, 2011 1:21 pm Edit This
மறைக்ககூடாத உண்மைகளையும், வெளிப்படுத்த வேண்டிய தகவல்களையும் கொண்ட ஆய்வுக்கு பாராட்டுகள்.
சமயங்கழும், மொழிகழும் மனிதனிற்கேயன்றி, மனிதன் சமயங்களிற்காகவும் மொழிகளிற்காகவும் தோன்றவில்லை. இந்த உண்மைகளை மறைத்து சுயநலம் காணும், மத, இன பேதம்மிக்க அரசியல் வாதிகளின் கண்களை இக்கட்டுரை திறக்குமென நம்புகின்றேன். துரை

2.     Ajith on February 15, 2011 7:04 pm Edit This
அண்மைக் காலமாக புத்தர் சிலைகளும் அரசமரங்களும் தமிழ் மக்களின் தாயகப் பிரதேசங்களை நோக்கி வருவதாக பல குற்றச்சாட்டுகள் அச்சங்கள் தமிழ் ஊடகங்களினால் திட்டமிட்டு மிகைப்படுத்தப்பட்டு வருகின்றது.
Dear Dr Thiyagarajah,
Are you making all of us fools? Are you a buddhist or a Hindu or a Christian? Is that you who who behind these building of buddhist temples and Bo trees in our homeland or any of the people of the tamil homeland. The tamil people not against buddhism and bo-tree. There is nothing wrong Buddhism coming to tamil areas by tamils. The people of the land has the right to decide which relegion they want to follow, not the Sinhala regimes and Sinhala military to decide.

3.     சாந்தன் on February 15, 2011 8:06 pm Edit This
//…… தமிழுக்கும் பெளத்தத்துக்கும் உள்ள உறவை முற்றாக நிராகரிக்கும் இச்செய்திகள், ஆய்வுகள் பெளத்தம் சிங்கள மக்களின் ஏகபோகமான மதமாகக் காட்டுகின்றனர்……//
என்ன ஜோக் அடிக்கிறியளா? ஸ்ரீலங்கா சிங்கள + பெளத்த நாடு என முடிச்சுப்போட்டது ஊடகங்கள் அல்ல மாறாக சிங்கள அரசும் அதற்கு முண்டு கொடுக்கும் சிங்களவர்களுமே! அதனை அரசியலமைப்பில் எழுதிவைத்தது ஊடகங்கள் என நீங்கள் சொன்னால் நம்ப நாம் என்ன??
அண்மையில் கூட எங்கள் மாற்றுக்கருத்தாளர் வாய் நிறைய மெல்லும் ‘அவல்’ பல்லின பல்கலாச்சார மதஒற்றுமை எல்லாம் அகில இலங்கை பெளத்த சங்கத்தினால் தூக்கி எறியப்படிருக்கிறது. அதாவது ஸ்ரீலங்காவில் பல மதங்களை அரசு ஊக்குவிக்கிறதாம் அதனை தடுக்க வேண்டுமாம். இத்தனைக்கும் அரசு சொல்லும் பல்கலாச்சாரம் என்பது பம்மாத்து என்பது தெரிந்துகொண்டும் இக்கூச்சல்!

4.     சாந்தன் on February 15, 2011 8:22 pm Edit This
மேலும் புத்த பிக்குகள் அரச உளவாளிகளாகப் பணிபுரிகிறார்கள் எனவும் குற்றச்சாட்டு வருகிறது. இதனை தமிழ் ஊடகங்கள் சொல்லவில்லை மாறாக சிங்கள ஊடகங்கள் சொல்கின்றன!
Take precautions against the spying monks
(Lanka-e-News, 14, Feb.2011, 11.25PM) According to reports reaching Lanka e news , a group of bhikkhus have been recruited as spies to the State Intelligence Service(SIS). This group will be masquerading as Sangha members while engaging in spying for the intelligence service.
A number of Student monks who are facing acute hardships and in dire poverty stricken state have also been enlisted by payment of money to work as spies . The masquerading Bhikkhus who are not treading the noble path preached by Lord Buddha will be acting in liaison with the student monks in carrying out their espionage tasks. These spies are being backed by similar caliber of unscrupulous Bhikhus in all divisions .
Each of these unscrupulous monk treading the wrongful Buddhist path will be given a monthly payment of Rs. 15000/- to Rs. 20000/-, reports further add.

5.     Thalaphathy on February 15, 2011 8:24 pm Edit This
இதைப்போன்ற கட்டுரைகள் ஏற்கனவே DBS ஜெயராஜின் இணையபக்கதில் வெளியாகி, சரித்திரங்களை ஏற்றுக் கொள்ளாதவர்களிடையே நீண்ட விவாதங்களை ஏற்படுத்தியிருந்தன. கட்டுரையாளர் இந்த கட்டுரைகளைப் பின்பற்றித்தான் தனது கட்டுரையை தமிழிழ் தருகிறார் என எண்ணத் தோன்றுகிறது. எதற்க்கும் கீழ்வரும் கட்டுரைகளையும் வாசித்துப் பாருங்களேன்!
-http://dbsjeyaraj.com/dbsj/archives/1886
-http://dbsjeyaraj.com/dbsj/archives/1956
-http://dbsjeyaraj.com/dbsj/archives/1954
-http://dbsjeyaraj.com/dbsj/archives/1922

6.     thurai on February 15, 2011 8:41 pm Edit This
அஜீத்,
சிங்கள அரசும், சிஙகள இராணுவமும், புத்தசமயமும், சிங்களவரும் தமிழர்களிற்கு எதிரானவர்கள் என்பதையே வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் தமிழரை உங்களால் தடுக்க முடியுமா? புத்தசமயத்திலும், சிங்கள அரசியல் கட்சிகளிலும் சேர்வது துரோகிகள் செயல் என சாயம் பூசப்பட்டே துரையப்பா முதல் கொலைகளை ஆரம்பித்தார்கள். சில தமிழரின் ஆசை தமிழர்களை தாங்களே ஆள வேண்டுமென்பதேயாகும். தமிழரின் வாழ்வில் அக்கறை கொண்டிருந்தால் இந்த அழிவே ஏற்பட்டிருக்காது.
யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் கோட்டை கட்டி ஆழும்போதும், ஆங்கிலேயர் பாடசாலைகளையும், கிறிஸ்தவ தேவாலயங்களையும் கட்டும் போதும் எங்கள் தாய்மண், தமிழ்மண் பற்று எங்கு போயிருந்தது? தமிழினம் அழிந்தா போய்விட்டது.
உண்மைகள் வெளியில் வரவேண்டும். புத்தசமயம் தமிழர்களிடமிருந்து விரட்டப்படடிருக்க வேண்டுமே தவிர தானாக தமிழரிடமிருந்து அழியவில்லை. பிழைப்புக்கு வந்த புலம்பெயர் நாடுகளில் பிழைப்புக்காக இந்துக் கோவில்களைக் கட்டும் போது, பிழைப்பிற்கு வந்த இராணுவம் தமிழ் பிரதேசத்தில் புத்த கோவில்கட்டுவதில் என்ன தவறு? -துரை

7.     சாந்தன் on February 15, 2011 10:16 pm Edit This
//…சிங்கள அரசும், சிஙகள இராணுவமும், புத்தசமயமும், சிங்களவரும் தமிழர்களிற்கு எதிரானவர்கள் என்பதையே வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் தமிழரை உங்களால் தடுக்க முடியுமா….//
துரை, நீங்கள் மேலே சொன்னவற்றை தமிழர் சொல்லவில்லை மாறாக ஸ்ரீலங்காவின் அரசியலமைப்பு ஆம் அரசியலமைப்பு சொல்கிறது.
சிங்களம் மட்டும்…
பெளத்தம் முதன்மை அரச மதம்…
பெளத்த சாசனம் பாதுகாத்தல் அரசிலயமைப்பில் உத்தரவாதம்…
வெளிநாட்டான் செய்த காரில் கூட சிங்கள ‘ஸ்ரீ’….
தமிழருக்கு ஸ்பெசல் பதிவுகள்….
தமிழரின் பகுதியில் மட்டும் கிளர்ச்சி நடந்தால் குண்டுவீச்சு….
அரசமரத்தை அனுமதி இல்லாமல் வெட்டினால் அரஸ்ட்…..
இப்படி பல பல…
நீங்கள், சிங்கள அரசை நம்பியிருந்தீர்கள். அவர்கள் இப்படி அந்தரத்தில் விடுவார்கள் என நினைத்திருப்பீர்களா?
நீங்கள் மேலே சொன்ன கேள்விகளைக் கேட்கவேண்டிய இடம் வேறு.

8.     T Sothilingam on February 15, 2011 11:02 pm Edit This
நாயன்மார்களுடன் இணைந்து காஞ்சிபுரம் சங்கரர் மடமும் இணைந்தே பெளத்தத்தை வெளியகற்றினர். இதன் பின்னர் வந்த சங்கரர் (என நினைக்கிறேன்) பெளத்தத்தை இந்துக்களுடன் இணைத்து பிரச்சாரங்களை செய்தும் வந்தார். காஞ்சிபுரத்திலிருந்தே பெளத்தம் தென்கிழக்காசியாவிற்கும் யப்பான் சீனாவுக்கும் தமிழர்களே எடுத்துப் போனார்கள் என்பது பற்றி பெளத்த மதகுரு எம்முடன் பேசும்போது கூறினார்
பெளத்த காலத்திற்கு முன்பு சைவர்கள் (இராவணண் பரம்பரையினர் உட்பட) இலங்கையில் இருந்துள்ளதும் இதன் காரணமாகவே இலங்கையின் எல்லாதிசைகளிலும் சிவன் கோவில் கட்டப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. (சிங்கள மக்கள் தாமே இராவணண் பரம்பரையினர் என்கிறார்கள்)
சைவர்களுக்கு முன்னயோர்கள் வீரசைவர்கள் என்றும் முக்குலத்தோர் என மூன்று பிரிவினர் இருந்துள்ளனர் என்றும் அறிந்துள்ளேன். இவர்களே பின்னர் 3 சாதியினராக உள்ளதாகவும் அறிந்தேன் இவைகள் யாவும் பெளத்தம் இலங்கைக்கு வர முன்பான காலம். பெளத்தம் வந்த போது பலர் அல்ல மிகப் பெரும்பான்மையானோர் பெளத்தர்களாக மாறிக் கொண்டனர். பின்னர் இவர்கள் கிமு 3ம் நூற்றாண்டில் மீளவும் சைவ நாயன்மார்களால் சைவர்களால் மாற்றப்பட்டனர். இந்த காலத்திலேயே இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கி தேவாரங்கள் திருக்கேதீஸ்வரம் திருக்கோணேஸ்வரம் பற்றியும் பாடப்பட்டது (திருக்கேதீஸ்வரத்தானே என்றும் திருக்கோணமாமலை அமர்ந்தாரே என்றும் முடிவடையும் தேவாரங்களாகும்)
இந்த நாயன்மார்களே தமிழையும் சைவத்தையும் இணைத்தனர். இதனாலேயே சைவத்தமிழ் என்று பேசப்பட்டதும் இதை சாதுரியமாக பெளத்தத்திற்க்கு எதிராக பாவித்துக்கும் கொண்டனர். பெளத்ததிற்கு தமிழில் எழுதப்பட்ட காவியங்கள் போன்று வேறு மொழியில் எழுதப்படவில்லை என்பது ஒன்றே தமிழ் பெளத்ததிற்க்கு சான்றாகும். இன்றும் ஜம்பெரும் காவியங்கள் என்பவைகளாகவே பார்கிறோம்.
தமிழ் பெளத்தத்தின் அடையாளங்களே யாழ்ப்பாணத்தில் உள்ள ஒவ்வொரு சைவக்கோவிலின் முன்னால் உள்ள அரச மரங்களாகும் இன்றும் அந்த அரச மரங்களின் கீழ் புத்தரை வைத்துக்கொள்வதும் தமிழ் தொடர்புகளை மீள வலியுறுத்துவதும் தமிழுக்கு செய்யும் உதவியாகவே அமையும்.
பெளத்த கோவில்களிலும் காளியும் நவக்கிரக, கணேச பூசையும் நடைபெறுவது வழக்கமான ஒன்றாக உள்ள போதும் இலங்கை பெளத்தர்கள் இந்துக் கடவுள்களை மதிப்பளித்து வருவதும் எமது இனங்களிடையேயான அடிப்படையில் உள்ள உறவினையே எடுத்துக் காட்டுகிறது.
தமிழ் சிங்கள புதுவருடப்பிறப்பும் கூட எமது தமிழ் சிங்கள இன உறவுகளின் அடிப்படையை தொட்டு நிற்பதை அவதானிக்கலாம்.
இலங்கையில் ஒவ்வொரு மாதமும் வரும் பெளர்ணமி தினத்தை தமிழ் சிங்கள இந்து பெளத்த தினமாக நடைமுறைப்படுத்தலாம் இது ஒரு முன்மாதிரியாக உருவாக்க முடியும்.
இந்த முன்னெடுப்புக்கள் பல தற்போது இலங்கையில் எடுக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் உள்ள பல இடங்களில் இருந்த பல பெளத்த சைவ உறவுகளின் பெளத்த தமிழ் அடையாள சின்னங்களும் தலங்களும் பிற சமயத்தவர்களால் அழிக்கப்பட்டுள்ளன என்றும் இவை மீளவும் உறுதிப்படுத்தப்படும் முயற்சிகள் பல வடக்கு இலங்கையில் எடுக்கப்படுவதாகவே பெளத்தசங்கத்தினர் கூறுகிறார்கள்.
இலங்கைக்கு சங்கமித்தை மாதகல் வழியாகவே வந்ததும் மாதகல்லில் உள்ள ஒரு வெள்ளரச மரம் சங்கமித்தையாலே நாட்டப்பட்டது என்றும் இன்னொரு தேசம் கட்டுரையில் வாசிக்கலாம்.
பெளத்த சமயத்திற்கு பின்னால் உருவெடுத்த மதங்கள் பெளத்த இந்து மதங்களின் அடிப்படையில் உள்ள பல உள்ளடக்கங்களை கொண்டவையாக இருப்பதும் அல்லது அவற்றை பின்பற்றி தொடராக பின்பற்றி வந்துள்ளவற்றிக்கான பல உதாரணங்களை அந்த சமயங்களிலும் காணலாம் இந்த சமயங்களுக்கும் தத்துவார்த்த அடிப்படையாக இந்தியாவே இருந்துள்ளது.
பைபிளில் கூறப்படும் 6 (என நினைக்கிறேன்) புத்திஜீவிகளின் கிழக்கு நோக்கிய பயணம் யேசுவின் பிறப்பு பற்றி செய்தியுடன் வருபவைகள் பெளத்த துறவிகள் என்றே வட இந்தியாவில் நம்பிக்கையுள்ளது.
தமிழ் பெளத்த வரலாற்று புணருத்தாரணம் இலங்கையில் அமைதி வழிக்கான பாதையாக கொள்ளலாமா?

9.     நந்தா on February 16, 2011 6:21 am Edit This
இந்துக்களுக்கும் தமிழுக்கும் சம்பந்தமில்லை என்று போலிப் பிரச்சாரம் செய்யும் கிறிஸ்தவர்கள் பவுத்தர்களுக்கும் தமிழுக்கும் சம்பந்தம் என்று சொன்னவுடன் நம்பவா போகிறார்கள்?
காஞ்சி புரத்துக் கதைகளை சொல்லி என்ன பயன்?
இந்துக்களும், பவுத்தர்களும் மத அடிப்படையில் பல விஷயங்களில் ஒத்த கருத்துள்ளவர்கள். கிறிஸ்தவர்கள் இடையில் வந்தவர்கள். அவர்களின் கண்டு பிடிப்புக்களை நம்பும் இலங்கைத் தமிழர்கள், புத்தரை “சிங்களவன்” என்றே பார்க்கப் பழகியிருக்கிறார்கள்.
அரச மரம் இந்துக்களுக்கும் புனிதமான மரம் என்பதும் அதன் நிழல் காற்று என்பன பல நோய்களுக்கு நிவாரணி என்பதும் இந்துக்களின் நம்பிக்கை. இந்து புத்தருக்கு அரசமரத்தின் கீழ் ‘ஞானம்’ தோன்றியது பொருத்தமானதே! வன்னியெங்கும் பாதிரிகளின் கோவில்களும், சிலுவைகளும் முளைத்துள்ளன. அதனைப் பற்றி மவுனம் காப்பவர்கள் அரசுமரம், புத்தர் பற்றி கதைக்கத் தேவையில்லை!

10.   தோஸ்து on February 16, 2011 7:56 am Edit This
ஆரம்பத்திலேயே ஒன்றை தெளிவாக சொல்லி விடுகிறேன். கடவுள் என்று ஒன்றில்லை அனைத்தும் இயற்கையானது. எங்கள் மனதை/ஆத்மாவை ஒருமுகப்படுத்துவதன் மூலம் இயற்கையை உணருவதன் மூலமும். இழி குணங்களை தவிர்த்து திருப்தியான வாழ்வை வாழலாம். என்ற சாராப்படியான போதனையை தந்த நாத்திக சிந்தனையுள்ள குருவையே கடவுளாக்கி புத்தரின் போதனைக்கெதிரான சிங்கள பெளத்தமத கட்டமைப்பை ஏற்கமுடியாது.
தமிழர் புத்தசமயத்தையும் சமணசமயத்தையும் ஏற்று வாழ்ந்த காலங்களில் தமிழ் வளர்ந்தது. நாமின்றும் பெருமையுடன் சொல்லும் காப்பியங்கள் படைக்கப்பட்டன. தமிழர் இந்துதமத்தின் ஆக்கிரமிப்பிற்குள் அகப்பட்ட பின் நாயன்மார்களாலும் பிராணமணர்களாலும். தமிழ்மொழியின் தரம்குன்றியது சமூகத்தில் மூடப்பழக்க வழக்கங்களும் தீண்டாமை கொடுமைகளும் ஆழ விதைக்கப்பட்டது. மன்னர்கள் பெரும் கோவில்கள் கட்டி பிராமணர்களுக்கு தானம் யாகம் என்ற பெயர்களில் செல்வங்களை ஊதாரிதனமாக கொட்டி கொடுத்து தாமும் அழிந்து தமிழையும் தமிழர்களையும் நலிவுறுச் செய்தததுதான் கண்டமிச்சம்.
சித்தர்களை பைத்தியங்கள் திருடர்களென்று நாத்திகள் என்று பட்டம் கட்டி மன்னர்களின் உதவி கொண்டு ஊரைவிட்டு துரத்தினார்கள். காடுகளில் ஓளித்து வாழ நிர்பந்திக்கப்பட்டனர். சித்தர்கள் இயற்கையில் கிடைத்த மூலிகைகள் பச்சிலைகளை கொண்டு தயாரித்த இயற்கை மருந்துகள் மக்களிடையே புழகத்திற்கு வருவதை திட்டமிட்டு தவிர்த்த நாயன்மார்கள் பிராணமணர்கள். மந்திரம் மாயம் யாகம் அர்ச்சனை கிரகதோசம் போக்கல் என்று தமது பிழைப்பை உறுதிப்படுத்தினர். அதன் நீட்சியே கள்ளச்சாமிகளும் ஆலயத்தை தமது தனிப்பட்ட வருமானதிற்கான வழியாக பாவிக்கும் முறைமைகளும்.
மீண்டும் தமிழ்மொழியும் தமிழர்களும் மீட்சி பெற புத்த போதனைகளும் தன்னலமற்ற துறவிகளும் தேவை. ஐரோப்பாவில் குறித்த தொகை கத்தோலிக்க துறவிகள் விஞ்ஞான கண்டுபிடிப்புகளிற்கும் சமூக சீர்திருத்தங்களிற்கும் வழிகோலியது போல் புத்ததுறவிகளும் சித்தர்களும் ஈழத்தமிழருக்கு அவசர அவசிய தேவை.
புத்த துறவி வேடத்தில் வரும் ஈழத்தமிழின எதிரிகளின் உளவாளிகளல்ல.

11.   thurai on February 16, 2011 8:42 am Edit This
//நீங்கள் மேலே சொன்ன கேள்விகளைக் கேட்கவேண்டிய இடம் வேறு.//சாந்தன்
எனக்கும் விருப்பம்தான் கேட்கப்போகுமிடமெல்லாம், தமிழரும் வாழ்கின்றார்கள், சிங்கள அரசியல் வாதிகழுடன் தமிழ் அரசியல் வாதிகழும் ஒன்றாகவே உள்ளனரே? இது மட்டுமா தென் இந்தியா முதல் வட இந்தியா வரை, உலகமுழுவதும், இலங்கையில், சிங்களவர்க்ழுடனும் ஒற்றுமையாக வணிகம் புரியும், தமிழரின் வீரகாவியம் பாடும் தமிழீழ விடுதலைப் புலிகளிலும் பார்க்க தமிழரின் உருமை பற்ரிக் கதைக்க யாருமேயில்லை.
முதலில் பயிரையே வேயும் வேலிகளை கண்டுபிடியுங்கள். அத்ன் பின் சிங்கள அரசினைக் கேட்போம்.-துரை

12.   thurai on February 16, 2011 9:10 am Edit This
//தமிழர் இந்துதமத்தின் ஆக்கிரமிப்பிற்குள் அகப்பட்ட பின் நாயன்மார்களாலும் பிராணமணர்களாலும். தமிழ்மொழியின் தரம்குன்றியது சமூகத்தில் மூடப்பழக்க வழக்கங்களும் தீண்டாமை கொடுமைகளும் ஆழ விதைக்கப்பட்டது//
//மீண்டும் தமிழ்மொழியும் தமிழர்களும் மீட்சி பெற புத்த போதனைகளும் தன்னலமற்ற துறவிகளும் தேவை// தோஸ்து
தமிழர்கள் சிந்திக்க வேண்டிய முக்கியமான விடயம்
தோஸ்து விற்கு பாராட்டுக்கள்.-துரை

13.   rohan on February 16, 2011 12:19 pm Edit This
//இந்துக்களும், பவுத்தர்களும் மத அடிப்படையில் பல விஷயங்களில் ஒத்த கருத்துள்ளவர்கள். //
Such as?
14.   நந்தா on February 16, 2011 4:11 pm Edit This
// ஐரோப்பாவில் குறித்த தொகை கத்தோலிக்க துறவிகள் விஞ்ஞான கண்டுபிடிப்புகளிற்கும் சமூக சீர்திருத்தங்களிற்கும் வழிகோலியது//
அப்படியா? அவங்க யார்?
15.   தோஸ்து on February 16, 2011 9:30 pm Edit This
// ஐரோப்பாவில் குறித்த தொகை கத்தோலிக்க துறவிகள் விஞ்ஞான கண்டுபிடிப்புகளிற்கும் சமூக சீர்திருத்தங்களிற்கும் வழிகோலியது//
அப்படியா? அவங்க யார்?// nantha
கத்தோலிக்க மதத்திலிருந்த ஊழல் அடிமைத்தனம் மதத்தின் பெயரிலான சீர் கேடுகளை எதிர்த்து புரட்சி செய்ததே கத்தோலிக்க துறவிகள்.இது சமூக சீர்திருத்தங்களிற்கும் வழிகோலியது.
விஞ்ஞான கண்டுபிடிப்புகள்-
1)Theodoric, a Bishop, discovered anesthesia in the 13th century.
2)Steensen, a Bishop, was the father of geology.
3)Scheiner, a priest, invented the pantograph, and made a telescope that permitted the first systematic investigation of sun spots.
4)Picard, a priest, was the first to measure accurately a degree of the meridian.
5)Mendel, a monk, first established the laws of heredity, which gave the final blow to the theory of natural selection.
6)Kircher, a priest, made the first definite statement of the germ theory of disease
7)Monsignor Georges Henri Joseph Édouard Lemaître ( lemaitre.ogg (help·info) 17 July 1894 – 20 June 1966) was a Belgian Roman Catholic priest, honorary prelate, professor of physics and astronomer at the Catholic University of Louvain. He sometimes used the title Abbé or Monseigneur.
Lemaître proposed what became known as the Big Bang theory of the origin of the Universe, which he called his ‘hypothesis of the primeval atom’

16.   நந்தா on February 16, 2011 9:54 pm Edit This
ஆனால் இந்தப் பாதிரிகளால் யாருக்குப் பிரயோசனம்? இந்தியாவிலும் இலங்கயிலும் கொள்ளையிட்ட கத்தோலிக்கர்களுக்கெதிராக பாதிரிகள் ஒன்றும் பண்ணியதாகத் தெரியவில்லையே! இப்பொழுது ஒரு நாசி பட்டாளக்காரர்தானே கத்தோலிக்கரின் தலைவன்!

17.   சாந்தன் on February 17, 2011 1:39 am Edit This
//…எனக்கும் விருப்பம்தான் கேட்கப்போகுமிடமெல்லாம், தமிழரும் வாழ்கின்றார்கள், சிங்கள அரசியல் வாதிகழுடன் தமிழ் அரசியல் வாதிகழும் ஒன்றாகவே உள்ளனரே?….//
உங்களுக்கு விருப்பம் என்றால் கேட்கவேண்டியதுதானே? அதற்கு யார் பக்கத்தில் இருந்தாலென்ன? ஏன் இங்கு அரசியல்வாதிகளை இழுக்கிறீர்கள். நான் கேட்ட கேள்விகளை திரும்பவும் படியுங்கள். அவற்றை கேட்க விருப்பம் என்றால் அங்கு யார் இருந்தாலும் கேளுங்கல். உங்களின் கேள்விக்கு நியாயத்தன்மை இருக்கிறதென்றால் கேட்கவேண்டிய இடத்தில் கேட்கவேண்டுமே அன்றி தேசம் நெற்ரில் வந்து கேட்கக்கூடாது. கேள்வி கேட்கவேண்டும் எனத்தெரிகிறது அதில் விருப்பமும் இருக்கிறது ஆனால் பக்கத்தில் இருப்பவன் யார் எனப்பார்த்து கேட்காமல்விட்டு இங்குவந்து கீபோட்டை தட்டுவானேன்?

18.   thurai on February 17, 2011 9:19 am Edit This
//கேள்வி கேட்கவேண்டும் எனத்தெரிகிறது அதில் விருப்பமும் இருக்கிறது ஆனால் பக்கத்தில் இருப்பவன் யார் எனப்பார்த்து கேட்காமல்விட்டு இங்குவந்து கீபோட்டை தட்டுவானேன்?//சாந்தன்
இங்கு கீபோட்டை தட்டுவோர் எல்லாம் சந்தர்ப்பம் கிடைத்தால் கேள்வி கேட்பார்கள். ஆனால் சந்தர்ப்பம் சூழ்நிலை இங்கு எழுதவைக்கின்றது. சர்வதேச பயங்கரவாதமே தமிழர்களின் விடுதலைப் போரின் பின்னணி. இது உண்மையென இராசப்க்ச காட்டிவிட்டார். புலம்பெயர் நாடுகழும் இதனை வெகு விரைவில் வெளியாக்கும்.-துரை

19.   நந்தா on February 17, 2011 1:23 pm Edit This
//தமிழர் இந்துதமத்தின் ஆக்கிரமிப்பிற்குள் அகப்பட்ட பின் நாயன்மார்களாலும் பிராமணர்களாலும். தமிழ்மொழியின் தரம்குன்றியது சமூகத்தில் மூடப்பழக்க வழக்கங்களும் தீண்டாமை கொடுமைகளும் ஆழ விதைக்கப்பட்டது.//
அதென்ன இந்து மத ஆக்கிரமிப்பு? அதற்கு முதல் தமிழர்கள் முஸ்லிம்களாக இருந்தார்களா?
500 வருட கிறிஸ்த ஆட்சியில் என்னநடந்தது? தமிழ் மூலம் தொல்லை கொடுக்கும் ஒரு அரசியல்தான் இன்று முன்னெடுக்கப்படுகிறது. பிரபாகரனை முருகக் கடவுள் என்பது வரை முட்டாள்த்தனம் வளர்ந்துள்ளது. இது சேர, சோழ, பாண்டியர் காலத்திலும் நடக்காத முட்டாள்த்தனம்.
ரோகன்:
இந்துக்களுக்கும் பவுத்தர்களுக்கும் ஒரேநாளில் ஒரே சுப முகூர்த்தத்தில் “புது வருஷம்” பிறப்பது தெரியவில்லை போலிருக்கிறது.

20.   சாந்தன் on February 17, 2011 4:42 pm Edit This
ஸ்ரீலங்கா அரசை அதன் இனவாதக்கொள்கைகள் (பெளத்தம் அரச மதம்…..) பற்றிக் கேள்விகள் கேட்க உங்கள் ‘சந்தர்ப்பத்தை’ சுற்றி இருந்த தமிழர்கள் கெடுத்தார்கள் எனக்கூறினீர்கள். இப்போ என்னடாவென்றால் அங்கே சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்பஹால் இங்கே கீபோட் தட்டுகிறீர்கள் என்கிறீர்கள். எங்கே கேள்விகேட்க வேண்டுமோ அங்கே கேட்கவேண்டும் என்பது கூட அறியாதவரா நீங்கள்.
பரவாயில்லை ஸ்ரீலங்கா அரசைக் கேள்விகேட்க உங்கள் நாட்டில் இருக்கும் ஸ்ரீலங்கா தூதரை அணுகலாமே? இல்லையென்றால் நீங்கள் இமெல்டாவை அணுகலாமே? இல்லை ஆமியை அணுகலாமே? உங்கள் கேள்விகள் அங்கே எடுபடாது என்கின்ற உண்மை உங்களுக்குத் தெரியாததல்ல துரை.

21.   rohan on February 17, 2011 8:42 pm Edit This
//இந்துக்களும், பவுத்தர்களும் மத அடிப்படையில் பல விஷயங்களில் ஒத்த கருத்துள்ளவர்கள். //
//இந்துக்களுக்கும் பவுத்தர்களுக்கும் ஒரேநாளில் ஒரே சுப முகூர்த்தத்தில் “புது வருஷம்” பிறப்பது தெரியவில்லை போலிருக்கிறது.//
பெளத்த ‘மதம்’ இந்து ‘மதம்’ என்பதே முழுத் தவறாகும் என்பது எனது கருத்து.
பழக்க வழக்கங்களில் வேறுபட்டவர்களைக் கொண்டு கூட்டபட்ட ஒரு திரள் மக்கள் தான் இந்துக்கள் எனப்படுகிறார்கள். தென்னாட்டு முருகன் போல வட இந்தியாவில் முருகன் என்று தெய்வ வடிவம் இருக்கிறதா? ததேகூ போல ஒன்றாக இருக்கிறோமே ஒழிய, இந்துக்களில் இருக்கிற பிளவுகள் எத்தனையோ.
பெளத்த மதம் என்பது மதம் ஒன்று இருக்கக் கூடாது என்று போதிக்க வந்த ஒரு சீர்திருத்தவாதியைக் கடவுள் ஆக்கியவர்களின் தவறு. ஈவெரா பெரியாரைக் கடவுள் ஆக்கியிருந்தால் அடுத்துடுத்த தலைமுறையில் ஒரு பெரியார் மதம் வந்திருக்கக்கூடும்.
RITUALS அல்ல SPIRITUAL என்று வந்த பெளத்தத்தின் ‘இந்து’ வழி வந்த புத்தரைத் தொழுபவர்கள் ‘இந்துக்களின்’பண்டிகைகளையும் சில மூடப் பழக்க வழக்கங்களயும் தொடர்வது ஒன்றும் புதிது அல்ல. தாய், திபெத்திய, சீன, ஜப்பானிய எல்லாப் பெளத்தர்களுக்கும் (தேரவாத, மகாயான, என) புத்தாண்டும் சுப காலமும் சித்திரையில் தான் வருகின்றனவா?
//இந்துக்களும், பவுத்தர்களும் மத அடிப்படையில் பல விஷயங்களில் ஒத்த கருத்துள்ளவர்கள். //
என்பதில் ‘மத அடைப்படை’, ‘பல விஷயங்கள்’ என்பனவே key words. இப்போது என்ற கேள்விக்கு முடிந்தால் பதில் சொல்லலாம்.
அது சரி, ‘இந்துக்கள்’ மாமிசம் புசிக்கிறார்களே, அது இந்த சமயத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயமா?

22.   நந்தா on February 18, 2011 12:41 am Edit This
பாதிரிகளின் கண்டு பிடிப்புத்தான் “இந்து மதம், பவுத்தமதம் என்பன மதஙள் இல்லை” என்பது. இதனை வத்திக்கானிலுள்ள நாசி போப் சொல்லிப் பல வருடங்கள் ஆகிறது. அதனை ரோகன் கிளிப்பிள்ளை போல ஒப்புவிக்கிறார். யாருக்கு வேண்டும் கிறிஸ்தவக் கோட்டான் கருத்துக்கள்?
இந்துக்கள் மாமிசம் புசிக்கக் கூடாது என்று எங்கும் சொல்லப்படவில்லை. ஆயினும் புத்தரின் போதனைகளையடுத்து இந்துக்களும் மாமிச உணவைத் தவிர்க்கின்றனர். புத்தர் இந்து மதத்தில் தோன்றிய சீர்திருத்தவாதி. புத்தரின் போதனைகளை இந்துக்கள் மாத்திரமே கடைப்பிடிகின்றனர். கிறிஸ்தவர்கள் அல்ல!
இந்து மதத்தில் காணப்படும் ‘சுதந்திரம்” இந்துக்களையும் பவுத்தர்களையும் கட்டாயப்படுத்துவது கிடையாது.
புத்தர் மதம் இருக்கக் கூடாது என்று எங்கும் போதிக்கவில்லை. இதுவே கிறிஸ்தவர்களின் ஜகஜாலப் புரட்டுக்கு ஒரு உதாரணம்.
இந்துக்கள் சூரிய சங்கிராந்தியை கொண்டாடுவார்கள். அதனால்த்தான் இலங்கயில் புது வருஷம் இந்துக்களுக்கும் பவுத்தர்களுக்கும் ஒரே தினத்தில் அதாவது மேஷ சங்கிராந்தியில் வருகிறது.
புத்தர் சங்கரர் போல ,நாராயண குரு போல சீர்திருத்தங்களை உபதேசித்த ஒரு இந்து. அவர் இந்துத் தெய்வங்களை வணங்காதே என்று யாருக்கும் போதிக்கவில்லை! அதனால்த்தான் பவுத்தர்கள் இன்றும் இந்துக் கடவுளர்களை மதித்துத் தொழுகிறார்கள்.


No comments:

Post a Comment