Friday, 16 May 2014

மரணங்கள் அதிகரிக்கிறது! முல்லையில் 1000 பொது மக்களுக்கு மேல் உயிரிழப்பு!! வன்னி மக்கள் மரணத்துள் வாழ்வு!!! : த சோதிலிங்கம்

February 16th, 2009
300 000 வன்னி மக்களுக்கும் மரணத்துள் வாழ்வு. மரணங்களின் எண்ணிக்கை ரொக்கற் வேகத்தில் அதிகரிக்கிறது. முல்லையில் 1000 பொது மக்களுக்கு மேல் உயிரிழப்பு - பெப்ரவரி 10 வரையான இவ்வாண்டின் கடந்த 40 நாட்களில் வன்னியில் கொல்லப்பட்ட பொது மக்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. கடந்த 40 நாட்களில் தினமும் 25க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இலங்கையின் கடந்த 30 ஆண்டு கால உள்நாட்டு யுத்தத்தில் எப்போதுமே இவ்வளவு தொகையான பொதுமக்கள் ஒரு குறுகிய காலத்தில் கொல்லப்பட்டு இருக்கவில்லை. புலிகளிடமுள்ள கடைசிச் சில கிராமங்களுக்காக நடைபெறும் இந்த வன்னி யுத்தத்தில் 5000 முதல் 10000 தமிழ் மக்கள் கொல்லப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.

மிக மோசமான வார்தைகளுக்குள் அடக்க முடியாத மனித அவலம் ஒன்று முல்லைத்தீவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சர்வதேச ஊடகவியலாளர்களோ சர்வதேச மனிதாபிமான அமைப்புகளையோ இலங்கை அரசு அனுமதிக்காத நிலையில் வன்னி அவலம் சர்வதேசத்தின் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டு உள்ளது. உண்மைநிலையை அறிந்துகொண்ட சர்வதேச அரசுகள் குறிப்பாக இணைத் தலைமை நாடுகள் இலங்கை அரசுக்கு அழுத்தங்களை வழங்காமல் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்று கோரியுள்ளன.

‘பயங்கரவாதிகளான புலிகளை’ அழிக்கிறோம் என்ற போர்வையில் இலங்கை அரசு ஒட்டுமொத்த வன்னித் தமிழ் மக்கள் மீதும் தாக்குதலை நடாத்துகிறது. உணவு மற்றும் மருத்துவ சேவைகளை அம்மக்களுக்கு வழங்காது வன்னி மக்களுக்கு கூட்டுத் தண்டனை வழங்கும் இலங்கை அரசு, தான் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்திய பகுதிகளையும் மருத்துவமனையையுமே கொலைக்களமாக்கி உள்ளது. அங்குள்ள மருத்துவர்களையும் மருத்துவப் பணியாளர்களையும் உடனடியாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வெளியேறுமாறு இலங்கை அரசு பெப் 11 அன்று உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் 300 000 வரையான மக்கள் யுத்தமுனையில் மருத்துவ வசதியின்றி உயிருக்குப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர்.
உலகத்தின் மிகக் கட்டுக்கோப்பான செல்வந்த விடுதலை அமைப்பாக கருதப்பட்டு வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தமது கட்டப்பாட்டில் இருந்து அனைத்து பிரதேசங்களில் இருந்தும் மக்களுடன் பின்வாங்கி முல்லைத்தீவின் விரல் விட்டு எண்ணக் கூடிய சில கீராமங்களில் மக்களை அரணாக வைத்து தாக்குவதாக அனைத்து முக்கிய சர்வதேச மனிதாபிமான அமைப்புகளும் குற்றம்சாட்டுகின்றன.

யுத்தப் பகுதியில் இருந்து வெளியேற முயலும் மக்கள் மீது புலிகளும் தாக்குதல்கள் மேற்கொண்டதாக வன்னியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் புலிகளின் அரசியல் பொறுப்பாளர்களில் ஒருவரான இளம்பருதி பெப் 11ல் அதனை மறுத்துள்ளார். மக்கள் வெளியேறிச் செல்லும் முன்னரங்க நிலையத்தில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் தமிழ் பொது மக்களும் இராணுவதினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இத்தாக்குதலுக்கும் தமக்கும் சம்பந்தம் இல்லை என்றும் புலிகள் மறுப்புத் தெரிவித்து உள்ளனர். மேலும் புலிகளால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த வந்த பல நூற்றுக் கணக்கானவர்களும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மூன்று இளைஞர்கள் தீக்குளிக்குமளவிற்கு தமிழக மக்கள் கொந்தளித்த போதும் தமிழக மாநில அரசும் குறிப்பாக இந்திய மத்திய அரசும் இலங்கை அரசின் யுத்த நடவடிக்கைக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளன. புலிகளுக்கு இந்தியா எடுக்கும் கடைசிப் பாடமாக இது கருதப்படுகிறது.

விடுதலைப் புலிகளின் படுதோல்வியை அடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஒரு பிளவு ஏற்படலாம் எனச் செய்திகள் கசிகின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்திய இலங்கை அரசு சார்பான அணி ஒன்று உருவாகலாம் என எதிர்வு கூறப்படுகிறது. விடுதலைப் புலிகளிடமுள்ள கடைசியான முல்லைக் கிராமங்கள் பறிபோகும் போது இந்தப் பிளவு எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களின் உயிரிழப்புகள் ஆயிரக் கணக்கில் செல்லும் போது அந்த மனித அவலத்தில் இருந்து மீண்டும் புலிகள் தாங்கள் இழந்த அரசியல் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளும் கடைசி முயற்சியாகவே இந்த முல்லைக் கிராமங்களில் நடைபெறும் யுத்தம் கருதப்படுகிறது. இங்கு சிக்குண்ட மக்கள் அனைவரையும் புலிகள் பயங்கரவாதிகள் என்ற தோரணையில் இலங்கை அரசு தாக்குதலை நடத்துகிறது. அங்கு கொல்லப்படும் பச்சிளம் குழந்தையையும் புலிக்குட்டி என்று சொல்வதற்கு இலங்கை அரசு எவ்வித தயக்கமும் காட்டவில்லை.

தமிழ் மக்களின் குருதியில் முல்லை மண் சிவக்கிறது என்றால் அது மிகையல்ல. அவலம் முடிவின்றித் தொடர்கிறது. சொல்லி அழ நாதியில்லை! கேட்பதற்கும் யாரும் இல்லை!! வேலிகளே பயிரை மேய்கிறது.
லண்டன் குரல் : இதழ் 27
————————
இலங்கை அரசின் கண்மூடித்தனமான தாக்குதலும் புலிகளின் உதாசீனமும் வன்னி மக்களை சொல்லொனாத் துயரத்திற்குள் தள்ளியுள்ளது. பாதுகாப்பாக இருக்க இடமும் இல்லாமல் தப்பிச் செல்ல வழியுமில்லாமல் அவர்கள் படுகின்ற அவஸ்தை கொடூரமானது. சிங்கத்திடமும் புலியிடமும் சிக்கித் தவிக்கும் இந்த வன்னி மக்கள் கூட்டம் இவ்வாறான ஒரு கொடுமையை கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். ஒருபுறம் மரணங்கள் மறுபக்கம் பிரசவங்களும் நிகழ்கின்றன.
வடக்கு கிழக்கின் சகல பிரதேசங்களிலும் பின்வாங்கிய போதும் புலிகள் மக்கள் செறிந்துள்ள பகுதியை யுத்த மையமாக்கி உள்ளனர். இலங்கை அரசோ எத்தனை தமிழர்கள் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை வெற்றிக் கொடி ஏற்றினால் போதும் என்றளவில் யுத்தத்தை முடுக்கிவிட்டுள்ளது.

பெப் 9 இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மக்கள் தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியை விட்டு வெளியேறுவதைத் தடுக்கவே புலிகளால் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த தாக்கதல் இராணுவ இலக்கு மீதான தாக்குதல் என்பதிலும் பார்க்க மக்கள் வெளியேறுவதைத் தடுப்பதையே நோக்கமாகக் கொண்டு உள்ளது. இது மனித உரிமைகளை மீறும் செயல். புலிகள் மேலும் மேலும் தவறிழைக்கின்றனர். அதுமட்டுமல்ல இப்படியான தவறுகள் தாக்குதல்கள் நடைபெற்றால் அவற்றை நியாயப்படுத்தும்; அப்படியான நியாயங்களை பரப்புரை செய்யும் முறையும் கண்டிக்கப்பட வேண்டியது.

முற்றிலும் இலங்கை அரசாங்கத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப புலிகளும் புலிகளின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இலங்கை அரசும் செயற்படுவதையே காணக் கூடியதாக இருக்கிறது. அவ்வாறே புலிகளை ஆதரிப்பவர்களும் அரசாங்கத்தை ஆதரிப்பவர்களதும் செயற்பாடுகள் உள்ளது. புலிகளை ஆதரிப்பவர்கள் புலிகள் மீதும் அரசாங்கத்தை ஆதரிப்பவர்கள் அரசாங்கததின் மீதும் அழுத்தங்கள் கொடுப்பதில்லை.

மக்கள் தாம் சுயமாக வெளியேற முடியுமாயின் எப்பவோ புலிகளின் பிடியை மீறிக் கொண்டு வெளியேறியிருப்பார்கள். அப்படி அவர்கள் வெளியேற முடியாமைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. மக்களுக்கு இலங்கை அரசு மீதும் அரச படைகள் மீதுமுள்ள அவநம்பிக்கை மிக முக்கியமானது. அங்குள்ள மக்களில் பெம்பாலானவர்கள் விரும்பியோ விரும்பாமலோ புலிகளுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புபட்டவர்கள். இன்னுமொரு பகுதியினரது குடும்ப உறுப்பினர்கள் புலிகளின் உறுப்பினர்களாக உள்ளனர் அல்லது அவர்கள் மாவீரர் குடும்பத்தினராக உள்ளனர் அல்லது விடுதலைப்புலிகள் அமைப்பின் மிகநெருங்கிய அல்லது முக்கிய உறுப்பினர்கள் அல்லது தொடர்புடையவர்கள் இப்படியான புலிகளுடன் தொடர்புடையவர்களுக்கு யாழ் மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் கடந்த காலங்களில் அரசின் ஆதரவுடன் காணாமல் போகும் செயல்கள் நடந்தேறியுள்ளன இவற்றின் காரணமாக மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வர அஞ்சுகின்றனர். அந்த அச்சம் மிகவும் நியாயமானது. அவர்களது அச்சத்தை உறுதிப்படுத்தும் வகையிலேயே அரச தரப்பில் பாதுகாப்பு செயலர் பல கருத்துக்களை தெரிவித்து உள்ளார். மேலும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வரும் மக்கள் காலவரையறையின்றி தடுத்து வைக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பு முகாம்களில் என்ன நடக்கும் என்பதைத் தமிழ் மக்களுக்கு விரிவாககச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதனை ரைம்ஸ் பத்திரிகையாளர் தனது கட்டுரையில் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டு உள்ளார்.

வன்னியில் உள்ள அத்தனை இளைஞர்களும் புலிகளின் பயிற்ச்சி பெற்றவர்கள் அல்ல. ஆயினும் அவர்கள் அத்தனை பேரையும் புலிகளாக அரசு நோக்கும் தன்மையை அவதானிக்க முடிகிறது. தப்பி வந்த இளைஞர்களை அகதி முகாம்களிலிருந்து தனித்து அழைத்துச் செல்லப்படுவதாகவும் அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது இதுவரையில் யாருக்கும் தெரியாத நிலை உள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகிறது இதில் சில மிககவும் பயமூட்டும் செய்திகளாளாகும். இது தமிழர் வரலாற்றில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட ரெலோ(TELO) - ஈபிஆர்எல்எப்(EPRLF) அழிப்பு அல்லது வெருகலில் நடைபெற்ற சம்பவத்திற்க்கு ஒப்பானதொரு செயலாகும். இவை மக்களின் மனதிலிருந்து அகற்ற முடியாத மனித நேயமற்ற செயலாகும்.

வன்னியில் புலிகளின் பிடியில் இருக்கும் தமிழ் மக்களில் பெருந் தொகையானோர் புலிகளை சுயவிருப்பில் ஏற்றுக்கொண்டவர்கள் அல்ல. புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருப்பதால் அவர்களின் சட்ட திட்டங்களுக்கு பணிந்து செயற்பபடுவதாலும் அவர்கள் புலிகளின் ஆயுததாரிகள் என்ற தப்புக் கணக்கில் அரசும் இராணுவமும் செயற்படுவது மிகத் தவறாகும்.

புலிகள் கடந்த காலங்களின் செய்த தவறுகளும், மனித உரிமை மீறல்களும், அரசியல் ஸ்திரமற்ற தன்மையும், அவர்கள் வழிபின்பற்றி வந்த ரிஎன்ஏ(TNA) யினரின் பம்மாத்து அரசியலும் இன்றுள்ள இந்த இக்கட்டான நிலைக்கு தமிழ் பேசும் மக்களை கொண்டுவந்து விட்டுள்ளது.

புலிகள் இறுதியாக யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிய போது தமது பாதுகாப்பிற்காக தம்முடன் இழுத்து வந்த மக்களை இன்று இன்னுமொரு தடவை தமது பாதுகாப்பிற்காக வன்னியில் கேடயமாக்கி உள்ளனர். ஒவ்வொரு தடவையும் தமது பாதுகாப்பிற்கு குந்தகமான சூழ்நிலைகள் வரும் போதெல்லாம் புலிகளின் செயற்ப்பாடானது தமிழ் மக்களை போராட்டத்திலிருந்து அன்னியப்படுத்தியும் மக்களுக்கு இக்கட்டான சூழ்நிலைகளைத் தோற்றுவித்துமே வந்துள்ளனர். இவ்வாறான நிலைகளிலும் புலத்தில் உள்ள புலிகள் ஆதரவு அமைப்புக்கள் புலிகளின் மீது எந்தவித அழுத்தங்களையும் கொடுப்பதில்லை. இந்த விடயத்தில் ரிஎன்ஏ(TNA) யும் தவறிழைத்துள்ளது.

இலங்கை அரசு இந்த இக்கட்டான காலகட்டத்தில் சர்வதேச மனிதாபிமான அமைப்புகளை யுத்த பிரதேசத்திலிருந்து வெளியேற்றியது மிக மோசமான நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கை இலங்கை அரசு எப்படியான மனித உரிமை நடவடிக்கைகளை செய்யப் போகின்றது என்பதை முன்கூட்டியே அறிவிக்கின்றது. அப்பாவி மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள இந்த யுத்தம் தொடரும் வரை மக்களுடைய அவலங்களும் தொடரும்.

அரசும் அரசியற் கட்சிகளும் குறிப்பாக கொழும்புத் தமிழ் அரசியற் கட்சிகளும் அரசியல் இயக்கங்களும் போராட்டவாதிகளும் மக்களுக்காகவே என்று சொல்லிக் கொள்கின்ற போதிலும் வன்னி மக்களைப் பொறுத்தவரை அவர்கள் வெறும் பகடைக்காய்களாகவே உள்ளனர். மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அரசியல் கட்சிகளின் கொள்கைகளும் நடைமுறைகளும் மக்களுக்காவே இருக்க வேண்டும். இந்த மக்கள் அவர்களின் இனம், மொழி போன்றவற்றிக்கு அப்பால் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த வன்னி மக்களை பாதுகாக்காமல், இந்த மக்களின் உயிர் அழிவிற்கு மேல் இனிமேல் என்றுமே மக்ளுக்கான அரசியல் செய்ய முடியாது. இந்த அரசியல்வாதிகள் தம்மை மக்கள் பிரதிநிதிகள் என்று கூறுவது அபத்தமாகி விடும். மக்களை பாதுகாக்க முடியாத இந்த கட்சிகள் மக்களின் பெயரால் இனிமேல் தமது அரசியல் நடவடிக்கைகளை செய்ய முடியாது போகும் இந்த அரசியற் கட்சிகள் அர்த்தமற்றதாகி விடும்.

பெரும்பான்மைச் சிங்கள மக்களுக்கு இனவாதத்தை ஊட்டி அடுத்த தேர்தலை சந்திக்கத் தயாராகும் ஆளும் கட்சியும் வன்னியில் உள்ள மக்களை புலிகளாகக் காட்டி அவர்களது அவலத்தின் மீது வெற்றியை நிலைநாட்டத் துடிக்கிறது. அந்த வெற்றியின் மீது இந்த தேர்தலை சந்திக்க தயாராகுகின்றது மகிந்த அரசு. இதற்கான ஒத்திகையாக மாகாணங்களுக்கான தேர்தல்களை அரசு பரீட்சார்த்தமாக (14 பெப்) சந்தித்துள்ளதது.

தமிழ் தேசியப் போராட்டம் ஆரம்பித்த காலம் தொடக்கம் தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்ச்சி அளித்து ஆயுதபாணிகளாக்கி தனது பிராந்திய வல்லாதிக்கத்தை பயிற்ச்சி செய்த அதே இந்தியா இன்று வன்னி யுத்த களத்திலும் இலைமறை காயாக நிற்கின்றது. தமிழக மக்கள் கொதித்தெழுந்த போதும் அதனைக் கண்டுகொள்வதாக இல்லை. வன்னி யுத்த களத்தில் இருக்கும் தமிழ் மக்களின் உயிரில் அக்கறையில்லாமல் உள்ளது. தமிழ் பிரதேசங்களில் நடைபெறும் தமிழ் மக்கள் மீதான படுகொலைகளுக்கு இந்தியாவுக்கும் பொறுப்புள்ளது.

வன்னி மக்கள் மீதான இராணுவ தாக்கதல்களுக்கு முற்படும் அரசும், அரச ஆதரவு தமிழ் கட்சிகள், இயக்கங்கள் மற்றும் அமைப்புக்களும் - வன்னி மக்களை தமது மிக குறுகிய பிரதேசத்தில் அடக்கி வைத்திருக்கும் புலிகளும், புலிகள் ஆதரவு இயக்கங்களும், ரிஎன்ஏ(TNA) யும் வன்னி மக்கள் மீது நடாத்தப்படும் படுகொலைகளை முடிவுக்கு கொண்டு வந்து அவர்கள் பாதுகாப்பாக சுயகௌரவத்துடன் வாழ அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
உங்கள் கருத்து

This entry was posted on Monday, February 16th, 2009 at 8:36 am and is filed under
 சோதிலிங்கம் ரி, கட்டுரைகள்/ஆய்வுகள், லண்டன் குரல். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site. Edit this entry. 

13 Comments so far


1.     பார்த்திபன் on February 16, 2009 4:51 pm Edit This
சோதிலிங்கம் அவர்களே முன்பு யாழ் மாவட்டத்தில் யுத்தம் உச்சக் கட்டத்தை அடைந்த போது மக்கள் யாழ் மாவட்டத்தை விட்டு வெளியேற முயற்சித்தார்கள். அப்போது புலிகள் தமது பாதுகாப்பிற்காக மக்களை வெளியேற விடாது தடுத்தார்கள். கடைசியில் தமது போராளிக் குடும்பத்தினரோடு சொல்லாமல் கொள்ளாமல் திடீரென புலிகள் வெளியேறி வன்னி வந்து விட்டார்கள். புலிகளால் தடுக்கப்பட்ட மக்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். சிலர் வன்னிக்கு இடம் பெயர மற்றவர்கள் தொடர்ந்து யாழிலேயே இருந்தார்கள். புலிகள் என்றுமே மக்களைப் பற்றிக் கவலைப்பட்டதில்லை. தம் உயிர்களைப் பற்றி மட்டுமே கவலைப்படுவார்கள் என்பது அன்றே யாழ் மக்களுக்கு புரிந்து விட்டது. இன்று வன்னியிலும் இதே நிலை தான் தொடர்கின்றது. ஆனால் புலிகளுக்கு அன்று போல் மக்களை அம்போ என விட்டுவிட்டு ஓடத்தான் இன்று வழியில்லாது சுற்றிவர இராணுவம் வளைத்துவிட்டது. அதனால்த் தான் மக்களை தொடர்ந்தும் தமது பாதுகாப்புக் கேடயமாக பாவித்துக் கொண்டிருக்கின்றார்கள். மரணம் தான் இறுதி என்று தெரிந்தும் மக்களையாவது காப்பாற்றுவோம் என்ற நல்லெண்ணம் ஒருபோதும் புலிகளுக்கு வரப்போவதில்லை. இதனால்த் தான் மக்கள் அழிவுகளும் தொடர்கின்றது என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். புலிகள் மனிதவெடிகுண்டுத் தாக்குதல் மற்றும் வெளியேறிய மக்களை சுட்டது போன்றவற்றை (கண்ணால் கண்ட சாட்சிகள் இருக்கும் போதே) தாம் செய்யவில்லையென மறுப்பதாக எழுதியுள்ளீர்கள். தெரியாமல் தான் கேட்கின்றேன் புலிகள் எப்போதாவது தாம் செய்த படுகொலைகளை ஒத்துக் கொண்ட வரலாறு உண்டா??
புலிகளுக்கு வக்காலத்து வாங்கி எழுதி வருபவர்களுக்கு இன்றைய (16.02.2009) ஐ நா அமைப்பின் அறிக்கையாவது உண்மைகளை உணர வைத்திருக்குமா?? ஐ நா அமைப்பின் உத்தியோகத்தர்களைக் கூட தமது படையணியில் புலிகள் பலாத்தகாரமாக சேர்த்திருப்பதோடு 14 வயதுச் சிறுவர்களைக் கூட போர் புரிவதற்கு கடத்தியிருக்கின்றார்கள். அத்துடன் தம்மை மீறி வெளியேறும் மக்களை புலிகள் சுட்டுக் கொல்வதை ஐ நா அமைப்பே இன்று ஆதாரத்தோடு சுட்டிக் காட்டியுமுள்ளது. இவற்றை எனியாவது புலிகளிடம் பணம் பெற்று குரல் கொடுக்கும் தமிழக அரசியல்வாதிகள் உட்பட புலத்தில் புலிகளை வைத்து பிழைப்பு நடத்துவோர் மற்றும் புலிகளுக்கு வக்காலத்து வாங்குவோர் கண்டிக்க முன் வருவார்களா?? இல்லை மக்கள் அழிந்தாலும் பறுவாயில்லையென வழமைபோல் புலிப்புராணம் பாடுவதிலேயே பொழுதைப் போக்கப் போகின்றார்களா??

2.     puvanan on February 16, 2009 7:16 pm Edit This
யுத்தம் என்றால் என்ன என்பதை இனியாவது புரிந்து கொண்டு புலிகளை நோக்கி புலம் பெயர்ந்தவர்களின் போராட்டம் உடனும் தொடங்கவேண்டும். இலங்கை அரசு எமது எதிரி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் எதிரியை இவ்வளவு தூரம் யுத்தத்தில் வெல்லும் சூழ்சிலையை சந்தர்ப்பங்களை புலிகள் 1986 ம் ஆண்டே தொடக்கி வைத்து விட்டார்கள். சிவில் சமூகத்திடம் தமக்கு இரக்கமானவர்கள் நல்லவர்கள் என்ற இமேஜை தேடும் எண்ணமும் அதன் மூலம் மக்களிடையே தலைவர்களாக வேண்டும் என்ற நோக்கத்தில் இருப்பவர்களே அரசை நோக்கி கூக்குரல் இடுகிறார்கள். இப்படி கூக்குரல் இடுபவர்களிடம் புலியை எப்படி வெல்வது என்ற எந்த திட்டமும் கிடையாது.

3.     இந்தியன் on February 16, 2009 7:36 pm Edit This
/UN sheds responsibilities - NGO official [TamilNet, Monday, 16 February 2009, 18:01 GMT]
The UN said 15 of its local staff and 75 of their dependents were not allowed to leave the conflict area by the Tamil Tigers, who had forcibly recruited one of the UN staffers, reported AFP on Monday. “The UN for the first time openly acknowledges its agenda of withdrawing even the remaining few local staff from the conflict zone, completely shedding its responsibility of caring for the civilians trapped here,” said Velupillai Sivanadiyar, the president of the Tamils Rehabilitation Organisation (TRO), the only NGO working in Vanni. The latest UN stand implies that the apex security system of the world has written off the fate of more than 250,000 civilians to the discretion of Colombo’s encircling army of 50,000, a ratio of 1:5.
The UN office in Colombo also accused the LTTE for preventing the civilians from escaping, shooting at the fleeing civilians and sometimes killing them, recruiting child soldiers as young as 14 years old and fighting from areas of civilian concentration causing death and injury to civilians. /– TAMILNET-16.02.09.-
NOT ONLY,UN sheds responsibilities,but also,LTTE’s PROPAGANDA MACHINERIES WERE ALSO(as expected)SHEDDING RESPOSIBILITIES ON LTTE.But it is easy for them,to compel the sympathetic Indians(Tamilnadu people)in a threatning manner, will be fruitful?.
காதில் பூ வைத்த இந்தியன்

4.     Thaksan on February 16, 2009 9:38 pm Edit This
புலிகள் ஒருபோதும் “புலிகளின் தாகம் தமிழ் மக்கள் விடுதலை” என்று கூறியதில்லை. நீங்களாக அவர்களின் வீரசாகசங்களை புகழ்ந்து ‘அது மக்களின் விடுதலைக்காகவே’ என்று எடுத்துக் கொண்டதற்கு புலிகள் என்ன செய்வார்கள்? குறளிவித்தை காட்டுபவன் சொல்லதுபோல் புலம்பெயர்நாட்டில் வருவாய்க்காக ‘இந்தா தமிழீழம் வருது> இன்னும் கொஞ்ச காசுதான் வேணும் மனம்சோராமல் போடுங்கோ.. ஜ.நா.தலையிடப்போகுது> இந்தியா மடங்கீட்டுது… வை.கோ புடுங்குறார்..திருமா அடுக்குறார்… புலி பதுங்கீட்டுது..இனி பாயுறதுதான் மிச்சம்… இன்னும் எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே…..? பரவாயில்லை…நீங்க காசைக் குடுங்கோ. குடுத்து பழகின கை தானே? குடுங்கோ. யார் யாரை கொன்றாலென்ன? வன்னியில(புலியிடம்) இருந்து தப்பி போகிற சனத்தை எப்பிடி அனுமதிக்கிறது? சூசைட் பாய்ந்து தடுக்க வேணும். சனம் என்ன சனம்…. வைக்க வேணும் வெடி. எங்கள நடுத் தெருவில விட்டுட்டு உங்களுக்கென்ன வாழ்க்கை வேண்டியிருக்கு? பிளேனால குண்டு போட ரன்வே இல்லாமல் எல்லாத்தையும் ஆமிகாரன் பிடிச்சுட்டான். ஆட்லறி அடிக்க றேஞ்ச் காணாது. அவ்வளவு கிட்ட வந்திட்டான். சூசைட் தான் உங்களுக்கு சரி. முடிஞ்சா தப்பிப்போங்கவன் பாப்பம்…

5.     palli on February 16, 2009 11:08 pm Edit This
எப்போதுமே விடுதலை போராட்டங்கள் மக்களுக்காகவே; அவர்கள் தேவை கருதியே அல்லது அவர்களது உனர்வுக்கு உள்ளடங்கியே இருக்க வேண்டும். ஒரு அமைப்பு சார்ந்தோ அல்லது ஒருதனிநபர் விருப்போ இர்க்ககூடாது. என்பதுக்கு எமது ஈழ போராட்டம் இனி வருங்காலத்தில் உலக நாடுகளுக்கு படிப்பனைவாக இருக்கட்டும்.

6.     உடும்பு on February 17, 2009 7:27 pm Edit This
திரு,பல்லி!, விடுதலைப்புலிகள், மக்களை பிரதிபலிக்கவில்லை என்று யார் சொன்னது!. இலங்கைத் தமிழர்களது, ஆசை அபிலாசைகளின் பிரதிபலிபே விடுதலைப்புலிகள். இது இரண்டு இனங்களுக்கிடையேயான பிரச்சனை இல்லை. தமிழ்நாட்டுக்கும் (தமிழர்கள்)- மளையாளிகளுக்கிடையேயான (கேரளா) பிரச்சனைப் போன்றது. புலிகள் அழிந்தாலும், இதனுடைய போக்கு (பொருளாதார அழிவு, உயிரழிவு போன்ற), குழிகளில் விழுவதும், எழுவதும் தொடர்ந்து பிரதியாக்கம் செய்யப்படும். இதற்கு ஒரே வழி, “பரிணாம வளர்ச்சியின் போக்கு” மாற்றப்பட வேண்டும்.

7.     palli on February 17, 2009 10:24 pm Edit This
உடும்பு இருக்கட்டும் இருக்கட்டும் ஆனால்
/இலங்கைத் தமிழர்களது, ஆசை அபிலாசைகளின் பிரதிபலிபே விடுதலைப்புலிகள்.//
அப்படி தறப்போது தெரியவில்லை. அதுக்கான காரனம் என்ன என்பது பல்லிக்கும் உடும்புக்கும் நன்றாகவே தெரியும். புலிகள் மீது மக்கள் அபிலாஸை கொள்வது தவறு.(அது பயத்தால் உருவாகுவது) மக்கள் தேவைமீது புலியல்ல எந்த அமைப்போ அல்லது அரசோ அபிலாசையல்ல கவனம் செலுத்தினாலே போதும் பல பிரச்சனை தீர்ந்துவிடும். இன்று மக்களுக்க புலிகளா?? அல்லது புலிகளை காப்பாற்ற மக்களா என்னும் நிலை வன்னியில் உள்ளதை சர்வதேசமே கவனிக்கிறது. இதுவரை புலிகள் தம்மைதாமே பாத்து கொள்கிறோம் மக்களை அரசின் இனஅழிப்பில் இருந்து சர்வதேசம் காப்பாற வேண்டுமென சொல்லியுள்ளனரா?? அல்லது சர்வதேசத்திடம் தாங்களாவது கேட்டார்களா?? உதாரனத்துக்கு தமிழ்செல்வன் இறுதி பேச்சுவார்த்தைக்கு ஜெனிவா வந்த போது அரசிடம் வைத்தை முதல் கோரிக்கை அரசு கருனாவின் ஆயுததை பறிக்க வேண்டும். அப்போதுதான் சமாதான பேச்சு தொடரும் என.இதில் கருனாவிடம் ஆயுதம் பறிப்பது புலிகளை பாதுகாக்கவா?? மக்கள் நலன் கருதியா?? இப்படி புலியின் பலவீனம் பலது உண்டு. காலம் வரும்போது தொடர்வோம்.
பல்லி.

8.     உடும்பு on February 18, 2009 8:18 am Edit This
பல்லி!,நீங்கள் கூறும் “பலவீனம்” என்ற வார்த்தைதான் எல்லாவற்றையும் கொண்டு செல்கிறது.பல வசூல் மன்னர்கள்,தற்போது தங்கள் கூடாரத்தை பாக்கிகளுக்கு கமிஷனுக்கு கொடுத்துவிட்டு “இந்தியாவுக்கு” இடம் பெயருகிறார்கள்,இதனால்தான் மெதுவாக “புலிகளை கைக் கழுவுகிறார்கள்”.இந்திய கோணத்தில் இது வருமானம்தான்,திருமாவளவன் போன்றவர்கள் இதைத்தான் பாதுகாக்கிறார்கள்.ஆனால்,இவர்களின் இந்திய சார்பான? அரசியல் அழுத்தம்,திருமாவளவனையும்,திரு.ப.சிதம்பரத்தின் செல்வாக்கையும் ஒரே தட்டில்வைத்து பார்க்கின்றன.புலிகளின் மீது வந்துள்ள இந்த புதிய எதிர்ப்புக்கு,மக்கள் நலம்பேண நினைக்கும் உங்களைப் போன்றோர் ம் உட்டுக் கொடுத்துவிடும் அபாயம் உள்ளது.

9.     palli on February 18, 2009 9:20 am Edit This
அரசை எதிர்பவர்கள்எல்லாம் புலி சார்பானவர்கள் என்னும் கருத்து தவறு. அதேபோல் புலிக்கு எதிர்கருத்து சொல்லும் நபர்களும் அரசின் இன ஒழிப்புக்கு சாதகமானவர்கள் அல்ல. அதுக்காகதான் பல்லி அடிக்கடி இரு மிருகத்திடமும் இருந்து மக்களை பாதுகாக்க வெண்டும் என சொல்லுகிறேன். திரும்பவும் சொல்லுகிறேன் புலி வெற்றி பெற்றால் எம்மை அழித்துவிடும். சிங்கம் வெற்றி கொண்டால் எம் குடும்பம் மட்டுமல்ல எம்து இனமே அழிந்து விடும். இது பல்லியின் தனி கருத்து.

10.   puvanan on February 18, 2009 10:00 am Edit This
புலி வெற்றி பெற்றால் எம்மை அழித்துவிடும். சிங்கம் வெற்றி கொண்டால் எம் குடும்பம் மட்டுமல்ல எம்து இனமே அழிந்து விடும். இது பல்லியின் தனி கருத்து.
எம்மை என்பவர் யார்? எம்மை என்பவர்களை புலி ஏன் அழிக்க வேண்டும்.? எம்மை எனப்படுபவர்கள் தமிழ் இனத்தவர்தானே? புலி அவர்களை அழிப்பது என்பது இன அழிப்பு இல்லையா? சிங்கம் அழித்தால்தான் அது இன அழிப்பா?
11.   உடும்பு on February 18, 2009 10:27 am Edit This
உலகில் வெளிச்சத்தில் வாழ விரும்பும் சாதாரண மக்களுக்காக “சட்டங்களை இயக்கிக் கொண்டிருக்கும்” நாடுகள் புலிகளை தடை செய்தது,இந்தப் பிரச்சனனையை வைத்து,தமிழர்கள் நிர்வகிக்கும் அமைப்புகள் பணம் பண்ணுவதும்(பலவீனம்),அவர்கள் இப்பிரச்சனையை பேண நினைப்பதையும் கண்டுப் பிடித்ததுதான்.நீங்கள் சொல்லும் இன அழிவு,புலிகளுக்கு முடிவுகட்ட,சிங்கள இனவாதம் ஒரு பெரிய அழிவு இயந்திரத்தை தமிழர்களுக்கு எதிராக உருவாக்கியிருக்கிறது,புலிக்கதை முடிந்தபிறகு “இந்த இயந்திரம்” தொடர்ந்து அதே வழியில் செல்லும்போது அதை தடுக்க ஆளிருக்காது என்ற வகையில் சரியானதுதான்.அதேபோல்,புலிக்கதை முடிந்த பிறகு,”பண்ம் பண்ணும் இயந்திரமும்),தனக்கு ஏற்படும் வெற்றிடத்தை நிறப்ப இன்னொரு முட்டாள் “தமிழினக் கூட்டம்” தேவைப்படும்,அதற்குதான் கூடாரம் இந்தியாவுக்கு இடம்மாறுகிறது.என்னுடைய தனிப்பட்ட கருத்து,இந்தியாவில் இவர்கள் நுழையாமலிருந்தால் சரி.தமிழ் நாட்டு கோணத்தில்,இப்பிரச்சனைக்கு ஓர் ஆதரவு உண்டு,அதை “பூஸ்ட் செய்கிறேன் பேர்வழி” என்ற பெயரில்,கடை விரிப்பது,பிரச்சனையின் தொடக்கமும்-முடிவும்தெரியாத ஆழ்ந்த இருட்டுக்குள் தள்ளி விடும்.

12.   ashroffali on February 19, 2009 8:03 am Edit This
திரு சோதிலிஙகத்தின் கருத்துக்களை வாசித்துப் பார்த்தபோது நடுநிலை என்ற பெயரில் கூடுதலான அளவில் அரச எதிர்ப்புக் கருத்துக்களையே முன்வைத்துள்ளார். மக்களை இடம் பெயர விடாது தடுத்து வைத்திருக்கும் புலிகள் பற்றிக் குறிப்பிட்டு விட்டு தொடர்ந்தும் அந்த மக்களை புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வாழ்வதற்கான விருப்பத்தை ஏற்படுத்தும் வண்ணமான பல கருத்துக்களையே அவரது கட்டுரை தாங்கியுள்ளது. அந்த வகையில் திரு சோதிலிங்கம் அவர்கள் சொல்ல வரும் விடயம் மிகத் தெளிவானது. என்ன நடந்தாலும் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் மக்கள் இருப்பது தான் அவர்களுக்குப் பாதுகாப்பானது இல்லாவிட்டால் இராணுவத்தினர் மக்களை அழித்து விடுவார்கள் என்பதாக வலியுறுத்த முற்படுகின்றார். அதற்கான வாதங்களாக யாழ் மற்றும் மட்டக்களப்பு பிரதேசத்தில் நடைபெறும் காணாமல் போதல் சம்பவங்கள், தொண்டு நிறுவனங்களின் வெளியேற்றம், மக்களை தடுத்து வைத்திருப்பதற்கான முகாம்கள் என்பன பற்றி பூச்சாண்டி காட்டுகின்றார்.
உண்மையில் ஒரு ஊடகவியலாளன் என்பவன் தான் சார்ந்திருக்கும் கருத்தை மற்றவர்கள் மேல் திணிக்க முற்படாதவனாக, நடுநிலை நின்று கருத்துக்களையும் தகவல்களையும் தெரிவிப்பவனாக இருக்க வேண்டுமே தவிர ஊடக திணிப்பை மேற்கொள்ள முற்படக் கூடாது.ஆனால் திரு சோதிலிங்கம் அவர்களின் கட்டுரையானது வெறும் புனைவுகளின் அடிப்படையில் மேலோட்டமாக நடுநிலை சாயம் பூசிக் கொண்டு உள்ளார புலி ஆதரவை நோக்காகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை என்பது அதனை ஆழமாக வாசிக்கும் போது தெளிவாகின்றது.இவ்வாறான கருத்துக்கள் தான் புலிகளின் அராஜகங்களை கண்டு கொள்ளாமல் வாழப் பழகி வன்னி மக்களை இந்தளவு அவலத்திற்குள் கொண்டு தள்ளக் காரணமாக அமைந்துள்ளது.எனவே வன்னி மக்களின் உண்மையான நலனில் அக்கறை கொண்டுள்ளவர்கள் நடுநிலை நின்று உண்மையான செய்திகளை வழங்க வேண்டுமே தவிர புலிகளின் போலியான பிரச்சாரங்களை வழங்க கூடாது.
//முல்லையில் 1000 பொது மக்களுக்கு மேல் உயிரிழப்பு - பெப்ரவரி 10 வரையான இவ்வாண்டின் கடந்த 40 நாட்களில் வன்னியில் கொல்லப்பட்ட பொது மக்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது//
வன்னி மீட்புக்கான மனிதாபிமான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்றுவரையான காலப்பகுதி வரை கூட மொத்தமாக ஆயிரம் மக்கள் பலியாகியிருக்க மாட்டார்கள். அப்படியிருக்க வெறும் நாற்பது நாட்களில் அவ்வாறான எண்ணிக்கை மரணம் சம்பவித்தது என்பது அப்பட்டமான பொய்யாகும். அதுவும் தவிர இவ்வாறான மரணங்களின் எண்ணிக்கை பற்றி எந்த ஆதாரத்தை வைத்து இவர்கள் எண்ணிக்கையை கணிப்பிடுகின்றார்கள் என்பது தான் எனக்குப் புரியவில்லை. குறைந்த பட்சம் செஞ்சிலுவைச் சங்கத்தை தொடர்பு கொண்டாலே கூட உண்மை நிலைமையை தொரியப்படுத்தக் கூடும். அதை விட்டு எந்த ஆதாரமும் இல்லாமல் தெரிவிக்கப்படுகின்றது, அஞ்சப்படுகின்றது போன்ற மொட்டையான வார்த்தைகளே இவர்களின் அப்பட்டமான பொய்ப்பிரச்சாரத்தை தோலுரித்துக் காட்டுகின்றன. வன்னியில் உள்ள மக்களின் இழப்பு பற்றி இவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை வைத்துப் பார்த்தால் கடந்த சில மாதங்கள் வரையான காலப் பகுதிக்குள் வன்னியில் சிக்கியுள்ள மக்கள் அனைவரும் கொல்லப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் ரொக்கட் வேகத்தில் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாயின் வன்னியில் மக்கள் எஞ்சியிருக்க முடியாதல்லவா?
மறுபுறத்தில் புலிகளால் மக்கள் பலவந்தமாக தடுத்து வைத்திருப்பதை ஏற்றுக் கொள்ளும் திரு சோதிலிங்கம் அவர்கள் //அங்குள்ள மக்களில் பெம்பாலானவர்கள் விரும்பியோ விரும்பாமலோ புலிகளுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புபட்டவர்கள். இன்னுமொரு பகுதியினரது குடும்ப உறுப்பினர்கள் புலிகளின் உறுப்பினர்களாக உள்ளனர் அல்லது அவர்கள் மாவீரர் குடும்பத்தினராக உள்ளனர் அல்லது விடுதலைப்புலிகள் அமைப்பின் மிகநெருங்கிய அல்லது முக்கிய உறுப்பினர்கள் அல்லது தொடர்புடையவர்கள் இப்படியான புலிகளுடன் தொடர்புடையவர்களுக்கு யாழ் மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் கடந்த காலங்களில் அரசின் ஆதரவுடன் காணாமல் போகும் செயல்கள் நடந்தேறியுள்ளன இவற்றின் காரணமாக மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வர அஞ்சுகின்றனர். அந்த அச்சம் மிகவும் நியாயமானது. // எனும் கருத்தின் மூலமாக அந்த மக்களை தொடர்ந்தும் புலிகளின் பிடிக்குள்ளேயே வைத்திருக்க முயற்சிக்கின்றார். அப்படி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வர மக்கள் அஞ்சுவார்களாயின் உயிராபத்து மிக்க கடல் பயணங்கள் வழியாக வெளியேறி வரும் மக்களைப் பற்றி திரு சோதிலிங்கத்தின் கருத்து என்ன? அந்த மக்கள் வன்னி மக்கள் இல்லையா?
யாழ் மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களில் நாசகாரச் செயல்களை மேற்கொள்ளும் நோக்கில் ஊடுருவியிருந்த புலி உறுப்பினர்கள் தான் அண்மைக்காலங்களில் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட மக்கள் விசாரணையின் பின் விடுவிக்கப்பட்டுள்ளனர். புலி உறுப்பினர்கள் மட்டுமே தடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்படுகின்றனர். மற்றபடி புலிகள் செய்தது போன்று அந்த மக்களை ஒட்டுமொத்தமாக எதுவித விசாரணையுமின்றி ஈவு இரக்கமுமின்றி கொன்றொழித்து விடவில்லை.
அடுத்ததாக வன்னியிலிருந்து தொண்டு நிறுவனங்களின் வெளியேற்றம் பற்றியது. ஏற்கெனவே மூதூரில் தங்கியிருந்த தொண்டு நிறுவனமொன்றின் பணியாளர்களை புலிகளே படுகொலை செய்துவிட்டு அதனை அரசாங்கத்தை சிக்கலில் மாட்டி வைக்க உபயோகப்படுத்திய சம்பவத்தை அரசாங்கம் இலகுவில் மறந்து விடுவதாக இல்லை. அதன் காரணமாகவே வன்னியில் செயற்பட்ட நிறுவனங்களை நேர காலத்துடன் அங்கிருந்து வெளியேறுமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்தது.எனவே இந்த நிலைமையை வலிந்து ஏற்படுத்திக் கொண்டது புலிகள் தான்.
அடுத்த விடயம் திரு சோதிலிங்கம் அவர்களின் கட்டுரையில் குறிப்பிட்டிருந்த இடம் பெயர்ந்தவர்களுக்கான தற்காலிக நலன்புரி நிலையங்கள். அவை ஆகக் கூடியது சில மாதங்களுக்கு மட்டுமே செயற்படும். அதுவும் மீட்கப்பட்ட பிரதேசங்களில் கண்ணிவெடி அகற்றல் மற்றும் மக்களுடைய பாதிப்புகளுக்கு மீள் குடியேற்ற நிவாரணம் உள்ளிட்ட கொடுப்பனவுகளுக்கான ஏற்பாடுகள் அந்த மக்களின் வாழ்வாதாரத்துக்கான வசதிகள் என்பவற்றை ஏற்பாடு செய்வதற்காகவே அந்தக் காலகட்டம் செலவழிக்கப்படப் போகின்றது. மற்றபடி அதில் வேறொரு உள் நோக்கமும் இல்லையென அரசாங்கம் சர்வதேச மட்டத்தில் உறுதிமொழி அளித்த பின்பும் இன்னும் என்ன சந்தேகம்?

13.   palli on February 19, 2009 11:51 am Edit This
இதென்ன புன்னாக்குதனமான பேச்சு. நாம் என்ன சொல்லுகிறோம். புலி மக்களுக்கு நல்லது செய்கிறது எனவா சொல்லுகிறோம். புலி தனக்கு பிடிக்காதவை யாராக இருந்தாலும் கொல்லுகிறது. அதை பல பின்னோட்டத்தில் எழுதியுள்ளோம். அதுக்காக அரசு செய்யும் அட்டூழியத்துக்கு துணை போகவேண்டுமா ?? இது வரை (வன்னி மீட்ப்பு போரில்) புலிகள் 200 கூட இழக்கவில்லை ஆனால் மக்கள் 1000தாண்டி விட்டதாக நாம் சொன்னால் கணக்கு கேக்கிறியள். புலிக்கு மக்கள் பற்றி கவலையில்லை என்பது தெரியும். அகையால் அவர்களிடம் இருந்து நாம் மனிதாபமானத்தை பார்க்கவோ கேக்கவோ முடியாது. ஆனால் ஒரு மக்களால் தெரிவு செய்யபட்ட அரசு மக்கள் பாதுகாப்பில் கவனமில்லாமல் கண்மூடிதனமாக மக்கள் மீது தாக்குதல் நடத்தினால் அதை பார்த்து கொண்டு பல்லை காட்டுவதுக்கு தேசமும் வெறு சிலதளங்கள் போல் அரசின் கையை எதிர்பார்க்கவில்லை.
பல தடவை புலியின் விமானம் பறந்தபோது வாய்பாத்த அரசு இப்போது மக்கள்மீது சண்டிதனம் காட்டுகிறது. இது ஒருவர் தெருவில் யாருடனாவது தர்க்கபட்டு விட்டு அங்கு தன்னால் முடியாத சண்டிதனத்தை வீட்டில் வந்து தனது பெண்டாட்டி பிள்ளைகளிடம் காட்டுவது போல் இல்லையா?? இன்று இலங்கையில் நடப்பது கலப்படம் இல்லாத இனஅழிப்பு நடவெடிக்கைதான். புலியழிப்பல்ல. முல்லைதீவை அழித்தாலும் புலி இருக்கதான் செய்யும். அதன்பின் (ஆடினாகாலும் கொலை செய்த கையும் சும்மாவா இருக்கும்) வவுனியாவுக்கோ அல்லது கிழக்கோ சில வேளை வடக்காகவும் இருக்கலாம் ராணுவம் முன்னேறும். அரசின் சேவகர்கள் அங்கு புலி போனதை தாம் கண்டதாக அலறுவார்கள். மற்றபடி தேனாறு பாலாறு எல்லம் படாசாலை புத்தகத்துடன் சரி. கிட்லரின் நிலை பிரபகரனுக்கு மட்டுமல்ல மகிந்தாவுக்கும் உறுதியாக வரும் என்பதில் சந்தேகமே இல்லை.


No comments:

Post a Comment