சாதாரண மக்கள் தம்மை பாதுகாக்க கதியற்று வாழ்பவர்கள் மீதான வன்முறையை பார்த்துக்கொண்டிருக்கும் இலங்கை அரசு இன்னுமோர் இனப்படுகொலையை ஆரம்பித்து விட்டது.
தமிழ்பேசும் மக்கள் மீதான தாக்குதல்களை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். இஸ்லாமிய மக்களின் மீதான தாக்குதல்கள் இலங்கையில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலைகள் இருப்பதையே வெளிப்படுத்துகின்றன!
இலங்கையில் முஸ்லீம் ஒருவர் பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் காலத்திலேயே இலங்கையில் முஸ்லீம்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன!
கடந்த காலங்களைப்போல் அல்லாது இந்த முறை இஸ்லாமியர் ஒருவர் பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் அரசினாலேயே இஸ்லாமிய மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்வது இலங்கை அரசின் இனவாதப்போக்கின் அடக்குமுறையின் உச்சமேயாகும்.
இலங்கை அரசுக்கு இன்னும் ஆதரவு வழங்கிக்கொண்டிருக்கும் வெட்கம் கெட்ட இஸ்லாமிய அரசியல்வாதிகளும் இந்த இஸ்லாமிய மக்கள் மீதான தாக்குதலுக்கு உடந்தையானவர்களேயாகும்.
இலங்கை வரலாற்றில் சிறுபான்மையினருக்கு எதிரான பாரிய அளவில் திட்டமிடப்பட்டு தாக்குதல்களும் தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்ட இனப்படுகொலைகளையும் இலங்கை அரசு ஒப்பேற்றியுள்ளது வரலாற்றில் ஆட்சிக்குவரும் பெரும்பான்மை இன கட்சிகளும் ஜேவிபியும் சிறுபான்மை தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு உடந்தையாக இருந்துள்னர்.
பெரும்பான்மை இன கட்சிகள் குழுக்களையும் தனிப்பட்டவர்களையும் ஊர் சண்டியர்களையும் மதவாதிகளையும் பாவித்து அப்பாவி மக்கள் மீதான தாக்குதல்கள் கொள்ளைகளில் ஈடுபட்டு மக்களை சொல்லணாத்துயரங்களில் வீழ்த்துவார்கள், சிறுபான்மையிர் மீது செய்யும் அடக்கு முறைகளின் பின்னணியை அடிப்படையாக கொண்டு பெரும்பான்மை இன கட்சிகள் தாம் ஆட்சிக்கு வர பெரும்பான்மை இன மக்களின் வாக்குகளை உறுதிப்படுத்துவார்கள். ஆட்சிக்கு வந்த பின்னர் இலங்கையின் இனவாதக்கட்சி தலைவர்கள் மீண்டும் சிறுபான்மையினருக்கு எதிராக செயற்ப்படுவதையே தமது கொள்கையாக்குவார். இந்த அரசியல் இலங்கையில் தமிழ் மக்களுக்கு பாரிய நீண்டவரலாறாகி தமிழ் மக்கள் உணர்வற்ற நிலைக்கு கொண்டுவந்துவிட்டுள்ளது.
தமிழ் மக்கள் மீது நடைபெற்ற அத்தனை தாக்குதல்களின் போதும் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைகள் ஒவ்வொன்றின் போதும் இஸ்லாமிய தரப்பு தலைவர்கள் அரசுடன் இணைந்தே தாக்குதல்களையும் இனவாத இனப்படுகொலைகளையும் ஆதரித்தும் வந்துள்ளனர்.
மகிந்த அரசு ஆட்சிக்கு வந்த பின்பு உருவான பொதுபல சேனாவினால் நடாத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்களின் போது இவை ஒரு சிறு குழுக்களின் செயற்ப்பாடே என்றும் மதவாதிகளினால் நடாத்தப்படும் வன்முறைகள் என்றும் பல இஸ்லாமிய தரப்பு அரசியல்வாதிகள் வாதிட்டு அரசை பாதுகாத்துதிருந்தனர். இப்பிற்போக்கு சுய நல இஸ்லாமிய அரசியல்வாதிகள் இப்படியாக அரசை பாதுகாத்து பேசி பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி காய முன்பே இஸ்லாமிய தமிழர்களை கொலை செய்துள்னர்.
இது போன்ற இஸ்லாமிய மக்களை விற்கும் இஸ்லாமிய அரசியல்வாதிகளை தமிழ்மக்கள் கிழக்கில் மாகாண சபைத்தேர்தல் காலங்களில் நன்கு அடையாளம் கண்டு கொண்டுள்ளோம். இவர்களும் இஸ்லாமிய மக்களுக்கு ஆபத்தானவர்கள் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.
வரலாற்று தமிழ் இனப் இனப்படுகொலையின் உச்சத்தில் இலங்கையில் சிங்கள இனவாதிகளுடன் இணைந்து இஸ்லாமிய அரசியல்வாதிகளும் தமிழ் விரோத கருத்துக்களை பாராளுமன்றத்திலும் பொதுவிலும் வெளிப்படுத்தியும் வந்துள்ளனர்.
மேலும் பல இடங்களில் அரசுக்கு முண்டு கொடுக்கும் நடவடிக்கைகளையும் செய்துள்ளனர். இலங்கை தமிழ் மக்கள் புலம்பெயர் தமிழ் மக்கள் இந்திய தமிழ் மக்கள் இணைந்து இலங்கை அரசுக்கு எதிராக கொண்டு வந்த மனித உரிமைகள் மீறியதற்கான விசாரணையை கூட இஸ்லாமிய தரப்பினர் ஆதரிக்காது தமிழ் விரோத மனப்பானமையுடன் அரசுக்கு ஆதரவாக செயற்ப்பட்டனர் இதில் ரிச்சாட் பதியுதீன் உட்பட பல யுஎன்பி , எஸ்எல்எப்பி இஸ்லாமிய அமைச்சர்கள் எம்பிக்களும் அடங்குவார்கள்.
தமிழ் மக்களின் மீதான இனப்படுகொலையை அடுத்து இஸ்லாமிய தரப்பினர் மீது தான் தாக்குதல்கள் ஆரம்பிக்கும் என்ற எண்ணப்போக்கு முள்ளிவாய்க்கால் காலங்களிலேயே உச்சரிக்க தொடங்கிவிட்டிருந்தன அந்த காலங்களில் எல்லாம் அரசை பாதுகாப்பதிலேயே பல இஸ்லாமிய தரப்பு அரசியல்வாதிகளும் அதன் எடுபிடிகளும் முக்கிய அவதானமாக இருந்தனர்.
அது மட்டுமல்லாது இஸ்லாமியர்களை இனவாதிகள் குறிவைக்கிறார்கள் என்று எழுதிய கருத்து கூறியவர்களை எல்லாம் திட்டி தீர்த்தும் அவமதித்தும் நாம் எப்படி எம்மை பாதுகாப்பது என்று தெரியும் நீங்கள் பேசாமல் இருங்கள் எங்களை தமிழர்கள் என்று நினைத்து விடாதீர்கள் என்றெல்லாம் இணையத்தளங்களிலும் பத்திரிகைளிலும் அவமதித்தனர்.
இவர்களில் பெரும்பான்மையானோர் இஸ்லாமிய தரப்பு என்று கூறிக்கொண்டும் இஸ்லாம் என்ற சமயத்தின் அடிப்படையிலும் தாம் ஒன்றுபட்ட மக்கள் என்ற ஒரு அடிப்படையிலேயே மேலோட்டமாக தாம் மக்களின் பிரதிநிதிகள் என்ற நினைப்புடனேயே கருத்து வைத்த பல இஸ்லாமிய முன்னிலை உறுப்பினர்கள் இன்று இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடரும் வன்முறைகள் பற்றி வாய்பிளந்து நிற்கிறார்கள்.
தமிழர்கள் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல்எழுப்பியபோது இஸ்லாமிய தரப்பினர் அரசை பாதுகாத்தது போல் இருக்காமல் மனித உரிமைகளை மதிக்கும் மனிதர்களாக இனவாத அடக்குமுறை அரசுக்கு எதிராக குரல் கொடுப்போம்.
தமிழ்பேசும் மக்களாய் ஒன்றுபடுவோம்!
இதுவே ஒன்றுபட்ட வாழ்வுக்கு வழி!